சினிமா
பவர்ஸ்டார் சீனிவாசன்

மிரட்டல் வழக்கு: பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு முன்ஜாமீன்

Published On 2019-07-03 06:13 GMT   |   Update On 2019-07-03 06:13 GMT
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பான வழக்கில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருச்சி மாவட்டம் மணப்பாறை போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு பவர் ஸ்டார் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘திருச்சியை சேர்ந்த வக்கீல் பாண்டி என்பவர் என் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆஜராகி வருவதாகவும், இதற்கான கட்டணத்தை அவர் கேட்டதற்கு நான் கொடுக்காமல் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் கூறும் வழக்கில் பெங்களூருவை சேர்ந்த மற்றொரு வக்கீல் ஆஜராகி வருகிறார். அதற்கான கட்டணத்தையும் நான் முறையாக செலுத்தி வருகிறேன். எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வக்கீல் பாண்டி புகார் அளித்துள்ளார். 



இதில் முன்ஜாமீன் கேட்டு ஏற்கனவே மனுதாக்கல் செய்தேன். ஆனால் அந்த சமயத்தில் என் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதால், அந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது. தற்போது மணப்பாறை போலீசார் என் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News