சினிமா
தங்கர் பச்சான்

மக்கள் ரசனை மாறிவிட்டது..... நானும் மாறிவிட்டேன் - தங்கர்பச்சான்

Published On 2019-10-20 12:15 GMT   |   Update On 2019-10-20 13:24 GMT
மக்கள் ரசனை மாறிவிட்டது, ஆகையால் நானும் வேறுமாதிரி படம் எடுக்க வந்துவிட்டேன் என இயக்குனர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராக வலம் வருபவர் தங்கர்பச்சான். குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் மீண்டும் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்‘ என்ற படத்தின் மூலம் இயக்குநராகத் திரும்பியுள்ளார். இதில் தனது மகன் விஜித் பச்சானையும் நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். இந்தப் படத்தில் முனீஸ்காந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகிகளாக மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நடித்துள்ளனர். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகி ராம் மூவரும் வில்லனாக நடித்துள்ளனர். 

இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளது படக்குழு.தன் மகனை நாயகனாக அறிமுகப்படுத்துவது ஏன் என்று தங்கர்பச்சான் கூறியிருப்பதாவது: ‘’என் மகன் நாயகனாவார் என நினைக்கவில்லை. திடீரென்று நான் நடிக்கப் போகிறேன் என்றான். உடனே ‘நடிப்புக்கான பயிற்சிகளை எடுத்துட்டு வா’ என்று சொன்னேன். பைட், டான்ஸ், நடிப்பு என அனைத்தையும் கற்றுக்கொண்டான். அவனுக்காக எழுதிய கதை இது. முழுக்க காமெடியாக இருக்கிறதே என்று முதலில் தயங்கினான். ஹீரோவாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். காமெடி கேரக்டரில் நடிப்பதுதான் திறமை என்று நடிக்க வைத்தேன். வாழப் பணமில்லாமல் தவிக்கும் ஓர் ஏழைக்கும், பணமிருந்தும் வாழ முடியாமல் தவிக்கும் ஒரு பணக்காரனுக்கும் இடையில் நடப்பதுதான் கதை. 



இருவருக்கும் பணம் எதை கற்றுத் தருகிறது என்பதுதான் திரைக்கதை. இதில் ஏழையாக என் மகனும், பணக்காரராக முனீஸ்காந்தும் நடித்துள்ளனர். இந்தப் படம் வழக்கமான என் படம் மாதிரியே இருக்காது. என் படங்களில் போலீஸ் வந்ததில்லை. இந்தப் படத்தில் போலீஸ், கொலை, போதைப் பொருட்கள், கடத்தல், துரத்தல் என அனைத்துமே இருக்கும். இப்போது எல்லாம் கதையே இல்லாமல் படங்கள் வருகின்றன. மக்கள் ரசனையும் மாறியுள்ளது. ஆகையால், நானும் வேறுமாதிரி படம் எடுக்க வந்துவிட்டேன். அதைக் காட்டவே ‘டக்கு முக்கு டிக்கு தாளம்‘ எனப் பெயரிட்டுள்ளேன்’’. இவ்வாறு தங்கர்பச்சான் கூறியுள்ளார்.
Tags:    

Similar News