இந்திய விற்பனையில் 1.5 லட்சம் யூனிட்கள்... தொடர்ந்து அசத்தும் டிவிஎஸ் ஐகியூப்..!
- டிவிஎஸ் நிறுவனம் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டிவிட இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது.
- இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐகியூப் மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து டிவிஎஸ் ஐகியூப் மாடல் விற்பனையில் இதுவரை சுமார் 1.5 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
2020 ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விற்பனை 89 சதவீதம் யூனிட்கள் மார்ச் 2023 இறுதியிலேயே நடைபெற்று இருக்கிறது. முன்னதாக 2023 நிதியாண்டிலேயே ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டிவிட டிவிஎஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது. எனினும், 3 ஆயிரத்து 346 யூனிட்கள் இடைவெளியில் இது தவறிவிட்டது.
டிவிஎஸ் ஐகியூப் மாடலில் ஸ்மார்ட் எல்இடி ஹெட்லைட், டிஆர்எல், ஹெச்எம்ஐ, கன்ட்ரோலர், 32 லிட்டர் ஸ்டோரேஜ், பாஸ்ட் சார்ஜிங், 7 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்ட டேஷ்போர்டு, டிவிஎஸ் ஸ்மார்ட் எக்சோ-னெக்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 145 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விலை ரூ. 98 ஆயிரத்து 564 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 08 ஆயிரத்து 690 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.