'பைசன்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்- மாரி செல்வராஜ்
- தமிழ்நாட்டைக் கடந்து படத்தை கொண்டு செல்ல பொதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியது.
- துருவ் சொன்ன வார்த்தை எனக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட 'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் தொடர்பாக வெளியான போஸ்டர், பாடல்கள், டிரெய்லர் ஆகியவை ரசிகர்களை வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே, 'பைசன்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும் போது, படத்திற்கு 'பைசன்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டைக் கடந்து படத்தை கொண்டு செல்ல பொதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியது. என்னுடைய திரைக்கதை புத்தகத்தில் இன்னமும் 'காளமாடன்' என்றுதான் உள்ளது.
இந்த படம் மிகவும் கடினமான படம். இப்படத்திற்கு பெரிய உழைப்பு தரணும். நாட்கள் நிறைய ஆகும். மன உளைச்சல் வரலாம் என்பதால் துருவ் விக்ரமுக்கு சில டெஸ்ட் வெச்சேன். அதுல துருவ் விக்ரம் என்னை நம்பினார். பல பயிற்சிகளை மேற்கொண்டதில் காயம் பட்டது. அதுலயும் துருவ் விக்ரம் நம்பிக்கையா இருந்தார். அவர் கஷ்டம் படும் போது எல்லாம் சொல்வேன். வேண்டும் என்றால் விட்டுருலாம். அடுத்த கதை பண்ணலாம் என்று சொன்னேன். அதற்கு துருவ் விக்ரம், உங்க மேல நம்பிக்கை இருக்கு சார். உங்களை அப்பா மாதிரி பார்க்கிறேன் என்று சொன்ன வார்த்தை எனக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது. அதன்பிறகு இரண்டு பேர் போட்டி போட்டு கடின உழைப்பை கொடுத்து இருக்கோம். எனக்கு இந்த படத்தின் வெற்றி என்பதை விட துருவ் போட்ட உழைப்புக்கு இந்த படத்தின் மூலம் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தால் இந்த படம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ரொம்ப சந்தோஷம் படுவேன்.
என்னோட கரியர்ல அதிக உழைப்பும் யோசனையும் போட்டு எடுத்த படம் 'பைசன்' என்றார்.