சினிமா
விஷால்

நடிகர் சங்க தேர்தலில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை- விஷால்

Published On 2019-11-10 11:55 GMT   |   Update On 2019-11-10 11:55 GMT
நடிகர் சங்க தேர்தலில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என நடிகர் விஷால் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பணிகள் சமீபமாக நடைபெறவில்லை என்ற காரணத்தை முன்வைத்து,  தமிழக பதிவுத்துறை சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது. இதனால், முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக நாசர், கார்த்தி உள்ளிட்ட முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, ‘சிறப்பு அதிகாரிக்கு ஒத்துழைப்பு அளிப்போம். ஆனால், நீதிமன்றத்தில் முறையிடுவோம்’ என்று குறிப்பிட்டனர்.

‘துப்பறிவாளன் 2’ படப்பிடிப்புக்காக லண்டனில் இருந்ததால், நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்தார் விஷால். ‘ஆக்‌ஷன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்காக சென்னை வந்திருந்தார் விஷால். அந்தச் சந்திப்பு முடிவடைந்தவுடன், விஷாலிடம் நடிகர் சங்க விவகாரம் தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த விஷால், நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு இடையே அரசாங்கத்தில் இருந்து சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் வரும்வரை சிறப்பு அதிகாரி கவனிப்பார் எனச் சொல்லியிருக்கின்றனர். நாங்கள் எந்த வகையிலும் தப்பு பண்ணவில்லை, யாருக்கும் கெடுதல் பண்ணவில்லை. இந்த வழக்குக்காக வீண் செலவு செய்யவில்லை. 

எங்களிடம் அவ்வளவு பணமுமில்லை. நாங்கள் செய்தது கட்டிடம் கட்டியது மட்டுமே. அதை, யார் வேண்டுமானாலும் போய்ப் பார்க்கலாம். நடிகர் சங்கத்தில் யார் வேண்டுமானாலும் கட்டிடம், கணக்கு வழக்குகளைப் பார்க்கலாம். ஏனென்றால், இணையத்தில் வங்கிக் கணக்குகளை வெளியிட்ட ஒரே சங்கம், நடிகர் சங்கம்தான். ஒரு நீதிபதியை தீர்ப்புக்காக நிர்பந்தித்து 10 லட்ச ரூபாய் அபராதம் கட்டினார் ஒரு நபர். அவருக்கு என்ன தேவை என்று எனக்குத் தெரியாது. 

கடந்த 3 ஆண்டுகள் எப்படி உறுப்பினர்களைப் பார்த்துக் கொண்டோமோ, அப்படித்தான் இனியும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தேர்தலை நடத்தினோம். விதிமுறைகளின்படியே தேர்தல் நடந்தது. எந்தவித விதிமுறையும் மீறப்படவில்லை. எப்போது வாக்குகளை எண்ணலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பு வந்து, வாக்குகள் எண்ணப்படும். அப்போது உறுப்பினர்கள் என்ன நினைத்துள்ளனர் என்பது தெரிந்துவிடும். சிறப்பு அதிகாரி நியமனம், ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று. அவர்களுக்கென்று விதிமுறைகள் இருக்கலாம். கடவுள் மாதிரி நீதிமன்றத்தை நம்புகிறேன். உண்மை வெல்லும்.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
Tags:    

Similar News