சினிமா
எம்.எஸ்.ராஜ்

தணிக்கை குழு மீது மெரினா புரட்சி பட இயக்குனர் புகார்

Published On 2019-08-20 10:03 GMT   |   Update On 2019-08-20 10:03 GMT
மெரினா புரட்சி படத்துக்கு தணிக்கை குழு வேண்டுமென்றே சான்றிதழ் தர மறுத்ததாக இயக்குனர் எம்.எஸ்.ராஜ் புகார் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து நடந்த இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தை மையப்படுத்தி மெரினா புரட்சி என்ற பெயரில் புதிய படம் தயாரானது. இந்த படத்தை எம்.எஸ்.ராஜ் டைரக்டு செய்தார். புதுமுகங்களும், போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களும் நடித்தனர். தணிக்கை குழுவினர், படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக சான்றிதழ் அளிக்க மறுத்தனர். 

கவுதமி தலைமையிலான மேல் முறையீட்டு குழுவும் தடை விதித்தது. இதனால் கோர்ட்டுக்கு சென்று அனுமதி பெற்று படத்தை இப்போது திரைக்கு கொண்டு வருகிறார்கள். இது குறித்து படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் கூறியதாவது:- “மெரினா புரட்சி படப்பிடிப்பை 2017 இறுதியில் முடித்து 2018-ல் தணிக்கை குழுவுக்கு அனுப்பினோம். ஆனால் படத்துக்கு சான்றிதழ் தர மறுத்து விட்டனர். 



இங்கிலாந்து, நார்வே, ஓமன் உள்ளிட்ட 11 வெளிநாடுகளில் தமிழர்கள் தன்னிச்சையாக படத்தை வெளியிட்டனர். சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளில் தணிக்கை சான்றிதழ் பெற்று திரையிட்டனர். இந்த ஆதாரங்களை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதையடுத்து ஐதராபாத்தில் நடிகை ஜீவிதா தலைமையிலான தணிக்கை குழு பார்த்து யு சான்றிதழ் அளித்தது.

அதன்பிறகும் அலைக்கழித்து 100 நாட்கள் கடந்த பிறகு சான்றிதழ் அளித்தனர். இதனால் எனக்கு ரூ.12 லட்சம் நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்பட்டது. படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News