சினிமா

பொன்னியின் செல்வனை இணைய தொடராக்கும் சவுந்தர்யா

Published On 2019-01-31 09:09 GMT   |   Update On 2019-01-31 09:09 GMT
சோழர்களில் முக்கியமானவனும், ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் அருள்மொழிவர்மன் பற்றிய பொன்னியின் செல்வன் புத்தகத்தை தமிழில் இணைய தொடராக்கும் முயற்சியில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இறங்கியிருக்கிறார். #PonniyinSelvan
எழுத்தாளர் கல்கியின் அமர காவியமான `பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கவும் அதில் வந்தியத்தேவனாக நடிக்கவும் எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் என பலரும் விரும்பினார்கள். ஆனால் நிறைவேறவில்லை. இப்போது தான் இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரைப்படமாக இயக்க ஆரம்ப கட்டப் பணிகளில் இறங்கியிருக்கிறார். இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி ஒரு சரித்திர வலைத்தொடரை தயாரிக்க உள்ளார்.

இதுகுறித்து சவுந்தர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பல்லாண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரசின் காலத்தைப் பற்றி விறுவிறுப்பும் வீரமும், தொன்மையும், காதலும், நகைச்சுவையும் கலந்த காவியமாக இது இருக்கும். இந்த நாவலைப் படித்த நாள் முதலே எனக்கு இதைக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


இந்த தொடரைத் தயாரித்து கிரியேட்டிவ் ஹெட்டாகவும் பொறுப்பை மேற்கொள்கிறார் சவுந்தர்யா. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளராக இருந்த சூரியபிரதாப் இயக்கத்தில் உருவாகிறது தொடர். இதில் நடிக்கும் நடிகர்கள் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. டைம்ஸ் இன்டெர்நெட் நிறுவனம் வழியே தயாராகும் இந்த வெப் சிரீஸ் மட்டும் அல்லாமல், தமிழில் பல தொடர்களையும் தயாரிக்க உள்ளது. #PonniyinSelvan #SoundaryaRajinikanth #SuriyaPrathap

Tags:    

Similar News