சினிமா
எஸ்.ஏ.சந்திரசேகர்

என் பெயரை கெடுக்கவே புகார் கொடுத்திருக்கிறார்கள் - எஸ்.ஏ.சந்திரசேகர்

Published On 2019-10-03 20:23 IST   |   Update On 2019-10-03 20:23:00 IST
பிரபல இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர், என் பெயரை கெடுக்கவே புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று கமிஷனர் அலுவலகத்தில் பேட்டியளித்துள்ளார்.
மணிமாறன் என்பவர் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது மோசடி புகார் ஒன்றை நேற்று முன் தினம் கமி‌ஷனர் அலுவலகத்தில் கொடுத்தார். எஸ்.ஏ.சந்திரசேகரின் கிரீன் சிக்னல் நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

2018-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகரின் தயாரிப்பில் டிராபிக் ராமசாமி என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தை கனடா நாட்டைச் சேர்ந்த பிரமானந்த் சுப்பிரமணியன் என்பவர் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை பெற்றிருந்தார்.

இதற்காக ரூ.20 லட்சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தமும் போட்டிருந்தார். ஆனால் ஒப்பந்தப்படி அடுத்த கட்ட பணத்தை பிரமானந்த் சுப்பிரமணியத்தால் தர முடியவில்லை.

பட வெளியீட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு படம் வேண்டாம் என்று சொன்னார். அதனால் வியாபாரம் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முடியாமல் தவறினோம். அப்போதெல்லாம் படம் வெளியிடும் தேதியை தயாரிப்பாளர்கள் சங்கமே முடிவு செய்ததால் பட வெளியீட்டை தள்ளி வைக்கவும் முடியாத நிலை.



இந்தநிலையில் படம் வேறு விநியோகஸ்தர்களுக்கு விற்கப்பட்டால் பணத்தை தந்துவிடுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரமாக இருந்ததால் படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் எஸ்.ஏ.சந்திரசேகர தமிழகமெங்கும் வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இதனால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்தார். ஆனால் இந்த படத்தை வாங்குவதற்கோ வெளியிடுவதற்கோ எந்த தொடர்புமே இல்லாத மணிமாறன் கமி‌ஷனர் அலுவலகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் பணத்தை ஏமாற்றிவிட்டார் என்று புகார் அளித்துள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் புகழை கெடுக்கவும், அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவும் திட்டமிட்டு செயலாற்றி இருக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் புகார் அளித்துள்ளார். மேலும் என் பெயரை கெடுக்கவே இதுபோல் புகார் கொடுத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

Similar News