அழகான கன்னி ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த ஆங்கிலப் புத்தாண்டில் குருவின் சஞ்சாரம் ஏப்ரலுக்கு மேல் மிகச் சாதகமாக உள்ளது. சனி மற்றும் ராகு கேதுவினால் ஏற்படும் இன்னல்கள் குரு கடாட்சத்தால் மட்டுப்படும்.அனைத்து செயல்களிலும் துணிந்து செயல்பட்டு வெற்றி வாகை சூடுவர்கள். தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் உங்களை வந்து அடையும்.ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும். நினைத்த காரியங்கள் வெற்றியடையும். சுய முயற்சி, உழைப்பினால் அனைத்து விசயங்களையும் தெரிந்து கொண்டு தேவையானதை அடைவீர்கள்.
குருவின் சஞ்சார பலன்கள்
ஆண்டின் துவக்கத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால் விபரீத ராஜ யோகம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்ட பொருள், வருமானம் போன்றவைகள் கிடைக்கும்.வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். ஏப்ரல் 21, 2024-க்குப் பிறகு பாக்கிய ஸ்தானம் செல்லும் குருபகவான் 5-ம் பார்வையால் ராசியை பார்க்கிறார். 7-ம் பார்வையால் முயற்சி ஸ்தானத்தை பார்க்கிறார். 9-ம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கிறார்.இதனால் பய உணர்வு நீங்கும். மன சஞ்சலம் அகலும்.
ஆன்ம பலமும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.பாக்கிய பலன் மிகுதியாகும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முற்றுப் புள்ளியாகும்.உயர் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என அனைத்தும் சாதமாக உள்ளது.மறு திருமண முயற்சி பலிதமாகும். சுய விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் இருந்த நடைமுறை சிக்கல்கள் நீங்கும்.சிலர் சகோதர, சகோதரிகளுக்காக பணம் செலவு செய்ய நேரும்.வாழ்க்கை துணைக்கு விரும்பிய உத்தியோக உயர்வு உண்டு.
சனியின் சஞ்சார பலன்கள்
ஆண்டு முழுவதும் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பலம் பெறுகிறார். சனியின் 3-ம் பார்வை அஷ்டம ஸ்தானத்திலும் 7-ம் பார்வை 12-ம்மிடமான விரய ஸ்தானத்திலும் 10-ம் பார்வை சகாய ஸ்தானத்திலும் பதிகிறது.சொத்துக்கள் தொடர்பான முக்கிய விஷயங்களை பிறரை நம்பி ஒப்படைக்கக் கூடாது. தொழில் அபிவிருத்தி மூலம் வளர்ச்சி உண்டாகும். தொழில், வேலைக்காக அங்கும், இங்கும் அலைந்து, திரிந்த நிலை மாறி ஒரே இடத்தில் பணிபுரியும் நிலை உண்டாகும்.அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப் பீர்கள். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள்.
பூர்வீக சொத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.கலைப் பொருட்கள் சேமிப்பீர்கள். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். குழப்பங்கள் தீர்ந்து தெளிவான நிலை உண்டாகும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். புண்ணியத் திருத்தலம் யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும்.கை, கால் வலி, அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் வெறுப்பு மறையும்.
ராகு-கேது சஞ்சார பலன்கள்
ராசியில் கேது 7-ல் ராகு நிற்பதால் மன தடுமாற்றம் அதிகரிக்கும். இது வரையில் உண்டான வெற்றிகள் எல்லாம் தடைபட்டது போன்ற உணர்வு மேம்படும்.பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்று வாங்கலாம். தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியத்தை காப்பது நல்லது.
யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம், கூட்டு தொழில், நண்பர்களிடம் கவனம் தேவை. வாழ்க்கைத் துணை மூலம் நல்ல உறவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சனை யாக உருவாகும். முன்னோர் வழி நோய் தாக்கம் உருவாகலாம். புதிய கடன் உருவாக வாய்ப்புகள் அதிகம். அதனால் மன வருத்தப்படும் சூழ்நிலை உருவாகும்.இயற்கை உணவுகளை உண்பதால் ஆரோக்கியத் தொல்லைகளைத் தவிர்க்க முடியும்.
உத்திரம் 2,3,4
நன்மையும், தீமையுமற்ற வருடம். சிறிய முயற்சியால் வெற்றியும், சாதனையும் படைப்பீர்கள். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். நாள்பட்ட வியாதிகளின் தன்மை புரியும். எந்த முறை வைத்தியம் சிறந்தது என்று புரியும். குடிப்பழக்கம், போதைக்கு அடிமையானவர்கள் மருத்து உதவியில் சீராக வாய்ப்பு உள்ளது. கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே, தொழில் செய்து வருமானத்தை பெருக்குவார்கள்.
இழந்த வெளிநாட்டு வேலை மீண்டும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு ஆண் வாரிசு கிட்டும். காதல் காலை வாரும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உடன் பிறப்புகளுடன் இருந்த கோப தாபங்கள் மாறும். வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். நெருங்கிய சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.
அஸ்தம்
பாக்கிய பலன்களை அடையும் வருடம். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் தோற்றத்தில் மிடுக்கும், செயலில் வேகமும் அதிகரிக்கும். எதையோ இழந்தது போல் வருத்தப்பட்டுக் கொண்டு இருந்த உங்கள் வாழ்வில் புது வசந்தம் வீசப்போகிறது. உங்களை வாட்டி வதைத்த நோய் தாக்கம் குறையும். உங்கள் வாழ்க்கை நிலை உயரப்போகிறது. பிறந்த பலனை அடையப் போகிறீர்கள். வியாபாரத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகி லாபம் கூடும். உத்தியோகஸ்தர்கள் பாராட்டப்படுவார்கள். அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்க உகந்த காலம்.
உங்களின் புகழ், கவுரவம் உயரும். புதிய நட்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கணவன்-மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தினமும் சுந்தரகாண்டம் படிக்கவும்.
சித்திரை 1,2
இந்தப் புத்தாண்டில் அனைத்து தடைகளும் தகறும்.தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் பொற்காலம் என்று சொல்லக் கூடிய வகையில் முன்னேற்றமான, சிறப்பான நன்மைகளை அடையக் கூடிய நிலை உண்டாகும்.
அஷ்டம குருவின் தாக்கம் குறைந்த பிறகு. புதிய முதலீடுகளால் தொழிலில் ஏற்றம் காணலாம்.பதவி உயர்வு, வருமான உயர்வு உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் நடைபெறும். உங்கள் தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். சிலருக்கு மறுதிருமணம் நடக்கும். சொத்துக்களின் மதிப்பு உயரும். தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.
திருமணம்
கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்பட்டு இருப்பதால் ஜனன ஜாதகத்தில் மீனத்தில் உள்ள கிரகங்களின் வலிமையை பொருத்தே திருமண வாய்ப்பு கூடி வரும். திருமணத்திற்கு சாதகமான தசை புத்தி நடப்பில் இருந்தால் திருமணத் தடை அகலும். சிலருக்கு காதல் கலப்புத் திருமணம் நடைபெறும். ஏழாமிடமான மீனம் இரட்டை ராசி என்பதால் முதல் திருமணத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு மறு விவாகம் நடைபெறும்.
பெண்கள்
சர்ப்ப தோஷம் ஏற்படுவதால் ராசியில் கேது ஏழில் ராகு நிற்பதால் உங்களின் செயல்களில் சுயநலப் போக்கு உருவாகும். பேராசையால், முறையான திட்டமிடுதல் இன்மையால் குழப்பமான மன நிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். ஞாபக மறதி உண்டாகும். பய உணர்வு அதிகரிக்கும். குடும்பத்தில் அசாதரண சூழ்நிலை நிலவும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழல் வரும். திருமணம், குழந்தை பாக்கியம் தடைபடும். குழந்தைகளைப் பற்றிய கவலை உருவாகும். யோக மெடிடேசன், பிராணயாமம் போன்றவற்றால் மனதை சமப்படுத்த வேண்டும்.
வியாபாரிகள்
தொழில் அபிவிருத்தி உண்டாகும். தொழிலை தக்க வைத்துக்கொள்ள சில முதலீடுகள் செய்ய நேரிடும். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும்.கல்வி நிறுவனங்கள், நூல் வெளியீட்டாளர்கள், அச்சுத்துறை போன்ற தொழிலில் இருப்பவர்கள் பெரும் பலன் அடைவார்கள். ஏப்ரலில் ஏற்படும் குருப்பெயர்ச்சி வரை விரயங்கள் சற்று அதிகமாக இருக்கும். அதன்பிறகு விரயங்கள் அனைத்தும் சேமிப்பு, முதலீடாக மாறி உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும்.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகஸ்தர்கள் மற்றவரின் பணியையும் இழுத்துப் போட்டு வேலை செய்து பொருளீட்டும் நிலை உருவாகும். அரசுப் பணியாளர்கள் ஆதாயம் அடைவார்கள். சம்பந்தமில்லாத நபர்களின் குறிக்கீட்டால் மன சஞ்சலம் அதிகரிக்கும். கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் உள்ளதால் நண்பர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்கக் கூடாது.
அரசியல்வாதிகள்
ராசியில் கேது ஏழில் ராகு. நண்பர்கள் போல் நடித்து உங்களைப் பற்றிய ரகசியங்களைத் தெரிந்து கொண்டு உங்களை கவிழ்க்க முயலலாம் எனவே புதிய நண்பர்களிடம் கவனம் தேவை. அதே நேரத்தில் ஏழாமிடம் சமுதாய பழக்க வழக்கம் பற்றிக் கூறுமிடம் என்பதால் பொதுமக்களிடம் கவுரவம் பார்க்காமல் சகஜமாக பழகினால் தேர்தல் காலத்தில் அது ஓட்டாக மாறும்.
பரிகாரம்
வெற்றிலை, பாக்கு பழத்துடன் பாசிப்பயிறு பாயசம் வைத்து புதன்கிழமை இஷ்ட, குல தெய்வம், பெருமாளை வழிப்பட்டால் கவலைகள் தீரும்.