ரிஷபம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்
null

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026

Published On 2026-03-05 10:17 IST   |   Update On 2026-03-05 11:03:00 IST

ஆடம்பரமான ரிஷப ராசியினரே

தற்போது கோட்ச்சாரத்தில் ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். தனது 3ம் பார்வையால் உங்கள் ராசியை பார்க்கிறார். 7ம் பார்வையால் 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் 8ம் மிடமான ஆயுள் வம்பு, வழக்கு ஸ்தானத்தையும் பார்வை இடுவார்.

ரிஷப ராசிக்கு பாக்கியாதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியான சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது ரிஷப ராசிக்கு மேன்மையான பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் பொற்காலம் என்று சொல்லக் கூடிய காலம் கோட்ச்சாரத்தில் 3,6,11ம் இடத்தில் வருட கிரகங்கள் சஞ்சரிக்கும் காலமாகும். இப்பொழுது அந்த பொற்காலம் உங்களுக்கு ஆரம்பமாகி விட்டது. மகாலஷ்மி தாயார் உங்களுக்கு வேண்டிய வரத்தை அருள உள்ளார். எண்ணங்கள் விருப்பங்கள் லட்சியங்கள் கனவுகள் நிறைவேறும் காலமாகும். உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பட்டியலிட்டு ஒவ்வொன்றாக நிறைவு செய்து கொள்ளலாம்.

லாபச் சனியின் பொதுவான பலன்கள்

பொருளாதார நிலையில் மிக உன்னதமான நிலையை அடைவீர்கள். கடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கப்பெறு வீர்கள். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் நிம்மதி பெரு மூச்சு விடும் நேரம். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். இந்தக் கோட்ச்சார நிலவரம் பொருளாதார வளர்ச்சியையும் ஏற்றத்தையும் தரக்கூடிய அமைப்பாகும். பங்குச் சந்தை, லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் கூடும். மன நிம்மதியை குறைத்த கடன் பிரச்சனை ஓரளவு குறையும். கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். சிலருக்கு தாத்தா மூத்த சகோதர,சகோதரி மூலம் நிதி உதவி கிடைக்கலாம். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. எதிர்கால தேவைக்காக அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள்.

பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது மேன்மையான காலம். அதிகாரப் பதவிகள் தேடி வரும். மந்திரி பதவியை எதிர்பார்த்தவர்களுக்கு சட்டசபை பாராளுமன்றத்தில் நுழையும் வாய்ப்பு கிடைக்கும். ஆனந்தமான நேரமாகும். வெளி உலகத்திற்கும் , கட்சி மேலிடத்திற்கும் தெரியாத உங்கள் மக்கள் சேவை தெரியத் தொடங்கும். கட்சியின் உயர் பதவிக்கு தகுந்த நபர் நீங்கள் தான் என அறிந்து முக்கிய பதவிகளுக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். மேலிடத்தின் ஆதரவால் பொதுக் கூட்டம், மாநாடு நடத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பெறுவீர்கள். இந்த 2026ம் ஆண்டு தேர்தலில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடுவீர்கள். மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்க்க முனைப்பாக செயல்படுவீர்கள். உங்களின் பெயரில் இருந்த புகார் மனுக்கள், ஊழல், தேர்தல் வழக்குகள் அனைத்திலும் சாதகமாக தீர்ப்பு வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

சொந்த தொழில் ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கு விரும்பிய தொழில் வாய்ப்பு தேடி வரும். பல ரிஷப ராசியினர் புதியதாக தொழில் துவங்குவார்கள். புதிய தொழில், தொழில் கிளைகள், தொழில் விரிவு செய்ய ஏற்ற நேரம். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அரசின் திட்டங்கள், மானியம், உதவி தொகை தேடி வரும். தொழிலாளர்கள் நட்பு கரம் நீட்டி உற்பத்தியை பெருக்குவார்கள். தொழில் கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். புதிய தொழில் கூட்டாளிகள் , ஒப்பந்ததாரர்கள் கிடைப்பார்கள்.

சுயதொழில் செய்பவர்களுக்கு இது மிகப் பொன்னான காலம். முன்பு ஏற்பட்ட நஷ்டங்கள் இப்பொழுது பணமாக காய்க்கும். தாய் மாமன் அனுசரணையால் பூர்வீகம் தொடர்பான பல பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாகும். அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் உங்களை தேடி வரும். உங்களின் நீண்ட நாள் பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள். சிறு பிரச்சனைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் பகை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். தந்தையின் அன்பும் அனுசரனையும் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கிய குறைவு உங்களை கவலையில் ஆழ்த்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தந்தை மகன் உறவு சிறக்கும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி கிடைக்கும். பல தலைமுறையாக பித்ரு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதகத்தை சரிபார்த்து தில ஹோமம் செய்ய ஏற்ற காலம்.

மூன்றாம் பார்வை பலன்கள்

லாபஸ்தானத்தில் நிற்கும் சனியின் 3ம் பார்வை ராசிக்கு இருப்பதால் ஞாபக மறதி இருக்கும். அதனால் வேலையில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மந்த தன்மையோடு எதிர்மறை சிந்தனை ஏற்படும். வெளிநாட்டு வணிக, வேலை வாய்ப்பு கிடைக்கும். இளைய சகோதர வழியில் பொருள் உதவி வந்து சேரும். சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து நல்லிணக்கம் ஏற்படும். அதிக பணம் சம்பாதிக்கும் ஆர்வத்தில் சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயற்சிப்பார்கள். ஜனன கால ஜாதகத்தில் சுப யோக தசை நடப்பவர்களுக்கு கெளரவ பதவிகள் தேடி வரும்.

குல, இஷ்ட, தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். விமானம் மூலம் ஆன்மீகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு வரும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம். ஆன்மீக வாதிகள், குருமார்கள், துறவிகள் இவர்களின் ஆசி கிடைக்கும். பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் தலை தூக்கினாலும் முடிவு உங்களுக்கு சாதகமாகும். வாகனங்கள், போக்குவரத்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் நல்ல வேலை கிடைக்கப் பெறுவர். இரும்பு, எண்ணெய், விவசாயம். தொழில்கள் ஏற்றம் பெறும். தோல் உற்பத்தியாளர்கள் வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் நல்ல லாபம் பெறுவார்கள்.

ஏழாம் பார்வை பலன்கள்

சனியின் 7ம் பார்வை ராசிக்கு 5ம் மிடத்தில் பதிகிறது. 5ம் இடம் என்பது பதவி ஸ்தானம், புத்தி ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்தி கூர்மை, தெய்வ அனுகிரகம், அதிர்ஷ்டம் பற்றி கூறுமிடமாகும். பணம் எந்த வழியில் வருகிறது என்று இனம் காணமுடியாத வகையில் வந்து சேரும். உழைப்பும் முயற்சியும் உங்களுக்கு வெற்றி தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம். பங்குச் சந்தை ஆதாயம் பல மடங்கு கூடும். கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வியில் வெற்றி கிடைக்கும். பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவர்கள். உயர் கல்வி வாய்ப்புகள் தேடி வரும். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அரசுத் துறை சார்ந்த கல்வி பயிலும் வாய்ப்பும் கிடைக்கும்.

கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். வெளி நாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்படும். சாதகமற்ற தசாபுத்தி உள்ள சில குழந்தைகளின் நடவடிக்கைகள் மன வருத்தத்தை தரும் விதத்தில் இருக்கும். குழந்தைகளை கவனமாக பராமரிக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக சுதந்திரம் கொடுத்து அதற்காக பிறகு கவலைப்பட்டு பிரயோஜனம் இல்லை. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முன்னேற்றத்திற்கு அதிக செலவு செய்யும் நிலை உருவாகும். சிலருக்கு தலைவலி, நரம்பு தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும்.

பத்தாம் பார்வை பலன்கள்

சனியின் 10ம் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால் இன்சூரன்ஸ், ஏலச்சீட்டு, வங்கி டெபாசிட் முதிர்வு தொகை கைக்கு கிடைக்கும். லாட்ரி, ரேஸ், திடீர் அதிர்ஷ்டம், உயில் சொத்து தேடி வரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். ஜனன கால ஜாதகத்தில் சனி சுப வலு பெற்றவர்களுக்கு அதிக முயற்சி இல்லாமலே கமிஷன், தரகு போன்றவைகள் மூலம் பெரிய தொகை கிடைக்கும். வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகிய இரண்டும் தேடி வரும். புதிய பொறுப்புகள் வழங்கப்படும். மதிப்பு, மரியாதை சமூக அந்தஸ்து உயரும் . வேலைப் பளு குறையும். குறைந்த வேலை நிறைந்த ஊதியம் என உங்கள் வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

முன்னோர் வழி கர்ம வினை தாக்க நோய் ஆரம்பமாகும் அல்லது அதிகமாகும்.மேலும் சுகர் , பிபி, நீண்ட நாள், வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நோய், மூட்டு வழி, மூட்டு தேய்மானம் , மூட்டு அறுவை சிகிச்சை, உடல் வலி, கை கால் வலி, உடல் அசதி உருவாகும். ஜனன கால ஜாதகத்தில் அஷ்டம ஸ்தானத்தோடு சம்பந்தம் பெற்ற தசை நடந்தால் சட்ட விரோத செயல்களால் சிறை தண்டனை அனுபவிக்க நேரும். ஆயுள் தீர்க்கம். விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியான நேரம். பழைய விவசாய கடன் அல்லது வட்டி தள்ளுபடியாகும். விளை நிலங்களில் அமோக விளைச்சல் ஏற்பட்டு நல்ல வருமானம் கிடைக்கும். வருமானம் கிடைக்கும் போது தாராளமாக செலவு செய்யாமல் சேமித்து வைக்க வேண்டும்.

திருமணம்

திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடும். இதுவரை ஏதாவது காரணம் கூறி திருமணத்தை தள்ளியவர்கள் கூட திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள். மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமையும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவார்கள். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்து அவர்களுக்கு மறுவிவாகம் நல்லவிதமாக நடக்கும்.

பெண்கள்

பெண்களுக்கு இது மகிழ்ச்சியான காலம். உங்களிடம் விரோதமாக இருந்தவர்கள் கூட அன்பாக பேசுவார்கள். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய நகை, ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் சர்ச்சைகள் விலகும். லாப ஸ்தான பலத்தால் தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். புதிய சொத்துக்களின் பத்திரப் பதிவு நடக்கும். வழக்குகளில் வெற்றி உறுதி. பயணங்கள் மிகுதியாகும். வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.

பரிகாரம்

முன்னோர்கள் வழிபாடு தடை தாமதத்தை நீக்கும் சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது சனி பகவானின் நல்லருளை பெற்று தரும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News