புகழ்ச்சியை விரும்பும் சிம்ம ராசியினரே,,,, புகழ்ச்சியால் மகிழ்ச்சி அடையும் சிம்ம ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு நல்லவிதமான ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். லாபஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் வரை பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும்.தாரள தன வரவு உண்டு. வீட்டில் சுப விசேஷங்கள் நடக்கும். புதிய வாய்ப்புகள் கைகூடும் உங்களை சாதாரணமாக நினைத்தவர்கள் உங்களது திறமைகளை உணர்வார்கள். சவாலான செயல்களைக் கூட நேர்த்தியாக செய்து முடித்து வெற்றி வாகை சூடுவீர்கள். பட்டம், பதவி போன்ற அதிகார அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகொடுக்கும்.
குருவின் சஞ்சார பலன்கள்
சிம்ம ராசிக்கு 5,8-ம் அதிபதியான குரு பகவான் ஜுன்2, 2026 வரை 11ம் மிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.அதன் பிறகு 12ம் மிடமான விரய ஸ்தானத்திற்கு செல்கிறார்.அஷ்டமச் சனியின் தாக்கத்தால் பிரிந்து வாழ்ந்த தம்பதிகளுக்கு சேர்ந்து வாழும் விருப்பம் அதிகரிக்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும். வீடு, மனை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். கர்பிணி பெண்களுக்கு ஆண் மகவு பிறக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும்.
தீர்க்கமாக யோசிக்காமல் எடுக்கும் முடிவு எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும். விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது அவசியம். சட்டச் சிக்கல் காரணமாக மன அமைதி குறையும் என்பதால் எந்த விதமான சட்டச் சிக்கலாக இருந்தாலும் நீதிமன்ற படி ஏறுவதை தவிர்த்து பேசித் தீர்க்க முயல வேண்டும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் மனக் சஞ்சலத்தால் தாமதமாகும். யாருக்கும் பணம் கடனாக தர, வாங்கக்கூடாது.
சனியின் சஞ்சார பலன்கள்
சிம்ம ராசிக்கு 6,7ம் அதிபதியான சனி பகவான் 2026ம் ஆண்டு முழுவதும் அஷ்டம ஸ்தானத்தில் நின்று அஷ்டமச் சனியாக பலன் தருவார். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் உண்மையாக இருப்பவர்கள் யார்? பகடைக்காயாக பயன்படுத்துபவர் யார்? என்ற அனுபவ உண்மை புரியும். உடல் உபாதைகள், நோய் தொந்தரவு மாற்று வைத்தியத்தில் பலன் தரும். கொடுக்கல் வாங்கலில் நிதானத்தை கடைபிடிக்கவும். தாய் வழியில் மனக்கவலை கருத்து வேறுபாடு உண்டாகும். புதிய முயற்சிகளைத் சுய ஜாதக பரிசீலனைக்கு ஏற்ப செய்வது நல்லது.பணவரவில் முன்னேற்றம் இருக்கும். பெண்கள் புதிய வாகனம் வாங்குதல், ஆடம்பரப் பொருட்கள் வாங்குதல், உல்லாசப் பயணம் செல்லுதல் என்று இனிமையாகப் பொழுதை கழிப்பார்கள்.சிலர் பணிச்சுமை அல்லது ஆரோக்கிய குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெறலாம்.தம்பதிகள் அமைதி கடைபிடித்தால் நிலமை சீராகும்.
குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும்படியாக இருந்தாலும் நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சனைகளைத் தடுக்கும். பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள். பொழுது போக்கான விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப நிகழ்விற்கு எதிர்பார்த்திருந்த தொகை கிடைத்து பணவரவு சரளமாகும்.உங்கள் பேச்சால், முன் கோபத்தால் நல்ல வாய்ப்புகள் தள்ளிப்போகும். பணியாளர்களால் சில அசவுகரியங்கள் ஏற்படலாம்.
ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்
2026 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி வரை கேது பகவான் ராசியிலும் ராகு பகவான் சம சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.இது அஷ்டம சனி பிரச்சனை, ஜென்ம கேது, ராகுவின் காலம் என்பதால் எதையும் எடுத்தும் கவிழ்த்தோம் என்று செய்யக்கூடாது. வாழ்க்கை என்பது கண்ணாடி பாத்திரம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.எந்த கிரகம் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் திருமணம் முயற்சியை தவிர்ப்பது நல்லது. விருப்ப விவாகமோ பெற்றோர்களின் ஆசிர்வாத திருமணமாக இருந்தாலும் ஏழில் ராகு இருப்பதால் சில தவறான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து பின் நாட்களில் வருந்த நேரம் என்பதால் திருமணத்தை ஒத்தி வைப்பது சாலச் சிறந்தது. பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் சில சங்கடங்கள் உண்டாகலாம்.அதனால் பார்க்கும் வேலையை மாற்றலாம். பெண்கள் இந்த கால கட்டத்தில் மாங்கல்ய சரடு மாற்றுவது, தாலி பெருக்கிப் போடுவது போன்றவற்றை தவிர்க்கலாம்.கையில் காசு சரளமாக புரளும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விற்காமல் தேங்கிய சரக்குகள், கையிருப்பில் இருக்கும் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனையாகும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.
மகம்
மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வருடம்.பூமி, மனை, வாகனம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் முடிவிற்கு வரும். காணமல் போன நகை, பணம் கிடைக்கும். கடந்த கால கடன் பிரச்சனைகள் குறையத் துவங்கும். போதிய தன வரவால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். சொத்தை அடமானம் வைத்து சில்லறைக் கடனை அடைத்து கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் பெறுவீர்கள். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கு ஏற்ப சிலரின் இளைய சகோதரம் உதவிக்கரம் நீட்டுவார்கள். சிலருக்கு சளி, இருமல் காய்ச்சல், உடல் அசதி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் உண்டாகும். அஷ்டம சனி மற்றும் விரய குரு காலம் என்பதால் அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தவிர்ப்பது நல்லது. கிடைக்கும் உபரி பணத்தை வேறு வகையில் முதலீடு செய்வது நல்லது. சிலர் பதிவுத் திருமணம் செய்து உற்றார் உறவினரை சங்கடப்படுத்துவர். தொழில் பங்குதாரரின் மேல் நம்பிக்கை குறைவு உண்டாகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.தினமும் சிவ கவசம் படிக்கவும்.
பூரம்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய வருடம். வரவுக்கு மீறிய செலவுகள் மனதை வருத்தும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.தொழில், உத்தியோக ரீதியான பாதிப்பு எதுவும் இருக்காது. பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. நல்ல சொந்த வீட்டிற்குச் செல்வீர்கள். கை மறதியாக வைத்த முக்கியமான ஆவணங்கள் நகைகள் கிடைக்கும். இடப் பெயர்ச்சி செய்ய நேரும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் ஏற்படலாம். குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன, சொத்து யோகம் உண்டாகும். தாயின் உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்சியை அதிகரிக்கும். பெண்களின் ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் வங்கி சேமிப்பை கரைத்து விடும்.வீண் விரயம் அல்லது வைத்தியச் செலவு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். வருமானத்தில் பெரும் பகுதி கடனுக்கு செல்லும். வியாழக்கிழமை குரு பகவானை வழிபடவும்.
உத்திரம் 1
மேன்மையான பலன்கள் உண்டாகும் வருடம்.சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும்.மாற்றுமுறை வைத்தியத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்திற்கு பொன், பொருள் வாங்குவீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடு அகலும்.தொழிலில் லாபம் அதிகரிக்கும்.வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். சிலருக்கு தாய்வழிச் சொத்தில் தாய்மாவுடன் எல்லைத் தகறாறு உண்டாகும்.மத்தியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடக்கும்.
விவாகரத்து வரைச் சென்ற வழக்குகள் சுமூகமாகும்.சிலருக்கு எண்ணங்களை செயலாக மாற்ற முடியாது. மனதில் இனம் புரியாத பய உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.சொத்துக்களுக்கு நல்ல வாடகைதாரர் கிடைப்பார்கள்.அரசு வழி ஆதாயம் உண்டு. தந்தையின் கட்டளைக்கு இணங்குவீர்கள். குழந்தை பாக்கியம் தொடர்பான உங்களின் எண்ணம் ஈடேறும். குல தெய்வ வழிபாடு நற்பலன் தரும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.
பரிகாரம்: மாதம் ஒருமுறை உங்கள் ஜென்ம நட்சத்திரம் நாளில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று வருவதால் நவகிரக தோஷம் விலகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406