மீனம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026

Published On 2026-03-05 10:48 IST   |   Update On 2026-03-05 10:51:00 IST

குரு கடாட்சம் பெற்ற மீன ராசியினரே

மீன ராசிக்கு லாபாதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் தற்போது கோட்ச்சாரத்தில் ராசியில் நின்று ஜென்ம சனியாக பலன் தருவார். தனது 3ம் பார்வையால் 3ம் இடமான முயற்சி ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 7ம்மிடமான களத்திர ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் 10மிடமான தொழில் ஸ்தானத்தையும் பார்ப்பார். ஒரு மனிதன் வாழ்நாளில் அனுபவிக்க சுப, அசுப நிகழ்வுகளின் பெரும் பகுதியை ஏழரை சனி, அஷ்டமச் சனி காலங்களிலேயே அனுபவிக்கிறார்கள். சனி பகவான் ராசியைக் கடக்கும் போது எந்த ராசியாக இருந்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முதல் சுற்றாக இருந்தால் சிறிய பாதிப்பு ஏற்படும். இரண்டாம் சுற்றாக இருந்தால் வாழ்வில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்வுகளும் நடைபெறும். மூன்றாவது சுற்றாக இருந்தால் ஆரோக்கிய குறைபாடுமிகும்.

ஜென்ம சனியின் பொதுவான பலன்கள்

உங்களின் கற்பனை குதிரை கட்டுக்கடங்காமல் ஒடும். அடங்காத எண்ண அலைகளால் உங்களுக்கு மனத் தடுமாற்றம் ஏற்படும். சிறிய செயலுக்கு கூட கடுமையாக போராட நேரும். திட்டமிட்ட செயல் கூட கடைசி நேரத்தில் காலை வாரும். சுய கவுரவத்திற்கு கெட்ட பெயர் வராமல் நடந்து கொள்ளவும். ஜென்மச் சனியன் காலத்தில் பண மோசடி மிகுதியாக இருக்கும். பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும்.

நெருங்கிய உறவினர்களுக்கு அவசரத்திற்கு பணம் கொடுத்தால் திரும்ப வராது. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் மன சங்கடம் அதிகமாகும். ஏலச்சீட்டு, நகைச் சீட்டு வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற பணம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு சிறிய பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கண் துடைப்பிற்கான பதவி உயர்வே தவிர பிரயோஜனம் எதுவும் இருக்காது.

வேலைப் பளு அதிகமாக இருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இருக்காது. இரண்டு நபர்களுக்கான வேலை செய்து ஒரு நபரின் சம்பளத்தை பெற நேரும். மூன்றாம் சுற்று ஏழரை சனி நடப்பவர்கள் பனிச்சுமை காரணமாக விருப்ப ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. உத்தியோகஸ்தர்கள் கம்பெனி சார்பாக வெளிநாட்டில் சென்று பணிபுரியலாம். அல்லது சற்று அலைச்சல் மிகுந்த பணியாக இருக்கும். சரியான நேரத்திற்கு வீட்டு உணவை உண்ண முடியாமல் காலம் தாழ்த்தி கிடைத்த உணவை உண்டு காலம் கடத்த நேரும். வெளிநாட்டு படிப்பு அல்லது வேலைக்கு வாய்ப்பு கிட்டும். அரசு வகை ஆதாயம் உண்டு. தந்தை, தந்தை வழி உறவினர்கள் வெளி பேச்சில் நல்ல வராகவும் மனதிற்குள் வஞ்சமும் வைத்து பேசுவார்கள். பூர்வீக சொத்து இன்று வந்து விடும் நாளை வந்து விடும் என இலவு காத்த கிளியாக நாளை கடத்த வேண்டும்.

ஒருவர் புகழப்படுவதும் தாழ்த்தப்படுவதும் ஏழரைச் சனியின் காலத்தில் தான். ஜனன கால ஜாதகத்தில் சுபத்தை மிகுதிப்படுத்தும் 5, 9ம் அதிபதியின் தசை நடந்து கொண்டு இருந்தால் புகழ் கொடி கட்டி பறக்கும். சினிமா கலைஞர்களுக்கு பல மொழிப் படங்களில் வாய்ப்புகள் தேடிவரும். கடல் கடந்து சென்று கலை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கிட்டும். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான நேரம். மக்கள் மனதில் இடம்பிடிக்க அயராது உழைத்து வெற்றியும் காண்பீர்கள்.

சனியின் 3ம் பார்வை பலன்கள்

சனி பகவான் 3ம்மிடமான வெற்றி ஸ்தானத்தை பார்க்கிறார். இடப்பெயர்ச்சி செய்ய நேரும். வீண் அலைச்சலை ஏற்படுத்தும் பயணங்கள் செய்ய நேரும். உங்கள் முன்னோர்களில் பரம்பரை நோயான சுகர், பிரஷர், பிபி உங்களை தாக்க தயாராகும் காலம் .இதிலிருந்து தப்பிக்க முறையான உடற்பயிற்சி அவசியம். இல்லையேல் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிடக்கூடிய வியாதி தாக்கும். அதுமட்டுமல்லாமல் சரியான மருத்துவரை அணுகி உடல் பரிசோதனை செய்வது நலம். வெகு சிலருக்கு காதில் சீழ் வடிதல் , காது வலி போன்ற காது தொடர்பான பிரச்சனையால் தலை வலி வரும்.

ஜென்மத்தில் சனி பகவான் என்பதால் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் வரும். உங்களின் திறமையும் பேச்சு சாதுர்யமும் பல இடங்களில் கை கொடுக்காது. எல்லாம் இருந்தும் இல்லாதது போன்ற உணர்வு வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்போது தலை தூக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவ தோடு குற்றச்சாட்டுகள் மன வேதனையை தரும்.மறைமுக எதிர்ப்புகளும், சூழ்ச்சிகளும் போட்டிகளும் அதிகரிக்கும்.உடன் பிறந்தவர்களின் நயவஞ்சக செயலால் சமூதாயத்தின் மேல் வெறுப்பு ஏற்படும்.

சனியின் 7ம் பார்வை பலன்கள்

சனி தனது 7ம் பார்வை ராசிக்கு 7ம் மிடமான களத்திர ஸ்தானத்தை பார்க்கிறார். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் நட்பு ரீதியான பழக்கம் பல குடும்பத்தில் தம்பதிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தும். வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த பல தவறான தொடர்புகள் அரங்கேறும். பல குடும்பங்களில் ஆண்களும், பெண்களும் சந்தேகப்பட்டு நண்பர்களை காதலர்களாக மாற்றி விடுகிறார்கள். தம்பதிகள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு விட்டு கொடுத்தால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாகும்.

சமுதாய அங்கீகாரத்தை கூறும் ஏழாம் இடத்திற்கு சனி பார்வை இருப்பதால் அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும். வீண் அவமானம் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. எனினும் சிலருக்கு வாழ்வில் எதிர்பாராத சம்பவங்களையும் திருப்பங்களையும் நடத்துவார். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு நன்மையை தரும். மிகப் பெரிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிட்டலாம். பெரிய பதவிகளும் உங்களுக்கு கிடைக்க கூடிய சாத்தியக்கூறும் உள்ளது.

சனியின் 10ம் பார்வை பலன்

சனி பகவான் தனது 10ம் பார்வையால் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் சிறிய லாபத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். உத்தியோகம் தொழில் போன்றவற்றில் நிலையற்ற தன்மை இருக்கும். சிலருக்கு மனதிற்கு பிடிக்காத உத்தியோக இடமாற்றம் மன அழுத்தத்தை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் உங்களை வந்து பார் என்று வம்புக்கு இழுக்கும். பிறரை பற்றிய விமர்சனத்தை தவிர்ப்பது நல்லது. எனவே வேலை பார்க்கும் இடத்தில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் வேலையை தக்க வைக்க முடியும்.

விவசாயிகள் தவறான ஆலோசனையில் மதி இழந்து பழக்கம் இல்லாத பயிர்களை சாகுபடி செய்யக் கூடாது. கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஒருவரின் வேலையில் மற்றவர் குறுக்கிடாமல் இருந்தால் தப்பித்து விடுவீர்கள்.

திருமணம்

ஜனன கால ஜாதக ரீதியான பல்வேறு தோஷங் களால் சரியான திருமண வாழ்வு கிடைக்காமல் மன நிம்மதி இழந்து அல்லாடுபவர்கள் ஏழரை சனியின் காலத்தில் முயற்ச்சித்தால் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடி வரும். பல வருடங்களாக திருமணமே வேண்டாம் என்று கூறிய வர்களுக்கும் ஏழரை சனியின் காலத்தில் திருமணம் நடந்து விடும்.

பெண்கள்

பெண்களுக்கு சுமாரான காலம். சோம்பல் மிகுதியாகும்.உழைப்பில் ஆர்வமின்மை அதிகரிக்கும். சிறிய விஷயங்களை பொருட் படுத்தாமல் விட்டுக் கொடுத்தால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். தாய் வழி குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள்.பொறுப்பு மிக்க பதவிகள் உங்களை தேடி வரும். இனம் புரியாத வெறுமையும் தூக்கமின்மையும் ஏற்படலாம். சிலர் வேலைக்காக வெளிநாடு செல்லும் நிலை ஏற்படும். ஏழரை சனிக்கும் மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சனி பகவான் கொடுப்பதை தடை செய்யும் அதிகாரம் வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது. பலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் போன்ற பல்வேறு சுப விஷயங்கள் நடைபெறுவது ஏழரைச்சனி சனியின் காலத்தில் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

பரிகாரம்

தினமும் திருக்கோளறு பதிகம் பாராயணம் செய்ய வேண்டும் அல்லது ஒலிக்கச் செய்து கேட்க வேண்டும். அரசு மருத்துவ மனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவு தானம் செய்ய வேண்டும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News