கன்னி ஆண்டு பலன் - 2026

2026 புத்தாண்டு ராசிபலன்

Published On 2025-12-23 17:03 IST   |   Update On 2025-12-23 17:04:00 IST

எதிலும் சிறப்பாக செயல்படும் கன்னி ராசியினரே...பிறக்கப் போகும் 2026 ஆம் ஆண்டு கன்னி ராசியினருக்கு இன்பத்தில் திளைக்கும் ஆண்டாக அமையப் போகின்றது. அடடா மழைடா அடை மழைடா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப கன்னி ராசி யினர் வீட்டில் பண மழை பெய்யும்.எதைப் பற்றியும் கவலைப்படாமல் கால, நேரத்தை வீணடிக்காமல் உழைப்பீர்கள். தடைபட்ட பணிகள் மளமளவென்று நிறைவேறும். புதிய தெளிவும், நம்பிக்கையும் உண்டாகும். தைரியசாலியாக இருப்பீர்கள். பயம் என்பதே இருக்காது.

குருவின் சஞ்சார பலன்கள்:

கன்னி ராசியினருக்கு 4,7ம் அதிபதியான குரு பகவான் ஜூன் 2, 2026 வரை பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.அதன் பிறகு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். இதுவரை சொந்த தொழில் நாட்டம் இல்லாத வர்களுக்கு கூட சுய தொழில் ஆர்வம் உருவாகும். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்து லாபம் ஈட்டும் மார்க்கம் தென்படும். பங்கு வர்த்தகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் துரிதமாகும் வருடம். கடுமையாக உழைப்பீர்கள். பல சிக்கல்கள், சங்கடங்களிலிருந்து விடுபடுவீர்கள். கடந்த கால கடன்களைத் தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.சுய ஜாதக ரீதியான திருமணத் தடை அகலும்.மறுதிருமணத்திற்கு நல்ல வரன் அமையும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும்.தொலைந்த கைவிட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். சிலருக்கு தாயார் மூலம் திரண்ட சொத்து அல்லது பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

சனியின் சஞ்சார பலன்கள்:

கன்னி ராசிக்கு 5,6ம் அதிபதியான சனி பகவான் ஆண்டு முழுவதும் ராசிக்கு ஏழாம் இடத்தில் நின்று கண்டகச் சனியாக பலன் தருவார். குருபகவான் கூட்டுத் தொழிலை தந்தால் கூட சுய ஜாதக ரீதியான தசாபுத்தி காலம் அறிந்து கூட்டு தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.தசா புத்தி சாதகமற்றவர்கள் நிதானமாக செயல்பட்டால் எதிர் விளைவுகள் வராது.மதிப்பு, மரியாதை கூடும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகமாகும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.தாராள தன வரவு ஏற்பட்டாலும் மிகைப்படுத்தலான சுப விரையமும் இருக்கும்.குரு பார்வை ராசிக்கு 7ம் இடத்தில் பதியும் காலகட்டங்களில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் இணையலாம். பிள்ளைகளுக்கு சாதகமான நேரம் இருப்பதால் கவலையின்றி இருக்கவும்.உயில் எழுத, திருத்தம் செய்ய உகந்த நேரம்.ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் அகலும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்:

தற்போது கோட்சாரத்தில் ராசிக்கு 12ம் இடத்தில் கேதுவும் 6ம் மிடத்தில் ராகுவும் சஞ்சரிகிறார்கள். டிசம்பர் 5, 2026 முதல் கேது பகவான் 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு செல்கிறார்.ராகு பகவான் 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்கிறார். எதிரிகளை வெல்லும் தைரியம் உண்டாகும். போட்டிப்பந்தயத்தில் வெற்றி உண்டாகும்.பாவம் புண்ணியம் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். உலக வாழ்வில் பற்றற்ற நிலையை அடையச் செய்யும் பக்தி மார்க்கத்தில் மனம் லயிக்கும். பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும்.இதனால் சிலருக்குக் காரியத்தடைகள், கால தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றி நிச்சயம். வரவும் செலவும் சமமாக இருக்கும். வீடு கட்ட போட்ட பட்ஜெட் எகிறும். புதிய கடன் தொகைக்காக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை அணுகுவீர்கள்.சிலருக்கு கண் சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகும். முன்னோர்களின் ஆசிர்வாதமும் வழிகாட்டலும் விரும்பிய மாற்றத்தை தரும் என்பதால் நம்பிக்கை மிக முக்கியம்.சிலர் கை இருப்பை செலவழித்து விட்டு கடன் வாங்க நேரிடலாம்.கலைத்துறையினர் கலை நிகழ்ச்சிக்காக வெளிநாட்டு பயணம் செல்லலாம். பிறரின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதால் மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க முடியும்.

உத்திரம் 2,3,4:

தடைகள் தகர்ந்து வெற்றி நடை போடும் வருடம்.லாப குருவால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மனதில் புதிய தெம்பு, தைரியம் குடி புகும். விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும்.குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். நேரம் காலம் சாதகமாக இருந்தாலும் எந்த செயலையும் பல முறை யோசித்து செயல்பட வேண்டும். சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதிலும் விருப்பம் கூடும். குடும்ப உறவுகளின் செயல்களில் நன்மை இருக்கும்.கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். இதுவரை சந்தித்த பிரச்சனைகள் பனி போல் விலகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். தடைபட்ட வாடகை வருமானம், குத்தகை பணம் வரத்துவங்கும்.முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து செயல்களும் வெற்றி வாய்ப்பை தேடித்தரும். சனிக்கிழமை நவகிரகங்களை வழிபடவும்.

அஸ்தம்:

பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும் வருடம்.குருவின் பார்வை 7ம் இடத்தில் உள்ள சனியின் மேல் பதிவதால் மனக் கவலைகள் அகலும்.லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டீர்கள்.வாழ்க்கையே போராட்டமாக இருந்த நிலை மாறும்.சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதி கூடும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். செலவுகள், விரயங்கள் குறையும். சேமிப்புகள் கூடும்.வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் குரு பகவானை சேரும்.தொழில் கடனை குறைக்க புதிய வழிபிறக்கும். தேவைக்கு பணவசதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும்.சிலருக்கு திருமணம் நடந்தாலும் குடும்பத்தினரின் விருப்பத்திற்காகவோ, மனதிற்கு பிடிக்காத தகுதி குறைந்த திருமணமாகவோ இருக்கும். ஒரு முக்கிய கோரிக்கைக்காக குல தெய்வத்திற்கு வேண்டுதல் வைப்பீர்கள். பங்கு வர்த்தகர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது அவசியம்.எதிரிகளின் கை தாழ்ந்து உங்கள் கை ஓங்கும்.வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும்.

சித்திரை 1, 2:

எதிர்பார்த்த முன்னேற்றங்களால் மகிழும் வருடம்.செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள்.வருமானம் உயர்வதால் உங்கள் சொல்வாக்கிற்கு மதிப்பு உயரும்.குடும்பத்தில் நிம்மதி நிறைந்திருக்கும். கடன் சார்ந்த பாதிப்புகள் குறையும்.அடமான நகைகளை மீட்கக் தேவையான பண உதவி கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். அழகு, ஆடம்பர நவீன பொருட்கள், தங்க, வெள்ளி நகை சேர்க்கை அதிகரிக்கும்.திருமணம், வீடு, வாகனம் என சுப செலவுகளும் ஏற்படலாம்.தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீடுகளால் சுப பலன் ஏற்படும். 7ம் இடத்தில் சனி பகவான் நிற்பதால் திருமண விஷயத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும்.கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும்.எல்லாம் முறையாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும். வாரம் ஒரு முறை விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும்.

பரிகாரம்: உங்கள் ஊரின் எல்லை தெய்வம் காவல் தெய்வங்களை வழிபட நினைத்ததை சாதிக்கக்கூடிய வல்லமை உண்டாகும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News