சினிமா
கீர்த்தி சுரேஷ்

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன் - கீர்த்தி சுரேஷ்

Published On 2019-12-25 08:10 GMT   |   Update On 2019-12-25 08:10 GMT
தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ், அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதாக கூறியுள்ளார்.
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடி (தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாரான படம்) படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் குடும்பத்தினர் முன்னிலையில் தேசிய விருதை பெற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- தேசிய விருது பெறுவது கனவு என்பதை தாண்டி இதை நான் அடைய வேண்டும் என ஆசைப்பட்டேன். இன்றைக்கு நடந்துள்ளது. ரொம்பவே சந்தோ‌ஷமாக உள்ளது. பலரும் தொலைபேசியில் எப்படி உணர்கிறீர்கள் என கேட்கிறார்கள். அதை எப்படி வார்த்தைகளால் சொல்ல முடியும். இங்கு வந்து வாங்கும்போது தான் அதை உணரமுடியும். அப்பா, அம்மா முகத்தில் சந்தோ‌ஷத்தை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

நான் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். எனக்கு வரும் கதைகளும் அப்படித்தான் இருக்கின்றன. ‘பெண்குயின்’, ரஜினி சார் படம், தெலுங்கில் 2 படங்கள் இருக்கிறது. அனைத்துமே வித்தியாசமாக அமைந்திருக்கிறது. அந்த படங்கள் வரும் போது, மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது தெரியும். சாவித்திரி அம்மாவுடைய வாழ்க்கை வரலாறு என்பதால் அவரைப் பற்றி நிறைய படித்தேன். படங்கள் பார்த்தேன். 



அதை புரிந்து உள்வாங்கி பண்ணுவது ரொம்பவே சிரமம். இயக்குநர் நாகி ரொம்பவே உதவியாக இருந்தார். சாவித்திரி அம்மாவுடைய பெண் சாமுண்டீஸ்வரியிடம் நிறைய பேசினேன். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்கு பின்னால், பெரிய மெனக்கெடல் இருக்கிறது. இன்னொருத்தருடைய கதாபாத்திரத்தில் நடிப்பதால், நமது மனதும் அதற்கு தகுந்தாற்போல் வலுவாக இருக்க வேண்டும்.

படம் முடிந்தவுடன், டப்பிங் பண்ணுவதற்கும் சிரமமாக இருந்தது. தெலுங்கில் தான் நடித்தேன் அந்த மொழி அவ்வளவாக தெரியாது. சாவித்திரி அம்மா மாதிரியே பேசுவதற்கு நிறைய நாள் டப்பிங் பண்ணினேன். இன்றைக்கு அந்த மெனக்கெடல் முடிந்து படம் வெளியாகி, வெற்றி பெற்று, தேசிய விருது வாங்கி இருக்கிறேன் என நினைக்கும் போது சந்தோசமாக இருக்கிறது. பெயருக்கு முன்னால் ‘தேசிய விருது பெற்ற’ என்ற வார்த்தையைப் பார்க்கும் போது ஒரு பக்கம் சந்தோ‌ஷமாக இருந்தாலும், இன்னொரு புறம் கூச்சமாகவும் இருக்கிறது”

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News