சிம்மம் - ஆண்டு பலன் - 2026

2025 புத்தாண்டு ராசிபலன்

Published On 2025-01-01 09:42 IST   |   Update On 2025-01-01 09:43:00 IST

இடமாற்றம் இனிமை தரும் சிம்ம ராசி நேயர்களே!

புத்தாண்டு வந்துவிட்டது. புகழ்மிக்கவர்களாக விளங்கும் உங்களுக்கு நல்ல திருப்பங்கள் வரப்போகிறது. உங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டுமானால், வீடு மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

கண்டகச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால், உங்கள் திறமை சோதிக்கப்படலாம். கொடுக்கல் - வாங்கலில் கவனம் தேவை. வழி பாடுகளில் முழுமையாக கவனம் செலுத்தினால் இந்த ஆண்டு உங்களுக்கு இனிய ஆண்டாக அமையும்.

புத்தாண்டின் கிரக நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சப்தம ஸ்தானத்தில் சனி இருக்கிறார். அஷ்டமத்தில் ராகுவும், 2-ல் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் புதிய ஆண்டு தொடங்குகிறது. கண்டகச் சனியின் ஆதிக்கத்தால் மனக்கவலை அதிகரிக்கும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. ஆரோக்கியத் தொல்லை கூடும்.

எதுவாயினும் சப்தம ஸ்தானத்தில் உள்ள சனி விலகும் வரை பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். புகழ், கீர்த்திக்கு குறைவில்லை என்றாலும், இனம்புரியாத கவலை இதயத்தை நெருடும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவரால் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயலாற்றுங்கள். விட்ட தொகையை பிடிப்பதாக கருதி, மேலும் மேலும் இழப்பை சந்திப்பீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

கும்ப - ராகு, சிம்ம - கேது

26.4.2025 அன்று ராகு-கேதுக் களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் ராகுவும், ஜென்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ஜென்ம கேது என்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அலட்சியப் போக்கால் நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதும் அரிது. சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை உங்களுக்கு அனுகூலம் தரும் நட்சத்திர நாளில், ஆலயங்களுக்குச் சென்று முறையாக செய்து வாருங்கள்.

சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் திருமணப் பேச்சு தொடங்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிப்பதோடு, திறமைக்குரிய அங்கீகாரமும் கிடைக்காமல் போகலாம். எனவே 'வேறு புதிய நிறுவனங்களுக்குச் சென்று பணிபுரியலாமா?' என்று சிந்திப்பீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். இருந்தாலும் எதையும் போராடிப் பெறும் சூழ் நிலையே இருக்கும்.

மிதுன - குரு சஞ்சாரம்

11.5.2025 அன்று குரு பகவான், மிருகசீர்ஷம் 3-ம் பாதத்தில் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. வெற்றிகள் ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால், துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டை அகலும். அண்ணன், தம்பிகளின் உறவு சீராகும். பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். வருங்காலத்தைப் பற்றி பயம் அகலும்.

குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால், பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவடைகிறது. எனவே பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 'வீடு கட்ட வேண்டும்' அல்லது 'கட்டிய வீட்டைப் பழுது பார்க்க வேண்டும்' என்று நினைத்தவர்களுக்கு அது கை கூடும். நிரந்தர வருமானத்திற்கு வழியமைத்துக்கொள்வீர்கள். நீடித்த நோய் அகலும். பொன், பொருள் சேர்க்கை உண்டு.

7-ம் இடத்தைக் குரு பார்ப்பதால், இல்லறம் நல்லறமாக அமையும். தம்பதிக்குள் இருந்த கருத்து வேறுபாடு அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும். புகழ்பெற்றவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். தனித்தனி ஊர்களில் பணிபுரிந்த தம்பதியர், இனி ஒரே ஊரில் பணிபுரியும் சந்தர்ப்பம் அமையும்.

கும்ப - சனி சஞ்சாரம்

வருடத் தொடக்கம் முதல் கும்ப ராசியிலேயே சனி சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 1, 4, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. அதன் கடுமையான பார்வையால் பல மாற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். குடும்ப ரகசியங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் முதலில் தடை ஏற்பட்டு, பிறகு வெற்றி காண்பீர்கள். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

கடக - குரு சஞ்சாரம்

வருடத் தொடக்கத்தில் மிதுன ராசிக்குச் செல்லும் குரு பகவான், 8.10.2025 அன்று கடக ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். அங்கு 19.12.2025 வரை இருக்கும் அவர், உச்சம் பெற்று பலம் பெறுகிறார். அவரது பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகிறது. 4-ம் இடத்தில் குரு பார்வை பதிவதால் சில நன்மைகள் கிடைக்கும். கல்வி, கலை சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். காரிய வெற்றி ஏற்படும். தாயின் உடல்நலம் சீராகும். வருமானப் பற்றாக்குறை அகலும்.

6-ம் இடம் மற்றும் 8-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு, உயர்பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். சுயதொழில் தொடங்கும் முயற்சியிலும் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழி அகலும். குரு வழிபாடு மேலும் நன்மை தரும்.

குருவின் வக்ர காலம்

18.11.2025 முதல் 19.12.2025 வரை கடகத்திலும், 20.12.2025 முதல் 31.12.2025 வரை மிதுனத்திலும் குரு வக்ரம் பெறுகிறார். இந்த காலத்தில் நன்மை, தீமை இரண்டும் கலந்தே நடைபெறும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள்.

வீடு மாற்றம், இடமாற்றம் நன்மை தரும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு கிட்டும். தனித்தனி ஊர்களில் வேலை பார்த்து வந்த தம்பதியர் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் மாறுதல் வரும்.

சனியின் வக்ர காலம்

2.7.2025 முதல் 17.11.2025 வரை, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும். எதிர்காலம் பற்றிய பயம், மனதை விட்டு அகலும். உத்தியோகத்தில், உயர் அதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர். வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கேற்ற வேலைக்காக முயற்சிப்பீர்கள்.

வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் செலவு கூடுதலாகவே இருக்கும். 'புதிய வாகனம் வாங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். சுயஜாதகப்படி தெய்வ வழிபாட்டை தேர்ந்தெடுத்து செய்வதோடு, சனி - செவ்வாய் பார்வை காலத்தில் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது நல்லது.

Similar News