சினிமா
விஜய்

பிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர ஐகோர்ட்டு அனுமதி

Published On 2019-10-22 09:20 GMT   |   Update On 2019-10-22 09:22 GMT
பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர செல்வா என்பவருக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது
‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ உருவாகியுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இதனிடையே உதவி இயக்குனர் கே.பி.செல்வா என்பவர், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு தடை கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கே.பி.செல்வா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.



இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. பிகில் கதைக்கு உரிமை கோரிய செல்வாவின் மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்தது செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர செல்வா என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் பிகில் படத்தின் வெளியீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதனால் பிகில் படத்திற்கு தடை எதுவுமில்லை என அட்லீ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News