சினிமா
சுஷ்மிதா சென்

மகளை தத்து எடுக்க 10 வருடம் போராடினேன் - சுஷ்மிதா சென்

Published On 2019-07-29 11:00 GMT   |   Update On 2019-07-29 11:00 GMT
எனது இரண்டாவது மகள் அலிஷாவை தத்தெடுப்பதற்காக நான் உச்ச நீதிமன்றத்தில் 10 வருடங்கள் போராடினேன் என்று சுஷ்மிதா சென் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து முதன் முதலில் உலக அழகிப்பட்டம் பெற்றவர் சுஷ்மிதா சென். மிஸ் பெமினா உள்பட நிறைய அழகி பட்டங்களை வென்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழி திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். நடிகை சுஷ்மிதா சென் திரைத்துறையை தாண்டி, சமூக பங்களிப்பிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவர் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த தத்தெடுப்பு குறித்த மாநாட்டில் சுஷ்மிதா சென் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் தத்தெடுப்பு நடைமுறைகள் கடினமாக இருப்பதால், அதனை எளிமைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

‘ஐதராபாத் தான் எனது தாய் வீடு. நான் இங்கு தான் பிறந்தேன். இந்த நகரத்தில் இருந்து தான் நான் முதன்முதலில் உலகத்துக்கு வந்தேன். எனவே எப்போது சந்தர்ப்பம் கிடைத்தாலும் நான் இங்கு வந்துவிடுவேன். அது எனது வீட்டுக்கு வருவதை போன்றது.



எனது வாழ்க்கையில் நிறைய ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிகழ்ந்தன. அவை அனைத்தும் நல்லதுக்கே. எதற்காகவும் நான் வருத்தப்பட போவதில்லை. எனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நான் அனுபவித்து மகிழ்கிறேன்.

எனது இரண்டாவது மகள் அலிஷாவை தத்தெடுப்பதற்காக நான் உச்ச நீதிமன்றத்தில் 10 வருடங்கள் போராடினேன். ஏனெனில் அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுக்க இந்திய சட்டம் அனுமதிக்க வில்லை. என்னை போன்ற ஒத்தக்கருத்துள்ளவர்களின் துணையோடு இந்த சட்டத்தை எதிர்த்து போராடி, அதனை மாற்றி எனது இரண்டாவது மகள் அலிஷாவை தத்தெடுத்தேன்.

தத்தெடுப்பு என்பது வயிற்றில் இருந்து வரும் உறவு அல்ல. அது மனதில் இருந்து வருவது. குழந்தை பிறப்பு என்பது தொப்புள்கொடி உறவு. ஆனால் தத்தெடுத்தல் என்பது பொதுநலன் சார்ந்தது. எனவே அரசுக்கு எனது வேண்டுகோள் என்ன வென்றால், இந்தியாவில் தத்தெடுக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இதை நான் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு துறைகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News