பைக்

ரூ. 75 கட்டணத்தில் எலெக்ட்ரிக் பைக் முன்பதிவு துவக்கம்

Update: 2022-08-12 08:43 GMT
  • டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிராடோஸ் மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
  • சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 75 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு கட்டணத்தை அதிரடியாக குறைத்து இருக்கிறது. அந்த வகையில் டார்க் கிராடோஸ் மாடலை முன்பதிவு செய்வோர் ரூ. 75 மட்டுமே செலுத்தினால் போதும். இந்த சலுகை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன் பின் முன்பதிவு கட்டணம் ரூ. 999 என மாறி விடும்.

இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தனது கிராடோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டாண்டர்டு மற்றும் கிராடோஸ் R என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 07 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


கடந்த மாதம் தான் டார்க் கிராடோஸ் மாடலுக்கான வினியோகம் இந்தியாவில் துவங்கியது. முதற்கட்டமாக 20 யூனிட்கள் டார்க் மோட்டார்ஸ் தலைமையகமான பூனேவில் வினியோகம் செய்யப்பட்டன. அம்சங்களை பொருத்தவரை டார்க் கிராடோஸ் இரு வேரியண்ட்களிலும் வேறுபடுகிறது.

இதன் R வேரியண்டில் 9 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 38 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 105 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதன் ஸ்டாண்டர்டு வேரியண்ட் 7.5 கிலோவாட் மோட்டார் கொண்டுள்ளது. இது அதிகபட்சம் 28 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுகத்தும். இந்த வேரியண்ட் மணிக்கு அதிகபட்சமாக 100 கிமீ வேகத்தில் செல்லும்.

இரு வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டு இருக்கும் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் முழு சார்ஜ் செய்தால் 120 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. தற்போது டார் கிராடோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் பூனே, மும்பை, டெல்லி, சென்னை மற்றும் ஐதராபாத் என ஐந்து நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது.

Tags:    

Similar News