சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்
நான்காமிடத்தில் சனி! நல்ல விரயங்கள் இனி!
சனியின் வக்ர காலம்!
19.6.2024 முதல் 4.11.2024 வரை மற்றும் 2.7.2025 முதல் 18.11.2025 வரை என்று இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார். இதன் விளைவாக வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறப்புகளின் இல்லத்தில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். அக்கம், பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட, புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.
விருச்சிக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 20.12.2023 அன்று 4-ம் இடத்திற்கு வருகிறார். இதை 'அர்த்தாஷ்டமச் சனி' என்று சொல்வார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை சகோதர, சகாய ஸ்தானத்திற்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் சனி. அவர் தன் சொந்த வீடான கும்பத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். தொழில் வளர்ச்சி பெருகும். பொருளாதார நிலை உயரும். தேவைக்கேற்ற பணம் வரும்!
டிசம்பர் 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு சனி வரப்போகின்றார். பலம் பெற்றுத் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கப்போகும் சனியால் நன்மைகளே உங்களுக்கு அதிகரிக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். கூட்டு முயற்சி யில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். தொழில்புரிபவர்கள் மாற்று இனத்தவரால் லாபம் காண்பர். இட மாற்றம், வீடு மாற்றம் நன்மை தரும்.
சனியின் பார்வை பலன்கள்!
உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை உங்கள் ராசியில் மட்டுமல்லாமல் 6, 10-ம் இடங்களிலும் பதிகின்றது. எனவே பொருளாதாரத்தில் தேவைக்கேற்ற பணம் வந்துகொண்டே இருக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலைகூட சிலருக்கு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இடமாற்றம், வீடு மாற்றம் அல்லாமல், உத்தியோக மாற்றமும் கூட வரலாம்.
சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் ஜீவன ஸ்தானம் புனிதமடைகின்றது. உங்கள் ஜாதகத்திற்கு யோகம் தரும் கிரகமாக சனி பகவான் விளங்குவதால் கவலைப்பட வேண்டியதில்லை. செல்வநிலை திருப்தி தரும். முன்னோர்கள் கட்டிவைத்த சிதிலமடைந்த கோவில்களை பழுதுபார்த்து உங்கள் பெயர் நிலைக்கும் விதத்தில் செயல்படுவீர்கள்.
சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் முத்தான தொழில்கள் வாய்க்கும் யோகம் உண்டு. முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். எதிரிகளின் பலம் குறையும். லாபத்தை வரவழைக்கும் விதத்தில் கையாள நண்பர்களும், மாற்று இனத்தாரும் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். வீடு, வாகனம் வாங்க கேட்ட சலுகைகளும், உதவிகளும் கிடைக்கும்.
சனியின் பாதசாரப் பலன்கள்!
செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது(20.12.2023 முதல் 21.2.2024 வரை) வீடு வாங்கும் யோகம் வந்து சேரும். வெகுநாட்களாக எதிர்பார்த்து வந்த காரியங்கள் ஒவ்வொன்றாக முடியும். பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. 'வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா?' என்று நினைப்பீர்கள்.
ராகு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)
பிள்ளைகள் வழியில் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். தொழில் வெற்றி நடை போடும். மங்கல ஓசை மனையில் கேட்பது மட்டுமல்லாமல் மழலையின் ஓசை கேட்கவும் வாய்ப்பு உண்டு. 'கூட்டு முயற்சியில் இருந்து விலகித் தனித்து இயங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உண்டு. இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்களும், ஆடம்பரப் பொருட்களும் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
குரு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)
இக்காலம் ஒரு பொற்காலமாகும். எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்ப முன்னேற்றம் கூடும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களாலும், உடன் இருப்பவர்களாலும் நன்மை கிடைக்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாகவும், வெளிநாடு சென்று பணிபுரிவது சம்பந்தமாகவும் எடுத்த முயற்சிகள் பலன் தரும். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும்.
குருப்பெயர்ச்சிக் காலம்!
சனிப்பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அதுமட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கு குரு செல்கின்றார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் நேரடிப்பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம் தான். தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் ஆதாயம் கிடைக்கும் நேரமிது.
மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது சுபவிரயங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் உருவாகலாம். கூட்டு முயற்சியிலிருந்து விடுபட நேரிடும். 'வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றலாமா?' என்று சிந்திப்பீர்கள்.
கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவல்களைக் கொடுப்பார்கள்.
ராகு - கேது பெயர்ச்சிக் காலம்!
26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றார்கள். இதன்விளைவாகப் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிட்டும். முன்னேற்றப்பாதையில் முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகிச்செல்வர். பணியாளர்களின் தொல்லை அகலும். பிள்ளைகள் வழியில் வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்து சேரும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் ஆரோக்கியம் சீராக வழிபிறக்கும்.
தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக்கொடுப்பர்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு!
சதுர்த்தி விரதமிருந்து ஆனைமுகப் பெருமானை வழிபட்டு வருவது நல்லது. சிறப்பு வழிபாடாக தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வராகி அம்மனை யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் வளர்ச்சியும் அதிகரிக்கும், யோக வாய்ப்புகளும் வந்து சேரும்.