சினிமா
மஞ்சு வாரியர்

நான் சாதிக்கு எதிரானவள்- மஞ்சு வாரியர்

Published On 2019-09-01 11:45 GMT   |   Update On 2019-09-01 11:45 GMT
தனுஷின் அசுரன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி உள்ள மஞ்சு வாரியர், தான் சாதிக்கு எதிரானவள் என தெரிவித்துள்ளார்.
மலையாளத்தின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர், தனுஷ் நடிக்கும் அசுரன் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதையொட்டி மஞ்சு வாரியர் அளித்த பேட்டி:- தமிழில் 1998ம் ஆண்டிலேயே சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நடிக்கவில்லை. 

மலையாளத்தில் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் அசுரன் தான் தமிழில் முதல் படம். தனுஷ் பல ஆண்டுகளாக எனக்கு நண்பர். வெற்றிமாறன் படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால் இந்த கதையை கேட்டவுடன் நடிக்க சம்மதித்து விட்டேன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் நாகர்கோவில் தான். எனவே தமிழ் நன்றாக பேசுவேன்.



அசுரன் படத்தில் நெல்லை மாவட்ட பின்னணியில் அந்த பகுதி கிராமத்து பெண்ணாக நடித்து இருக்கிறேன். வெற்றிமாறன் குழு அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் உதவியது. தனுசுடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம். எங்களுக்கு மகன்களாக கென், டிஜே இருவரும் நடிக்கிறார்கள். தமிழ், மலையாளம் இரண்டு சினிமாக்களுக்கும் இப்போது வித்தியாசம் இல்லை. இரண்டிலுமே கடுமையாக உழைக்கிறார்கள். 

நான் சாதிக்கு எதிரானவள். நடிக்க வந்த புதிதில் மலையாள சினிமாவில் நிறைய மஞ்சுகள் இருந்ததால் வாரியர் என்ற பெயர் சேர்ந்துகொண்டது. பல ஆண்டுகளுக்கு பின்னர் தான் அது சாதி பெயர் என்பது தெரியும். தவிர்க்க முடியாமல் இன்னும் தொடர்கிறது. 

தமிழில் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். எங்கள் மாநிலத்தில் இருந்து வந்த நயன்தாரா இங்கு நம்பர் ஒன் நடிகையாக இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சி. அவர் கடின உழைப்பாளி. லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு தகுதியானவர். எனக்கு போட்டி என்று யாரும் இல்லை. யார் இடத்தையும் பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் வரவில்லை.
Tags:    

Similar News