சினிமா

ஒரு ரூபாய் இழப்பீடு கோரி இயக்குனர் சுசிகணேசன் கோர்ட்டில் மனு தாக்கல்

Published On 2018-10-23 04:43 GMT   |   Update On 2018-10-23 04:43 GMT
இயக்குநர் சுசிகணேசன் மீது லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டை வைத்த நிலையில், அதில் உண்மை இல்லை என்பதை நிரூபிக்க ஒரு ரூபாய் இழப்பீடு கோரி சுசிகணேசன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #MeToo #SusiGaneshan
‘மீ டூ’  மூலம் பிரபல நடிகைகள், பாடகிகள் உள்ளிட்ட பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, பிரபல இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை சுசிகணேசன் மறுத்து உள்ளார். மேலும், தன் மீது அவதூறு பரப்பும் லீனா மணிமேகலைக்கு எதிராக அவர் ஏற்கனவே, சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் சுசிகணேசன் சென்னை பெருநகர உரிமையியல் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை லீனா மணிமேகலை கூறி உள்ளார். சுயவிளம்பரத்திற்காக பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்தி உள்ளார். இதன்மூலம் எனக்கு ஏற்பட்டுள்ள மனஉளைச்சல் மற்றும் பாதிப்புக்கு ந‌ஷ்ட ஈடாக ஒரு ரூபாயை உரிமையியல் சட்டத்தின் கீழ் வழங்க லீனா மணிமேகலைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறி உள்ளார்.



இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. தன் மீதான புகாரில் உண்மை இல்லை என்பதை நிரூபிக்கவே ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக சுசிகணேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #MeToo #SusiGaneshan #LeenaManimegalai

Tags:    

Similar News