சினிமா
2 வாழைப்பழத்துக்கு ரூ.442 வசூலித்த ஓட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் - நடிகர் புகாரால் கலால்துறை அதிரடி நடவடிக்கை
நடிகர் சாப்பிட்ட 2 வாழைப்பழத்துக்கு ரூ.442 வசூலித்த ஓட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கலால்துறை அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளது.
பிரபல இந்தி நடிகர் ராகுல் போஸ் தமிழில் ‘விஸ்வரூபம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் ஒரு சினிமா படப்பிடிப்புக்காக சண்டிகர் சென்றிருந்தார். அங்குள்ள ‘மாரியாட்’ என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அங்கிருந்து சமூக வலைத்தளம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், ‘நான் தங்கியுள்ள ஓட்டலில் 2 வாழைப்பழங்களின் விலை ஜி.எஸ்.டி. வரியோடு சேர்த்து ரூ.442.50 என பில் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவன் தானா என்பது தெரியவில்லை’ என்று கிண்டலாக தெரிவித்திருந்தார்.
அவரது இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலானது. பலரும் ராகுல் பேச்சுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். அந்த வீடியோவில் ‘ஓட்டல் பில்லில் வாழைப்பழங்களுக்கு ரூ375 என்றும், ஜி.எஸ்.டி. ரூ67.50 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து வாழைப்பழங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்தது தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அதில், ‘பழங்கள் வரியில்லா வகையில் வருகின்றன. எனவே வாழைப்பழத்துக்கு எதற்காக ஜி.எஸ்.டி. வரி விதித்தீர்கள்?’ என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலால் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “வாழைப்பழங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்தது தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்தினரை நாங்கள் விசாரணைக்கு அழைத்தோம். ஆனால் அவர்கள் வரவில்லை. எனவே ‘ஷோகாஸ்’ நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். ஓட்டல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்” என்றார்.