சினிமா
சத்தியகலா

தொரட்டி பட நாயகி எங்கே?- போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-07-31 03:01 GMT   |   Update On 2019-07-31 03:01 GMT
‘தொரட்டி’ பட நாயகி எங்கே சென்றார்? என்று பதில் அளிக்குமாறு போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், பெருங்களத்தூரை சேர்ந்த ஷமன் மித்ரு என்பவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், ‘தொரட்டி’ என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து, அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளேன். இந்த படத்தில் கதாநாயகியாக பொள்ளாச்சியை சேர்ந்த சத்தியா என்ற சத்தியகலா (வயது 26) என்பவர் நடித்துள்ளார்.

படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, வருகிற (ஆகஸ்டு) 2-ந்தேதி திரைப்படம் வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இதற்காக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்க முடிவு செய்தபோது, கதாநாயகி சத்தியகலா மட்டும் வரவில்லை. அவரை அவரது தந்தையும், தந்தையின் 2-வது மனைவியும் சட்டவிரோதமாக பிடித்து எங்கோ அடைத்து வைத்துள்ளனர். 



இதுகுறித்து கோவை மாவட்டம், மகாலிங்கபுரம் போலீசில் கடந்த 25-ந்தேதி புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டுள்ள சத்தியகலாவை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த மகாலிங்கபுரம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘தந்தையின் கட்டுப்பாட்டில் தானே நடிகை உள்ளார். அவரை மீட்கக்கோரி மனுதாரர் எப்படி வழக்கு தொடர முடியும்?’ என்று கேள்வி எழுப்பினர். பின்னர், ‘சத்தியகலா தற்போது எங்கே உள்ளார்?’ என்று போலீஸ் தரப்பில் வருகிற 5-ந்தேதி பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News