சினிமா
தீபிகா படுகோனே

தீபிகா படுகோனேவிற்கு குறையும் விளம்பர வாய்ப்பு

Published On 2020-01-14 09:21 GMT   |   Update On 2020-01-14 09:21 GMT
மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால், தீபிகா படுகோனேவிற்கு விளம்பர வாய்ப்புகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் நடிகை தீபிகா படுகோனே பல்கலைக்கழகத்திற்கே சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், தாக்குதல் சம்பவத்துக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டத்திலும் கலந்துகொண்டார். தீபிகா படுகோனேவின் இந்த துணிச்சலை பலரும் பாராட்டினர். அதே நேரத்தில் பலர் தீபிகா படுகோனேவுக்கு எதிராகவும் குரல் எழுப்பினர்.

தீபிகா நடித்துள்ள ‘சப்பாக்’ படத்தின் விளம்பரத்துக்காக இப்படி செய்வதாக விமர்சித்தனர். அந்த படத்தை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டனர். இதன் காரணமாக தீபிகா நடித்த சப்பாக் திரைப்படம் வட இந்தியாவில் எதிர்பார்த்ததைவிட குறைந்த வசூலை பெற்றது. 

மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முன்பு மத்திய அரசின் புதிய திட்டத்துக்காக ஒரு விளம்பரப்படத்தில் தீபிகா படுகோனே நடித்துக்கொடுத்திருந்தார். மத்திய அரசுக்கு எதிராக தீபிகா மாணவர் போராட்டத்திற்கு சென்றதால், அந்த விளம்பர படத்தைக் கைவிட்டுவிட்டு வேறு நடிகையை வைத்து விளம்பரத்தை எடுக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.



சப்பாக் தோல்வி தீபிகா படுகோனேவுக்கு சிறு பின்னடைவாக இருந்தாலும், அவர் மனம் தளரவில்லை. ஆனால், அதே அளவுக்குத் திடமாக தீபிகாவை விளம்பரத்துக்குப் பயன்படுத்தும் நிறுவனங்கள் இல்லை. இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பொருட்களுக்கு தீபிகா படுகோனே பிராண்டு அம்பாசிடராக இருந்து வருகிறார். 

எண்ணற்ற டிவி விளம்பரங்கள், பொருட்களின் மீது அச்சடிக்கப்பட்ட படங்கள் என ஆலிவுட் சென்ற பிறகு தீபிகாவின் விளம்பர மதிப்பு உயர்ந்தது. தீபிகா நடித்த பல்வேறு விளம்பரங்கள் ஒரே நாளில் 11 மணிநேரத்துக்கும் மேலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு சாதனை படைத்தன. ஆனால் தற்போது சமுகவலைதளங்களில் சிலர், ‘தீபிகா இடம்பெறும் விளம்பரங்களின் பிராண்டுகளைப் புறக்கணிப்போம்’ என்று ஒரு பிரசாரத்தை தொடங்கினர். 

இதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்காக, சில விளம்பர நிறுவனங்கள் அடுத்த சில வாரங்களுக்கு தீபிகா நடித்த எந்த விளம்பர படத்தையும் ஒளிபரப்ப வேண்டாம் என்று முடிவெடுத்து, விளம்பர ஒப்பந்தங்களை மாற்றி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் தீபிகாவின் விளம்பர மதிப்பும் குறைய தொடங்கியுள்ளது.
Tags:    

Similar News