சினிமா

அடையாறில் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய நடிகை காயத்ரி ரகுராமுக்கு அபராதம்

Published On 2018-11-26 01:50 GMT   |   Update On 2018-11-26 01:50 GMT
அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிவந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.3,500 அபராதம் விதித்தனர். #GayatriRaghuram #drunkendriving
அடையாறு:

பிரபல சினிமா நடன இயக்குனரான ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். நடிகையான இவர், நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் வசித்து வருகிறார். இவர், ‘சார்லி சாப்ளின்’, ‘விசில்’ உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். பல திரைப்படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக அடையாறை நோக்கி வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று அதிவேகத்தில் தாறுமாறாக வருவதை கண்ட போலீசார், அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் காரை ஓட்டி வந்தது நடிகை காயத்ரி ரகுராம் என்பது தெரிந்தது. கார் கண்ணாடியை கீழே இறக்கியதும் அவரிடம் இருந்து மதுபான வாடை வந்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரை காரில் இருந்து இறங்கும்படியும், மது போதையை கண்டுபிடிக்கும் கருவியில் மூச்சு காற்றை ஊதும்படியும் கூறினர்.

ஆனால் காரில் இருந்து இறங்க மறுத்த நடிகை காயத்ரி ரகுராம், போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் தான் குடிக்கவில்லை என்று கூறி அந்த கருவியில் ஊதவும் மறுத்தார். ஒருவழியாக அந்த கருவியில் மூச்சு காற்றை ஊதினார். அதில் காயத்ரி ரகுராம் மது போதையில் இருப்பது உறுதியானது.

போதையில் இருந்ததால் அவரை கார் ஓட்டவேண்டாம் என்று கூறிய போக்குவரத்து போலீசார், போலீஸ்காரர் ஒருவரை வைத்து காயத்ரி ரகுராமை அவரது காரில் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது வீட்டில் கொண்டுபோய் விட்டனர். பின்னர் அவரது காரை அபிராமபுரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினர்.

குடிபோதையில் காரை ஓட்டி வந்ததற்காக காயத்ரி ரகுராமுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.3,500 அபராதம் விதித்தனர். நேற்று காயத்ரி ரகுராம் அந்த அபராத தொகையை அபிராமபுரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் செலுத்திய பிறகு தனது காரை அங்கிருந்து எடுத்துச்சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #GayatriRaghuram #drunkendriving
Tags:    

Similar News