கடகம் ஆண்டு பலன் - 2026

2026 புத்தாண்டு ராசிபலன்

Published On 2025-12-23 16:54 IST   |   Update On 2025-12-23 16:55:00 IST

அன்பான பண்பான கடக ராசியினரே தாயன்பு நிறைந்த கடக ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு விபரீத ராஜயோகத்தை கொடுக்கக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது.கெட்டவன் ராகு அஷ்டமஸ்தானத்தில் இருப்பதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தடை, தாமதங்கள் விலகும் வருடம். மன சங்கடங்கள் அகலும்.ஞாபக சக்தி அதிகரிக்கும். தைரியமும் தெம்பும் குடிபுகும். நினைப்பது நடக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும்.ஏற்றமான பலன்கள் உண்டாகும்ஆத்ம ஞானம் கிடைக்கும். உடலுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்வு தரும் நல்ல நிகழ்வுகள் நடக்கும்.

குருவின் சஞ்சார பலன்கள்

கடக ராசிக்கு 6,9-ம் அதிபதியான குரு பகவான் வருட ஆரம்பத்தில் 12ம் மிடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.ஜூன்2, 2026 வரை விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வருடம். அதன் பிறகு ராசிக்கு வந்து ஜென்ம குருவாக உச்சம் பெற போகிறார். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இழப்புகளிலிருந்து மீள முடியும்.

தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், நண்பர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய அளவில் பண முதலீடு செய்ய வேண்டாம். யாருக்கும் பெரிய பணம் கடனாக கொடுக்க வேண்டாம். சிலருக்கு சுப விரயங்கள் மிகுதியாகும்.சிலர் தொழில், உத்தியோகம் அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத விரயங்களை சந்திக்க நேரும். சேமிப்பு கரையும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. ஜாமீன் பொறுப்பு ஏற்கக் கூடாது. சிலருக்கு திருமணம், வீடு, வாகனம் என சுப செலவுகளும் ஏற்படலாம். வேலை பார்க்கும் இடத்தில் பிறர் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பங்கு வர்த்தகர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது அவசியம். விரயமும் இழப்பும் எந்த விதத்தில் வேண்டுமானலும் இருக்கலாம் என்பதால் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

சனியின் சஞ்சார பலன்கள்

கடக ராசிக்கு 7. 8-ம் அதிபதியான சனிபகவான் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எதிர்மறை எண்ணங்கள் விலகும்.கவலைகள் அகலும். உற்சாகமாக, ஆரோக்கியமாக இருப்பீர்கள்.எதிர்பார்த்த முன்னேற்றங்களால் மனம் மகிழும் தொட்டது துலங்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம் அல்லது பழைய தொழிலை விரிவாக்கம் செய்யலாம். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். கருத்து வேறுபாட்டுடன் வாழ்ந்த தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். திருமணம், குழந்தை பேறு, வேலை வாய்ப்பு சொத்துச் சேர்க்கை போன்றவற்றில் நிலவிய தடைகள் அகலும். தேவைக்கேற்ற தன வரவால் குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அழகு, ஆடம்பர நவீன பொருட்கள், தங்க, வெள்ளி நகை சேர்க்கை அதிகரிக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு மிக சாதகமான நேரம். தந்தையின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை.உற்றார், உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்லும் போது வீண் மனஸ்தாபங்களைத் தவிர்க்கலாம்.

ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். பொதுவாக அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வருவது நல்லது.அந்த வகையில் அசுப கிரகமான ராகு பகவான் எட்டாம் இடத்திற்கு செல்வதால் சில அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு கை கொடுக்கும். ராகுவிற்கு குருப் பார்வை இருப்பதால் அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாக வாய்ப்பு உள்ளது. எல்லா செயல்களையும் எளிதாக சமாளித்து விடுவீர்கள். விபரீத ராஜ யோகம் உங்களை வழிநடத்தப் போகிறது.வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். பல வருடங்களாக சொத்தில் ஆக்கிரப்பு செய்தவர்கள் தாமாகவே வெளியேறுவார்கள்.

அடமான நிலங்களை மீட்கக் தேவையான பண உதவி கிடைக்கும். வீடு மாற்றம், வேலை மாற்றம் அல்லது ஊர் மாற்றம் என அவரவர் விரும்பிய மாற்றங்கள் உண்டாகும் .பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டாகும்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் சுப செலவிற்காக ஒரு தொகையை செலவு செய்ய நேரும்.வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள்.சிலருக்கு பிறரின் பொறாமை குணத்தால் கண் திருஷ்டி உருவாகலாம். இந்த காலகட்டங்களில் அரசின் சட்ட திட்டங்களை மதிப்பது நல்லது.

புனர்பூசம் 4

கடக ராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்க ளுக்கு பெயர், புகழ் அந்தஸ்து உயரும் அனுகூலமான வருடமாக அமையும்.கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும்.வியாபாரத்தில் நிலவிய மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும்.

எந்தப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரிந்து அதன்படி செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் பூர்வீகச் சொத்தில் நிலவிய மன உளைச்சல் குறையும். சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்குச் சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்குச் செல்வார்கள். அடமானச் சொத்து, நகைகளை மீட்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தையை குடும்ப பெரியவர்களின் முன்பு நடத்துவது நல்லது.தாயின் ஆரோக்கிய குறைபாடு அகலும்.விவசாயிகள் பல வருடங்களாக பயன்படாமல், பயிரிட முடியாமல் கிடந்த தரிசு நிலங்களில் போதிய மழைப் பொழிவால் விவசாயம் செய்யலாம். திருமணத் தடைகள் அகலும்.மேலதிகாரி, முதலாளிகள், சக ஊழியர்களால் ஏற்பட்ட தொந்தரவு அகலும். இறைவழிபாட்டால் மகிழ்ச்சியை அதிகரிக்க அஷ்டலட்சுமியை வழிபடவும்.

பூசம்

எண்ணியது ஈடேறும் வருடம். வாழ்க்கையை நகர்த்துவதில் இருந்த சிரமங்களை சீராகி நிம்மதி அடைவீர்கள்.பொருளாதார ஏற்றத் தாழ்வு சமனாகி வட்டிக்கு வட்டி கட்டிய நிலைமாறும்.சொல்வாக்கால் மற்றவர்களால் மதித்திடக்கூடிய நிலையை அடைவீர்கள்.விலகிய குடும்ப உறவுகள் நட்பு பாராட்டுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு உண்டாகும். செய்தி, தகவல் தொடர்பு, ஆலோசனை வழங்கி புத்தியைத் தீட்டி சம்பாதிப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். அரசியல் பிரமுகர்களுக்கு கட்சி மேலிடம் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்ட பகை அகலும் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பு உண்டாகும்.

8ம்மிட ராகுவை சமாளிக்க தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வீடு, வாகனம், தொழில் போன்றவற்றிற்கு விண்ணப்பித்த கடன் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் டென்சன், அலைச்சல் குறையும்.சிவ வழிபாடு செய்யவும் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

ஆயில்யம்

கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்க ளுக்கு 2026-ம் ஆண்டு மிகச் சாதகமாக உள்ளது. வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.அனைத்து வேலைகளும் சிறிய முயற்சியிலேயே சிறப்பாக நடைபெறும். தடைகளை தகர்த்து வெற்றிநடை போடுவீர்கள். உடலிலும் உள்ளத்திலும் புதிய தெம்பு, தைரியம் குடிபுகும். வைத்தியம் பலன் தரும். தொழிலில் இருந்து வந்த தேக்க நிலை அடியோடு மாறி நிறைவான லாபம் காண்பீர்கள். தடைபட்டிருந்த வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள்.புத்திர பாக்கியம், திருமணம் போன்ற தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் நடைபெறும். புத்திரர்கள் வழியில் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மருமகனால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட 2026-ம் ஆண்டு ராஜயோகம் உண்டாகும்.

பரிகாரம்: கடக ராசியில் பிறந்தவர்கள் 2026ம் ஆண்டு சமயபுரம் மாரியம்மனை வழிபட சாதகமான பலன்கள் உண்டாகும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News