மீனம் - ஆண்டு பலன் - 2026

2026 புத்தாண்டு ராசிபலன்

Published On 2025-12-23 17:24 IST   |   Update On 2025-12-23 17:25:00 IST

நல்ல உள்ளம் படைத்த மீன ராசியினரே எதிர்பார்த்த இலக்கை அடைய விரும்பும் மீன ராசியினருக்கு 2026ம் ஆண்டு செல்வாக்கை உயர்த்தி தரும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். விரும்பிய காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.பொறுப்புடன் செயல்படுவீர்கள் உங்கள் செயலிலும் பேச்சிலும் அறிவு மேம்படும்.

குருவின் சஞ்சார பலன்கள்

மீன ராசியின் அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியான குரு பகவான் வருடத் துவக்கத்தில் மே மாதம் வரை 4ம் இடத்திலும் ஜூன் மாதம் முதல் பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார். இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். வீடு, வாகன யோகம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.மனம் மகிழும் சம்பவம் நடைபெறும்.தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.உடன் பிறந்தவர்களுடன் தாய் வழிச் சொத்து விஷயத்தில் சிறு சலசலப்பு ஏற்படும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவதால் புத்திர பிராப்தம் உண்டாகும். அதிர்ஷ்டம் சார்ந்த ஆதாயம் உண்டாகும்.கடந்த கால கடன்கள், பிரச்சனைகள் எல்லாம் நிவர்த்தியாகும். உயர்கல்வி முயற்சி சாதகமாகும். வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படும்.சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும்.சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம் அல்ல.உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

சனியின் சஞ்சார பலன்கள்

மீன ராசிக்கு லாபாதிபதி மற்றும் விரயாதிபதியான சனிபகவான் ஜென்ம ராசியில் ஆண்டு முழுவதும் சஞ்சரிப்பார். புண்ணிய பலன்கள் நடக்கும்.மன வலிமை அதிகரிக்கும். திருமணத்திற்கு இந்த வருடம் நாள் குறிக்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். சிலர் வீட்டு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவார்கள். தனியார், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். பெண்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பார்கள். தாயின் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும்.சிலருக்கு பிள்ளைகள் மூலம் வீடு, வாசல் யோகம் உண்டாகும்.சிலருக்கு சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும்.சிலர் ஆன்மீகத்தை பயன்படுத்தி பொருள் சம்பாதிக்க முயலலாம். வெளிநாட்டில் வேலை பார்த்த சிலர் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விருப்பத்திற்காக வேலையை விட்டு தாயகம் திரும்புவார்கள். பலவீன மனத்தினர் சிலர் மாந்தரீகம், அருள் வாக்கு கூறும் இடம் என அலைந்து மன நிம்மதிக்கான மார்க்கத்தை தேடுவார்கள்.குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். பேச்சில் நிதானமும் பொறுமையும் அவசியம். ஜென்மச் சனி உள்ளதால் எதையும் பல முறை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.

ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்

2026ம் ஆண்டின் துவக்கத்தில் விரய ஸ்தானத்தில் ராகு பகவானும் ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் கேது பகவானும் நின்று பலன் தருவார்கள். டிசம்பர் 5, 2026 முதல் ராகு பகவான் லாப ஸ்தானத்திலும் கேது பகவான் பஞ்சமஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்கள்.ஜென்மச் சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் குரு பார்வை ராசிக்கு இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படாது.உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள்,ஒத்துழைப்பும் அமோகமாக அமையும்.தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும்.தாய், தந்தை பொருள் உதவி செய்து தொழில் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடைவீர்கள்.திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை நிறைவேற்றுதல் போன்ற சுப செலவு உண்டாகும்.பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகளால் மன அமைதி குறையும்.முன் கோபத்தில் பகைமை உருவாகும் என்பதால் பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். காரியத்தடையால் மன சஞ்சலம் அதிகரிக்கும்.

பூரட்டாதி 4

திருப்புமுனையான வருடம்.தொழில் முயற்சிகள் பலிதமாகும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் முன்னேற்றமடையும். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலை மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது.குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள்.பெண்கள் புதிய தங்க நகைகள் வாங்கி அணிவார்கள். திருமணத்தடை விலகி விவாகம் நடைபெறும். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். குடும்பத்தில் ஏதாவது செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த வருடம் திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும். மேற்படிப்பிற்கான முயற்சி கை கூடும். பெண்களுக்கு தாய்வழி ஆதரவும், சீதனமும் கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு தியாக மனப்பான்மை மிகுதியாகும். தத்தாத்ரேயரை வழிபட வளம் பெருகும்.

உத்திரட்டாதி

கடமைகள் நிறைவேறும் வருடம். ராசிக்கு சனி குரு சம்பந்தம் என கோட்சார கிரகங்கள் அனைத்தும் சாதகமாக உள்ளது.இதனால் ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும்.தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.வேலை பார்க்கும் நிறுவனத்தில் சில அசெளகரியங்கள் நடந்தாலும் முதலாளிக்காக நன்றியுடன் வேலை செய்வீர்கள். இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். திருமணத்தடைத் அகலும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும்.மூத்த சகோதர,சகோதரி சித்தப்பா மூலம் பொருள் உதவி கிடைக்கும்.சட்டச் சிக்கல் காரணமாக மன அமைதி குறையும் என்பதால் எந்த விதமான சட்டச் சிக்கலாக இருந்தாலும் நீதிமன்ற படி ஏறுவதை தவிர்த்து பேசித் தீர்க்க முயல வேண்டும். தினமும் மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சரபேஸ்வரரை வழிபடவும்.

ரேவதி

அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும் வருடம். தன் நிறைவும் நிலையான நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.சமுதாய அங்கீகாரத்தை அதிகரிக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும்.பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் மனதில் நிறைவும் நெகிழ்சியும் உண்டாகும்.கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனஸில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். சிலர் பணிச்சுமை அல்லது ஆரோக்கிய குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெறலாம். தடைபட்ட சுப காரியங்களும் முக்கிய பணிகளும் சுலபமாக நடந்து முடியும்.நவீனமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. சட்ட ரீதியான நெருக்கடிகள் நீங்கும். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப கிடைக்கும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சீராகும். வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபட சிறப்பான பலன் உண்டாகும்.

பரிகாரம்: வடைமாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட இனம் புரியாத அனைத்து பிரச்சனைகளிடம் இருந்து விடு படுவீர்கள்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News