சினிமா
சூர்யா

கல்வி கொள்கை பற்றி விமர்சனம்- நடிகர் சூர்யாவுக்கு ஆதரவும், எதிர்ப்பும்

Published On 2019-07-16 07:10 GMT   |   Update On 2019-07-16 07:10 GMT
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை பற்றி விமர்சனம் செய்த நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த சனிக்கிழமை சாலி கிராமத்தில் நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் ‘அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நீட் போன்ற நுழைவு தேர்வுகள் நடத்துவது ஏன்?’ என்று கேள்வியெழுப்பி நீட் தேர்வையும் விமர்சித்திருந்தார்.

சூர்யாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நடிகர் சூர்யா பேசியது வன்முறை தூண்டும் விதமாக உள்ளது என விமர்சித்தார். பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சூர்யாவிற்கு பதிலளித்தார்.



அதில் ‘அனைவருக்கும் நல்ல கல்வி, அனைவருக்கும் சமமாக கல்வி கொடுப்பதற்காக புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அதையும் எதிர்க்கிறார்கள்’ என்று குறிப்பிட்டு பேசிய அவர், கல்விக் கொள்கையைப் பற்றி தெரியாதவர்களும் பேசுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

நெல்லையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு விடம், நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், ‘கல்விக் கொள்கை குறித்து சூர்யா வுக்கு என்ன தெரியும்? எதை தெரிந்து கொண்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார். நன்கு தெரிந்துகொண்டு பேசுபவர்களுக்கு பதில் சொல்லலாம். எதையுமே தெரிந்துகொள்ளாமல் அரைவேக்காட்டுதனமாகப் பேசுவோருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என்று கடுமையாக பதில் அளித்தார்.

பா.ஜனதா, அ.தி.மு.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் அதே சமயம் சூர்யாவுக்கு ஆதரவாகவும் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ‘புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து நடிகர் சூர்யா பேசியதை நான் வரவேற்கிறேன்’ என்று தெரிவித்தார்.



நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், ’சூர்யா பேசியது அவருடைய அடிப்படை உரிமை. இதில் அரசியல் எல்லாம் நாம் பார்க்கக் கூடாது. நாங்கள் பல ஆண்டுகளாகப் பேசி வந்த கருத்தைத்தான் அவர் சொல்லியிருக்கிறார்.

பெரிய பெரிய நடிகர்களெல்லாம் கருத்து தெரிவிக்க பயந்துகொண்டு இருக்கும்போது சூர்யா பேசுவது குறித்து பெருமையும் மகிழ்ச்சியும்தான் அடைய வேண்டும். மானுட உரிமை யான கல்வியை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. சூர்யாவின் கேள்வியில் எவ்வளவு நியாயம் இருக்கிறது என நாம் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தார்.

சூர்யாவுக்கு நெருக்கமானவர்களிடம் சூர்யா பேசியது குறித்து கேட்டோம். அவர்கள் கூறியதாவது:- ‘சூர்யா எதையுமே பொத்தாம் பொதுவாக விமர்சிப்பவர் அல்ல. தனது அகரம் அறக்கட்டளை மூலம் நிறைய மாணவர்களை படிக்க வைக்கிறார். அரசு பள்ளிகளில் இருந்து உயர் கல்விக்காக வரும் மாணவர் களின் சூழ் நிலையை நன்கு உணர்ந்ததால் தான் இந்த குரலை எழுப்பினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜோதிகா இதே கேள்வியை எழுப்பினார். இதில் எந்த உள்நோக்கமோ, எதிர்கால நோக்கமோ கிடையாது. முழுக்க முழுக்க கிராமப்புற மாணவர்களின் எதிர்கால நலனுக்காக தான் அவர் பேசினார்’ இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
சூர்யா அரசியலுக்கு வருவாரா? என்று கேட்டதற்கு அவருக்கு அரசியல் ஆசை என்பது சுத்தமாக கிடையாது என்று பதில் அளித்தனர்.
Tags:    

Similar News