மீனம் - ஆண்டு பலன் - 2026

2025 புத்தாண்டு ராசிபலன்

Published On 2025-01-01 09:57 IST   |   Update On 2025-01-01 09:58:00 IST

ராகு-கேது பெயர்ச்சி அதிர்ஷ்டம் தரும் மீன ராசி நேயர்களே!

பிறக்கும் புத்தாண்டு பெருமைக் குரிய ஆண்டாக அமையப்போகிறது. வருடத் தொடக்கத்திலேயே ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் இருக்கிறது. எனவே விரயங்கள் அதிகரிக்கும். என்றாலும் ராகு - கேது பெயர்ச்சிக்கு பின், உங்களுக்கு மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். இல்லம் கட்டி குடியேறும் எண்ணம் நிறைவேறலாம். கடக குருவின் ஆதிக்க காலத்திற்கு பின், கனவுகள் அனைத்தும் நனவாகும்.

புத்தாண்டின் கிரக நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, 3-ம் இடத்தில் வக்ரம் பெற்றிருக்கிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறுவது நன்மைதான். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டாலும், விரயம் கூடும். ஜென்மத்தில் ராகு இருப்பதால் மனக்குழப்பம், தடுமாற்றம் ஏற்படும். எந்த வேலையையும் ஒரு முறைக்கு இருமுறை செய்ய வேண்டிய சூழல் உருவாகும். வருடத் தொடக்கத்தில் தனாதிபதி செவ்வாயும் வக்ர இயக்கத்தில் இருப்பதால், சொத்துகளில் எதிர்பாராத பிரச்சினைகள் வந்து சேரும்.

தொடக்கத்தில் விரயச் சனியின் ஆதிக்கம் இருக்கிறது. அவரோடு சுக்ரனும் இருப்பதால் வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள். வழக்குகளும், வாய்தாக்களும் வரலாம். பயணங்களை திடீர் திடீரென மாற்றுவீர்கள். கொள்கை பிடிப்போடு செயல்பட இயலாது.

வீடு மாற்றம், இட மாற்றம் நன்மை தரும். சுய ஜாதக அடிப்படையில் முதல் சுற்றா? இரண்டாவது சுற்றா? என்பதை பார்த்து அதன்படி நடந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருப்பதோடு நவக்கிரகத்தில் உள்ள சனி பகவானையும் வழிபட்டால் நன்மைகள் நடைபெறும். பாம்பு கிரகப் பெயர்ச்சிக்கு பின் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்யுங்கள்.

கும்ப - ராகு, சிம்ம - கேது

26.4.2025 அன்று ராகு - கேதுக் களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் ராகுவும், 6-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ஜென்ம ராகு மாறியதால் இனி செல்வ நிலை உயரும். தேக நலம் சீராகும். தெய்வ அருள் கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பாதியில் நின்ற பணி இனி மீதியும் துரிதமாக நடைபெறும்.

6-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் எதிரிகளின் பலம் குறையும். திடீர் தனவரவு, கடன் சுமையை குறைக்கும். புதிய உத்தியோக முயற்சி கைகூடும். மாற்று மருத்துவத்தின் மூலம் உடல்நலத்தை சீராக்குவீர்கள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அசையாச் சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து மகிழ்ச்சியை தரும்.

மிதுன குருவின் சஞ்சாரம்

11.5.2025 அன்று குரு பகவான், மிருகசீர்ஷம் 3-ம் பாதத்தில் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். ஆரோக்கிய தொல்லை உண்டு. உறவினர் பகையால் உள்ளத்தில் மகிழ்ச்சி குறையும். இரவு பகலாக பாடுபட்டாலும் உழைப்புக்கேற்ற பலன் ஓரளவுதான் கிடைக்கும். அர்த்தாஷ்டம குரு என்பதால், வியாழக் கிழமை விரதமும், குரு வழிபாடும் அவசியம்.

குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால், வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு கிடைக்கப்பெறும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்கும் ஆர்வம் கொள்வர். பெற்றோரின் மணி விழாவை நடத்தி மகிழும் நேரம் இது. குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் விரயங்கள் கூடும். அதனை சுப விரயங்களாக மாற்றிக்கொள்வது நல்லது.

வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டு முயற்சி கைகூடும். வீடு மாற்றம், இடமாற்றம், வாகன மாற்றம், உத்தியோக மாற்றம் நிகழக்கூடும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட சொத்து, அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டும்.

கும்ப - சனி சஞ்சாரம்

வருடத் தொடக்கம் முதல் கும்ப ராசியிலேயே சனி சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 2, 6, 9 ஆகிய மூன்று இடங்களில் பதிகிறது. அதன் விளைவாக தனவரவு திருப்தி தரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறு வதற்கான அறிகுறி தென்படும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிணக்குகள் அகலும்.

கடக - குரு சஞ்சாரம்

வருடத் தொடக்கத்தில் மிதுன ராசிக்குச் செல்லும் குருபகவான், 8.10.2025 அன்று கடக ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார் அங்கு 19.12.2025 வரை இருக்கும் அவா், உச்சம் பெற்று பலம் பெறுகிறார். அவரது பார்வை 1, 9, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. ஜென்ம ராசியை குரு பார்ப்பதால், உடல் நலம் சீராகும். சுபச்செய்திகள் வந்துகொண்டே இருக்கும். அதிகாரப்பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு.

குரு பார்வையால் பாக்கிய ஸ்தானமும், லாப ஸ்தானமும் புனிதமடை வதால் பாக்கியங்கள் அனைத்தும் வந்துசேரும். நண்பர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவர். தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள்.

குருவின் வக்ர காலம்

18.11.2025 முதல் 19.12.2025 வரை கடகத்திலும், 20.12.2025 முதல் 31.12.2025 வரை மிதுனத்திலும் குரு வக்ரம் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். உங்கள் ராசிநாதனாக குரு விளங்குவதால் ஆரோக்கியத் தொல்லை உண்டு. மன பயம் அதிகரிக்கும். தொழிலில் குறுக்கீடுகள் உண்டு. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காது. எதையும் யோசித்து செய்ய வேண்டிய நேரம் இது.

சனியின் வக்ர காலம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், 2.7.2025 முதல் 17.11.2025 வரை வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் பொருளாதார பற்றாக்குறை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. வரவுக்கு முன்பே செலவு காத்திருக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகையால் பிரச்சினைகள் உருவாகும். வீடு மாற்றம் பலன் தரும்.

பொறுமையும், நிதானமும் தேவை. சில காரியங்கள் முடிவடையாமல் இழுபறி நிலையில் இருக்கும். பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். சனி - செவ்வாய் பார்வை காலத்தில் சஞ்சலங்கள் அதிகரிக்கும். யோகம் தரும் குருவை வழிபடுவது நல்லது.

Similar News