சினிமா

பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு

Published On 2018-06-16 03:27 GMT   |   Update On 2018-06-16 03:27 GMT
பிரபல நடிகர்களான பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சல்மான் கான், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் உள்ளிட்டோர் மீது தனியார் நிறுவனம் வழக்கு பதிந்துள்ளது.
நடிகர்கள் சல்மான்கான், அக்‌ஷய்குமார், ரன்வீர்சிங், நடிகைகள் சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் ஆகியோர் கலை நிகழ்ச்சி நடத்த பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகர கோர்ட்டில் தனியார் நிறுவனம் ஒன்று நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

“அமெரிக்காவில் 100 ஆண்டு இந்திய சினிமாவை கொண்டாடும் வகையில் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்தோம். அதில் கலந்துகொண்டு நடனம் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த சல்மான்கான், பிரபுதேவா, அக்‌ஷய்குமார், ரன்வீர் சிங், நடிகைகள் சோனாக்சி சின்ஹா, கத்ரினாகைப் ஆகியோரை அழைத்து இருந்தோம்.

இதற்காக சல்மான்கானுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் முன்பணமாக வழங்கப்பட்டது. கத்ரினா கைப்புக்கு 40 ஆயிரம் அமெரிக்க டாலரும், சோனாக்சி சின்ஹாவுக்கு 36 ஆயிரம் அமெரிக்க டாலரும் கொடுத்தோம். மற்றவர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்போது சல்மான்கான் ஒரு வழக்கு காரணமாக அமெரிக்கா வர இயலாது என்று கூறியதால் நிகழ்ச்சியை இன்னொரு நாளில் நடத்த தள்ளி வைத்தோம்.



இதுவரை நிகழ்ச்சியை நடத்தி கொடுக்க அவர்கள் முன்வரவில்லை. அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்குவதற்காக பல தடவை தொடர்பு கொண்டும் அவர்களோடு பேசமுடியவில்லை. இன்னொரு கலை நிகழ்ச்சிக்காக அந்த நடிகர்-நடிகைகள், அமெரிக்கா வர இருப்பதாக கேள்விப்பட்டோம். எங்களை ஏமாற்றியதால் அவர்கள் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக தர வேண்டும்”.

இவ்வாறு மனுவில் குறிப்படப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News