சினிமா

கடத்தல்காரர்கள் என்னை ஜட்டியோடு உட்கார வைத்தார்கள் - பவர் ஸ்டார் சீனிவாசன்

Published On 2018-12-12 11:08 GMT   |   Update On 2018-12-12 11:08 GMT
ஊட்டியில் கடத்தல்காரர்கள் எனக்கு சாப்பாடு தராமல் ஜட்டியோடு உட்கார வைத்தார்கள் என்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். #PowerStar #Srinivasan
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை பெங்களூருவைச் சேர்ந்த ஆலம் மற்றும் அவரின் கூட்டாளிகள் சென்னையிலிருந்து ஊட்டிக்கு கடந்த 5-ந்தேதி கடத்தினார்கள்.

ஊட்டியில் பவர் ஸ்டாரின் மனைவி ஜூலியின் பெயரில் உள்ள வீட்டை எழுதித்தரும்படி பவர் ஸ்டார் சீனிவாசனையும், மனைவி ஜூலியையும் 4 நாட்கள் சிறைவைத்தனர். அவர்களிடமிருந்து தப்பிய பவர்ஸ்டார், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கடத்தல் கும்பலிடம் இருந்து ஜூலியை மீட்டு, ஆலம் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

பவர் ஸ்டார் சீனிவாசன் இந்த சம்பவம் குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

ஆறு ஆண்டுகளுக்கு முன், பெங்களூருவைச் சேர்ந்த ஆலமிடம் ரூ.1.25 கோடி வாங்கினேன். அந்தப் பணத்தில் 35 லட்ச ரூபாய் திரும்பக் கொடுத்துவிட்டேன். மீதமுள்ள ரூ.90 லட்சத்தை திரும்பக் கொடுக்கப்பதாகக் கூறியிருந்தேன். அதுதொடர்பான வழக்கு, பெங்களூரு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்தச் சமயத்தில்தான், பிரித்தி என்ற சினிமா பி.ஆர்.ஓ என்னிடம் சினிமா வாய்ப்பு இருப்பதாக போனில் பேசினார். அதை நம்பி, கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் உள்ள ஹோட்டலுக்கு 5-ந்தேதி காலை 11 மணி அளவில் சென்றேன். 210 நம்பர் அறைக்கு நான் சென்றபோது, அங்கு செல்வின் தலைமையில் சிலர் இருந்தனர். அவர்கள்தான் என்னை மிரட்டினர். ஆலம் என்பவரிடம் நான் வாங்கிய பணத்தை உடனடியாகக் கொடுக்கும்படி அவர்கள் எனக்கு டார்ச்சர் கொடுத்தனர்.

என்னுடைய பேன்ட், சட்டை மற்றும் இரண்டு செல்போன்களைப் பறித்தனர். ஜட்டியோடு உட்கார வைத்தனர். அன்றைக்கு முழுக்க எனக்கு சாப்பாடு தரவில்லை. 5-ந்தேதி மாலை ஒரு டீ மட்டும் வாங்கிக் கொடுத்தனர். பசிக்கிறது என்று கெஞ்சினேன். 6-ந்தேதி ஊட்டிக்கு காரில் கூட்டி சென்று ஆலத்திடம் ஒப்படைத்தனர். பின்னர் ஊட்டி ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு குடோனில் என்னை அடைத்து வைத்தனர்.

அப்போதும்கூட எனக்கு சரியாக சாப்பாடு தரவில்லை. என்னை அடைத்து வைத்திருந்தபோது 5 பேர் காவலுக்கு இருந்தனர். அவர்களின் கைகளில் கத்திகள் இருந்தன. தப்பி ஓட முயன்றால் சுட்டுவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டினர்.



6-ந்தேதி காலையில் இரண்டு இட்லியும், இரவு இரண்டு சப்பாத்தியும் மட்டுமே கொடுத்தனர். சரியாக சாப்பாடு கொடுக்காமல் என்னைச் சித்ரவதை செய்தனர். அடிக்கவும் செய்தார்கள். என்னைக் கடத்திய தகவலை என் மனைவி ஜூலியிடம் தெரிவித்தனர். அவரையும் ஊட்டிக்கு வரவழைத்தனர். ஊட்டியில் அவருக்கும் கடும் டார்ச்சர் கொடுத்தனர். எங்களிடம் சில கையெழுத்துகளை வாங்கினர்.

8-ந்தேதி என்னைக் கடத்திய தகவல் மீடியாக்களுக்கு தெரிந்துவிட்டது. இதனால் அவர்கள், என்னை விடுவித்தனர். அப்போதுகூட போலீசுக்குப் போனால், உன் குடும்பமே இருக்காது என மிரட்டி அனுப்பிவைத்தனர். ஊட்டியிலிருந்து சென்னைக்கு வந்ததும், நடந்த சம்பவத்தை போலீசாரிடம் கூறினேன். 10 ஆம் தேதி, போலீசார் மூலம் ஜூலியை மீட்டுவிட்டனர்”.

இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.
Tags:    

Similar News