சினிமா
ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர்

ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது

Published On 2021-04-29 13:31 IST   |   Update On 2021-04-29 13:31:00 IST
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. 

மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5  மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 



இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி தசரா பண்டிகையையொட்டி வெளியிட உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது, கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தின் வெளியீட்டை அடுத்தாண்டு ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

Similar News