சினிமா
நடிகைகள் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்க கூடாதா?- கங்கனா ரனாவத்
ஹீரோக்களுக்கு இணையாக நடிகைகளும் சம்பளம் வாங்குவது குறித்து நடிகை கங்கனா ரனாவத் பட விழாவில் பேசியுள்ளார்.
இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இந்திய ஹீரோயின்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை அவர் தான். தமிழில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’யில் நடித்து வருகிறார். கங்கனா நடித்துள்ள பங்கா திரைப்படம் அடுத்த மாதம், குடியரசு தினத் தன்று ரிலீசாகிறது. இதில் அவர் ஜெயா எனும் கதாபாத்திரத்தில் கபடி வீராங்கனையாக நடித்துள்ளார்.
பங்கா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கங்கனா, சக நடிகைகள் டாப்சி, ஆலியா பட், சோனாக்ஷி சின்கா ஆகியோரை மறைமுகமாக தாக்கினார். “வெற்றிபெற்ற நடிகைகள் சிலர், ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின் சம்பளம் கேட்பது தவறானது என பேசியதாக நான் கேள்விபட்டேன். ஏனென்றால் ஹீரோக்கள் தான் படத்தின் வசூலுக்கு காரணம் என அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.
பெண்கள் நீங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என நீங்களே நினைக்காவிட்டால், யாராலும், எந்த படத்தாலும் உங்களை அதிகாரமிக்கவர்களாக மாற்ற முடியாது. ஆணுக்கு நாம் சமம் என நினைக்க வேண்டும். ஆண்களுக்கு எந்த விதத்திலும் நான் குறைந்தவள் இல்லை என ஒவ்வொரு பெண்ணும் தனக்கு தானே சொல்லிக்கொள்ள வேண்டும்’ என அவர் கூறினார்.
சமீபத்தில் பேட்டி அளித்த டாப்சி, ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் சம்பளம் கேட்பது தவறு என கூறியிருந்தார். அதேபோன்ற கருத்தை, ஆலியா பட்டும், சோனாக்ஷி சின்காவும் கூறியிருந்தனர். அவர்களைத் தான் பெயர் குறிப்பிடாமல் கங்கனா சாடியுள்ளார்.