சினிமா
நாசர், விஷால்

நடிகர் சங்கம் சரிவர செயல்படவில்லை- நாசர், விஷாலுக்கு தமிழக அரசு நோட்டீஸ்

Published On 2019-10-08 07:05 GMT   |   Update On 2019-10-08 07:05 GMT
தென்னிந்திய நடிகர் சங்கம் சரிவர செயல்படவில்லை எனக்கூறி நாசர், விஷாலுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். நாசர், விஷால் தலைமையிலான அணி கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. 2018-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய தேர்தலை கட்டட பணியை காரணம்காட்டி தள்ளிப்போட்டார்கள். இந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி தேர்தலை நடத்த திட்டமிட்டார்கள். ஐசரி கணேஷ், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி நாசர், விஷால் அணியை எதிர்த்து களம் இறங்கியது. 

தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தேர்தல் முடிந்தும் கூட வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சங்கம் செயல்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் செயலாளர் விஷாலுக்கு பதிவுத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். 

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை ஏன் நியமிக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு பதிவுத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நடிகர் சங்க அலுவலகத்தில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் முதன்மை செயலாளர் கு.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நடிகர் சங்கத்தின் தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு இந்த நோட்டீசை அனுப்பி உள்ளார். 



அதில் கூறப்பட்டிருப்பதாவது:- நடிகர் சங்கத்துக்கான உங்களது நிர்வாக குழுவின் காலம் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத் துடன் முடிவடைந்து விட்டது. நடிகர் சங்க கட்டடம் கட்டுவதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்தலுக்கு எதிராக பதிவுத்துறைக்கு வந்த புகார் மீதான விசாரணை நடந்துவருகிறது. நடிகர் சங்கம் சரிவர செயல்படவில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன. எனவே நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை ஏன் நியமிக்க கூடாது?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதுபற்றி விஷால் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் பூச்சி முருகன் கூறியதாவது:- நடிகர் சங்கம் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்துகொண்டு தான் இருக்கிறது. படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 3 மாதங்களாக கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நலிந்த நடிகர்களுக்கும் நாடக கலைஞர்களுக்கும் ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. நடிகர்களுக்கு எழும் பிரச்சினைகளையும் பேசி தீர்த்து வருகிறோம். எனவே செயல்படவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. இதற்காக நீதிமன்றம் செல்வோம். அங்கு வெல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News