ராசிபலன்
null

weekly rasipalan- மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

Published On 2025-08-17 11:06 IST   |   Update On 2025-08-18 15:19:00 IST
  • வார ராசிபலன்கள்
  • 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

மேஷம்

திட்டமிட்டு வெற்றி பெறும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும். கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனசில் கடனை கழித்து வாழ்க்கையை நடத்திய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும்.

கணவன்-மனைவி ஒற்றுமையால் மகிழ்ச்சி கூடும். ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்துக்களின் தீர்ப்பு சாதகமாகும். திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். தங்கம், வெள்ளி, அழகு, ஆடம்பரப் பொருட்கள் அதிகம் சேரும். காரியத்தடை, மன சஞ்சலம் குறையும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள்.

உங்களின் கவுரவம், அந்தஸ்து உயரும். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். மறுமணம் கைகூடும். ஸ்ரீ ரங்கநாதரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

வெற்றி மேல் வெற்றி தேடி வரும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் புதுனுடன் வெற்றி ஸ்தானத்தில் இணைந்து உள்ளார். தடைபட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியை தரும். எதிர்காலத் தேவைக்காக திட்டமிடுவீர்கள். மனவேதனை மாறும். வாழ்வில் மாற்றம் தரும் இடப்பெயர்ச்சி நடக்கும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம், வேலை மாற்றம் என அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப விரும்பத் தகுந்த மாற்றங்கள் நடக்கும்.

உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகி பாகப்பிரிவினை சுமூகமாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். காணாமல் போன பொருட்கள் தென்படும். கமிஷன் அடிப்படையான தொழிலில் லாபம் கூடுதலாகும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள்.

புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராகும். பயணங்கள் மிகுதியாகும். கணவர் மற்றும் பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிரம்பும். வீண் செலவுகளை குறைத்தால் மன அமைதி கூடும். மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். காதல் திருமணத்திற்கு சம்மதம் கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் கோ பூஜை செய்யவும்.

மிதுனம்

இழந்த இன்பங்களை மீட்டுப் பெறும் வாரம். தனஸ்தானத்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை இருப்பதால் இது லட்சுமி நாராயண யோகமாகும். இது உங்களுக்கு மங்களகரமான பலன்களை வழங்க கூடிய அமைப்பாகும். உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் நிறைவேறும்.

இது சமூகத்தில் பிரபலத்தை ஏற்படுத்தும் யோகமாகும். கலைத் துறையை சார்ந்தவர்களுக்கு மிகச் சிறப்பான காலமாகும். மனதில் சந்தோசமும் அமைதியும் குடிபுகும். நிகழ்கால, எதிர்கால தேவைகள் பூர்த்தியாக கூடிய வகையில் தாராள தன வரவு உண்டாகும். தங்கம், வெள்ளி, அழகு, ஆடம்பரப் பொருட்கள் அதிகம் சேரும்.

அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்வார்கள்.

அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் பலன் தரும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்துவீர்கள். புத்திர பிராப்தம் உண்டாகும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். புதன்கிழமை மகாலட்சுமி சமேத மகாவிஷ்ணுவை வழிப்பட்டால் மன நிம்மதி கூடும்.

கடகம்

உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும் வாரம். தன ஸ்தான அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று உள்ளார். வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்பீர்கள். தெய்வ நம்பிக்கை கூடும். குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்வீர்கள். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம். சமூக சேவைக்காக அதிக அலைச்சல் மிகுந்த பயணம் செய்ய நேரும்.

சிலர் வாடகைக்கு வசிக்கும் வீட்டை விலைக்கு வாங்குவார்கள். மனைவி மூலம் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். திருமணத் தடை அகலும். கலப்பு திருமணங்கள் அதிகம் நடக்கும். நோய்கள் தீரும். வைத்தியச் செலவு குறையும். சரபேஸ்வரரை வழிபட தன் நிறைவும் நிலையான நிம்மதியும் உண்டாகும்.

சிம்மம்

சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் ஆட்சி பெற்று கேது உடன் இணைகிறார். இது கிரகண தோஷ அமைப்பாகும். பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. அடிக்கடி கை கால்களில் உடம்புகளில் வலி இருந்து கொண்டே இருக்கும்.

சிலருக்கு புனித தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் ராகு, கேதுக்கள் எதிர்பாராத சறுக்கலையும் ஏற்படுத்தும், வீண் பழிக்கு ஆளாக நேரும் என்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது. பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

தொழிலில் வெற்றியும், மேன்மையும் லாபமும் உண்டாகும். தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும். சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு வேலை மாற்றம் செய்வது நல்லது. காது, மூக்கு தொடர்பான நீண்ட நாள் பிரச்சிினைகளுக்கு அறுவை சிகிச்சையில் தீர்வு கிடைக்கும். காலதாமத திருமணம் நல்லது. சிவ வழிபாடு செய்தால் சுப பலன்கள் இரட்டிப்பாகும்.

கன்னி

சுப பலன்கள் நடக்கும் வாரம். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். மனம் விரும்பும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். புதிய தெம்பு மற்றும் தைரியத்துடன் வீர நடைபோடுவீர்கள். நீண்ட காலமாக தொல்லை கொடுத்து வந்த குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும்.

பணக்கவலை குறையும். பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கடன்கள் தீர்ந்து மன அழுத்தங்கள் குறையும். கைநிறைய பணம் புரள்வதால் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். இல்லத்தில் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும்.

புது வீடு கட்டலாம். சுப விரைய செலவுகள் ஏற்படும். அரசு வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி தரும்.

முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அருளும் உண்டாகும். புத்திர பிராப்தம் கிடைக்கும். சிலர் கம்பெனி செலவில் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிட்டும். காதலர்கள் விட்டுக் கொடுத்து செல்லவும். உடல் ரீதியான மன ரீதியான சங்கடங்கள் குறையும். சிவனுக்கு பச்சை கற்பூரம் அபிசேகம் செய்து வழிபடவும்.

துலாம்

சகாயங்கள் நிறைந்த வாரம். லாப ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். தடைபட்ட பாக்கிய பலன்கள் சித்திக்கும். மற்றவர்களால் மதிக்கக்கூடிய நிலையை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். தொழில் விரிவாக்க கடனும் கிடைக்கும். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி பிரமாண்டமாகும்.

நல்ல வருமானம் வரும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். கடன் பெற்று அசையும், அசையாச் சொத்து வாங்குவீர்கள். பணியில் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற முடியும். உங்களை புண்படுத்திய சகோதர சகோதரிகள் மனம் திருந்துவார்கள்.

ஆரோக்கிய குறைபாட்டால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். வழங்குகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. 18.8.2025 அன்று மதியம் 2.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும். காதலர்கள் இடையே சிறிய தவறுகள் பெரும் கருத்து வேறுபாடுகளாக மாறும். ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட வளம் பெருகும்.

விருச்சிகம்

சுதந்திரமாக செயல்படும் வாரம். பொதுவாக ராசி மற்றும் லக்னத்தை எந்த கிரகமும் பார்க்காமல் இருப்பது நல்லது. ராசியை எந்த கிரகமும் பார்க்க வில்லை. எந்தக் மனபாரமும் இல்லாமல் சிந்தித்து நிதானமாக செயல்படுவீர்கள். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.

நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். துணிச்சல் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே நிலவிய சின்னச் சின்ன மன ஸ்தாபங்கள் முடிவிற்கு வரும். புத்திர பாக்கியம் தடைபட்டவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும்.

பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். திருமண வாய்ப்பு தேடி வரும். பிள்ளைகளுக்கு கல்வி ஆர்வம் கூடும். ஆயுள் பயம் அகலும். 18.8.2025 அன்று மதியம் 2.40 முதல் 20.8.2025 அன்று மாலை 6.35 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சுத் திறமையால் எதையும் சமாளிக்க முடியும். தேவையற்ற கோபத்தை குறைத்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. முருகன் வழிபாட்டால் ஏற்றமான பலன்களை அடைய முடியும்.

தனுசு

அனைத்து விதமான நற்பலன்களும் நடக்கும் வாரம். 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி பலம் பெறுகிறார். பலருக்கு புதிய தொழில் எண்ணம் வரும். வருமானம் பல மடங்குபெருகும். புதிய தொழில் துவங்கும் விருப்பம் உள்ளவர்கள் கணிதம் சார்ந்த தொழில்கள், வங்கி தொழில், ஜோதிடம், காலி நில விற்பனை, நடிப்பு தொழில், புத்தக விற்பனை, வெளிநாட்டு பொருள் இறக்கு மதி, கமிஷன் தொழில் செய்யலாம்.

வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும். பல வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். மறு விவாக முயற்சி வெற்றி தரும். வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். தந்தையுடன் நல்லுறவு ஏற்படும்.

நண்பர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். 20.8.2025 அன்று மாலை 6.35 முதல் 22.8.2025 அன்று காலை 12.16 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிர்ஷ்டத்தை நம்பி கால விரயம் செய்வீர்கள். உடல் நலமும் மனநலமும் பாதிக்கப்படலாம். பண விசயத்தில் யாரையும் நம்பாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும். வியாழக்கிழமை ஸ்ரீ சாய் பாபாவை வழிபடவும்.

மகரம்

திருப்புமுனையான சம்பவங்கள் நடக்கும் வாரம். ராசிக்கு புதன், சுக்ரன் பார்வை உள்ளது. அனைத்து முயற்சிகளும் வெற்றியாக அமையும். மனதில் தைரியம் குடிபுகும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் நட்பு கரம் நீட்டுவார்கள். வாழ்வின் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிப்பீர்கள். பொருளாதார பற்றாகுறை அகலும் பூர்வீகச் சொத்துக்களின் மூலம் வருமானம் கிடைக்கும்.

தவிர்க்க முடியாத சுப விரயங்கள் அதிகரிக்கும். தடை, தாமதம், இன்னல்கள் நீங்கி அற்புதமான சுப பலன்கள் நடக்கும். உடன் பிறந்தவர்களின் திருமணம், குழந்தை பேறு போன்ற கடமைகளை முன் நின்று நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். ஆன்லைன் சாதனங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். 22.8.2025 அன்று காலை 12.16 மணிக்கு சந்தி ராஷ்டமம் ஆரம்பிப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். தேவையற்ற எதிர்பார்ப்புகளைக் குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம். ஸ்ரீ கால பைரவரை வழிபடவும்.

கும்பம்

மேன்மையான எண்ணங்களும் சீரிய சிந்தனைகளும் பெருகும் வாரம். சம சப்தம ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி செய்வதால் முட்டுக்கட்டைகள் அகலும். முயற்சிகள் உடனே நிறைவேறும். புகழ், அந்தஸ்து கவுரவம் நம்பிக்கை, நாணயம் உயரும். உங்களின் முயற்சிக்கு வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.

இடமாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், வெளிநாட்டு வாய்ப்பு என்று நீங்கள் எதிர்பார்த்து காத்து இருந்த மாற்றங்கள் நடக்கும். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மைகள் தேடி வரும். வேற்று மத நம்பிக்கை கூடும். தம்பதிகள் ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தாலோ இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தலாம்.

சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும். திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். விற்காமல் கிடந்த முன்னோர்கள் சொத்து விற்பனையாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சி கைகூடும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் அகலும். சிலர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், போன்ற பாலிசி எடுப்பார்கள். தினமும் ஆதித்ய ஹிருதயம் படிக்கவும்.

மீனம்

தடைகள் விலகும் வாரம். அதிர்ஷ்டம் பற்றி கூறும் பஞ்சம ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சுக்கிரன் புதனுடன் இணைந்து நிற்பதால் திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தும். தடைகள் விலகி மன நிம்மதி கூடும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக செயல்படும். இதுவரை அரசுவழி ஆதாயம், உத்தியோகத்தில் இருந்து வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும்.

ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்து விடும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். அதற்கு தகுந்த வரவும் இருக்கும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முன்னோர்களின் பரம்பரை வியாதிகளின் பாதிப்பு இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தில், உணவு விசயத்தில் அக்கறையும் கவனமும் தேவை. கை, கால் முட்டி வலி வேதனைகள் குறையும். வைத்தியம் பலன் தரும். சகோதரர் வகையில் வரவு உண்டு. திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். கணவன்-மனைவி ஒற்றுமை கூடும். தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்கவும்.

Tags:    

Similar News