சினிமா
எஸ்.ஏ.சந்திரசேகர்

எல்லாவற்றுக்குமே எல்லை உண்டு - எஸ்.ஏ.சந்திரசேகர்

Published On 2019-11-09 11:07 GMT   |   Update On 2019-11-09 11:07 GMT
70வது படத்தை ‘கேப்மாரி’ என்ற தலைப்பில் இயக்கி இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், எல்லாவற்றுக்குமே எல்லை உண்டு என்று பேட்டியளித்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 70வது படமாக கேப்மாரி படத்தை இயக்கி இருக்கிறார். ஜெய், அதுல்யா, வைபவி சாண்டில்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டி:- 

புரட்சி இயக்குனர்கள் என்று பெயர் பெற்ற நீங்கள் ஏன் இளைஞர்களுக்கான படம் என்று மாறினீர்கள்?
இப்போது தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இதுபற்றி கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு செய்ததில் தியேட்டர்களுக்கு வருபவர்களில் 80 சதவீதம் பேர் இளைஞர்கள் தான். எனவே இளைஞர்களுக்கான படம் எடுக்க விரும்பினேன். அந்த இளைஞர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அப்டேட் செய்துகொண்டேன். புதிய இளைஞர்களின் படங்களையும் பார்த்து இந்த கதையை எழுதினேன். இளைஞர்களுக்கு இந்த படம் சில புரிதல்களை ஏற்படுத்தும். ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா போல இன்றைய இளைஞர்கள் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுகிறார்கள். எல்லாவற்றுக்குமே எல்லை உண்டு. எல்லை மீறும்போது ஏற்படும் பிரச்சினைகளும் சிக்கல்களுமே கதை. அறிவுரையாக இல்லாமல் சுவாரசியமாக சொல்லி இருக்கிறேன். 



கேப்மாரி என்ற தலைப்பு ஏன்?
ஆங்கிலேயர் காலத்தில் தொப்பியை மாற்றி மாற்றி போட்டு ஏமாற்றுபவர்களை கேப் மாறி விளையாடுபவர்கள் என்று அழைக்க தொடங்கி பின்னர் கேப்மாரி என்ற வார்த்தை கெட்ட வார்த்தை போல மாறிவிட்டது. ஒரு இளைஞன் 4 பெண்களுடன் விளையாடுகிறான் என்னும்போது இந்த தலைப்பு பொருத்தமாக இருந்தது. வாழ்க்கையை கொண்டாட்டமாக எடுத்துக்கொண்டு எதையும் எளிதாக எடுத்துக்கொண்டு வாழும் ஜாலியான பையன் கதாபாத்திரத்துக்கு ஜெய் பொருந்தினார். அவர் படத்துக்குள் வந்த பிறகு படமே எளிதாகி விட்டது. அதுல்யாவும் வைபவியும் கூட நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மூவரையும் வேலை வாங்கியது எனக்கு எளிதாக இருந்தது. காமெடி வேடத்தில் சித்தார்த் விபின் கலக்கி இருக்கிறார். படம் பார்ப்பவர்கள் 2 மணி நேரம் ஜாலியாக படத்தோடு ஒன்றி பார்க்கலாம். 
Tags:    

Similar News