சினிமா
சுரேஷ் காமாட்சி

சின்ன படங்களை சாகடிக்கிறார்கள்- தியேட்டர் அதிபர்கள் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

Published On 2019-11-14 07:12 GMT   |   Update On 2019-11-14 07:12 GMT
சின்ன படங்களுக்கு திரை அரங்குகள் கிடைத்தாலும் போதிய காட்சிகள் ஒதுக்கப்படுவதில்லை என தியேட்டர் அதிபர்கள் மீது பிரபல தயாரிப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரித்து, இயக்கி உள்ள படம் ‘மிக மிக அவசரம்‘. ஸ்ரீ பிரியங்கா, அரீஷ் குமார், சீமான், முத்துராமன், ஈ.ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை லிப்ரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 11-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படத்துக்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனால் சர்ச்சை உண்டானது. இதனைத் தொடர்ந்து திரையரங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று, தற்போது 125-க்கும் அதிகமான திரையரங்குகளில் நவம்பர் 9-ம் தேதி ‘மிக மிக அவசரம்‘ வெளியாகி உள்ளது.

இதற்காக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், திரையரங்க உரிமையாளர்களை மிகவும் பாராட்டியது ‘மிக மிக அவசரம்‘ படக்குழு. மேலும், படத்தை பார்த்த பிரபலங்களும் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே திரை அரங்குகள் கிடைத்தாலும் காட்சிகள் அனைத்துமே காலை 11:30 மணி, மதியம் 2:00 மணி காட்சிகளாக இருந்ததால், படக்குழு அதிர்ச்சியடைந்தது. 



இது தொடர்பாக ‘மிக மிக அவசரம்‘ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பதிவில், “கொடுக்கிற மாதிரி கொடுப்பாங்களே அப்படித் தான் ஆகிப் போச்சு. திரைஅரங்குகள் ‘மிக மிக அவசரம்’ படத்திற்குக் கிடைத்தது. காலை ஷோ, மதிய ஷோவா கொடுத்தா யார் சார் தியேட்டருக்கு வருவாங்க? நான் விஜய் சார், அஜித் சார் படமா பண்ணியிருக்கேன்? சின்ன படங்களை சாவடிக்கிறாங்க..” என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News