மேஷம் - விசுவாவசு ஆண்டு வருட பலன்

2025 தமிழ் புத்தாண்டு ராசிபலன்

Published On 2025-04-11 07:56 IST   |   Update On 2025-04-11 08:07:00 IST

சுப விரயம்

வேகமும், விவேகமும் நிறைந்த மேஷ ராசியினரே!

எடுத்த காரியத்தில் கண்ணும், கருத்துமாய் செயல்படும் மேஷ ராசியினருக்கு பிறக்கப்போகும் விசுவாவசு ஆண்டு மேன்மை தரும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.

சனி பகவான் ஆண்டின் துவக்கத்தில் ராசிக்கு 12ம் மிடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது ஏழரைச் சனியின் முதல் பாகம். விரய ஸ்தானத்தில் நிற்கும் சனியின் 3-ம் பார்வை 2-ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திலும் 7-ம் பார்வை 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திலும் 10ம் பார்வை 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்திலும் பதிகிறது.

அதே போல் ஆண்டின் துவக்கத்தில் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் 14.5.2025 அன்று இரவு முதல் மூன்றாமிடமான சகாய ஸ்தானம் செல்கிறார். தனது 5ம் பார்வையல் 7-ம் மிடமான களத்திர ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் 9ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் 11ம்மிடமான லாப ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

மேலும் வருட ஆரம்பத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் லாப ஸ்தானத்திற்குள் நுழைகிறார். ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் இந்த தமிழ் புத்தாண்டில் ஏற்படப் போகும் பலன்களைப் பார்க்கலாம்.

விசுவாசு ஆண்டின் பொதுவான பலன்கள்

ஏழரைச் சனி துவங்கினாலும் இந்த ஓராண்டிற்கு குரு பகவான் மற்றும் ராகு/கேதுக்கள் உங்களுக்கு மிகச் சாதகமாக உள்ளார்கள் என்பதால் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாக இருக்கலாம். அனுபவ அறிவும், தன்னைத்தானே உணரும் சக்தியும் அதிகரிக்கும்.

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் மிக உயர்ந்த உன்னத நிலையை அடைய முடியும். கடன் வாங்கவும் கூடாது. கடன் கொடுக்கவும் கூடாது. முறையான திட்டமிடுதல் சங்கடங்களைத் தீர்க்கும்.

வீடு, வாகன யோகம் சித்திக்கும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்று மொழி கற்பதில் ஆர்வம் உண்டாகும். சகாய குருவின் நல்லாசியால் கடந்த காலத்தில் இருந்த சண்டைகள், தோல்விகள், மன வருத்தங்கள் அகலும்.நீண்ட நாள் கனவுகள் நிறைவேறி மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து திட்டமிட்டு செயல்படுவது நல்லது.உங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சிலருக்கு இல்வாழ்க்கையில் ஈடுபாடு இருக்காது. சிலர் கெளரவ அடிமையாக அல்லாடுவார்கள். சிலர் அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து எந்திரம், மந்திரம்,தந்திரம் என அழைந்து மிகுதியான பொருள் விரயத்தை சந்திப்பார்கள். சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும்.

பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டில் வாழ்பவர்களின் வாழ்க்கை வசந்தமாகும்.சிறு தடை தாமதத்திற்குப் பிறகு திருமண முயற்சி வெற்றி தரும். தீர்த்த யாத்திரை செல்லுதல், தானதர்மம் செய்வதில் ஆர்வம் மிகும். வெளிநாட்டு வாழ்க்கையை மனம் விரும்பும்.

வந்த வாக்கிலும், போன வாக்கிலும் வாழ்ந்து விதி மேல் பழி போட்டு வாழ்ந்தவர்களை குச்சி வைத்து மிரட்டி சனி பகவான் சம்பாதிக்க வைப்பார்.புத்திர பிராப்த்தி கிட்டும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும்.

ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சாதாரண தரையில், பஞ்சு மெத்தையில் படுத்தாலும் மன சஞ்சலமின்றி நிம்மதியாக தூங்குவீர்கள்.

பொருளாதாரம்:

எந்த கிரகமும் கொடுக்க முடியாத தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை ஒரு மனிதனுக்கு வழங்குவது பணம். கடந்த ஓராண்டாக தன ஸ்தானத்தில் நின்று குரு பகவான் வழங்கிய பொருளாதாரத்தை இந்த ஆண்டு லாப ஸ்தானத்திற்குள் செல்லும் ராகு பகவான் வழங்குவார்.

தன ஸ்தானத்தைப் பார்க்கும் சனி பகவான் லட்சங்களில் பணம் கொடுப்பார். பாக்கிய ஸ்தானத்தை பார்க்கும் குருபகவான் கோடிகளை கண்ணில் பார்க்கும் பாக்கியத்தை வழங்குவார். உங்களுக்கு கிடைக்கப் போவது கோடியா, லட்சமா இல்லை பூஜ்ஜியமா என்பதை உங்களின் தசா புத்தியே நிர்ணயிக்கும்.

பாலிசி முதிர்வு தொகை, பூர்வீகச்சொத்து, பங்கு சந்தை முதலீடு என எதிர்பாராத பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். சிலருக்கு வரவுக்கு மீறிய செலவால் அவஸ்தை இருக்கும். விண்ணப்பித்த கடன்தொகை கிடைக்கும். வரக் கூடிய பணத்தை பிரயோஜனமாக பயன்படுத்தி சுப விரயம் பண்ணுவது உங்கள் கையில் தான் இருக்கிறது.

அசுவினி

உங்களின் முயற்சிக்கு பல மடங்கு நற்பலன் கிடைக்கும் என்பதால், இந்த காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சபைகளில் புகழ் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உண்டு. சுயமாக நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

வேலை இழப்பு, தொழில் நட்டம் போன்றவற்றால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும்.சுய தொழில் செய்பவர்கள் , ஒப்பந்த ஊழியர்கள், நிறுவனத்தின் மேலதிகாரி போன்ற தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மிகவும் உன்னதமான காலமாக இருக்கும். மனக் கவலைகள், மன அழுத்தம், வேலையில் இருக்கும் இடர்பாடுகள் முழுவதுமாக குறையும்.

பரணி

மன சஞ்சலங்கள் குறையும்.லாப ஸ்தான ராகுவால் தன வரவில் தன் நிறைவு ஏற்படும்.ஆன்ம பலம் அதிகமாகும். நேர்மறை எண்ணங்கள் கூடும். அதிர்ஷ்டம் ஆதரிக்கும்.தந்தையார் மூலம் பொருள் வரவு, தந்தை வழி சொத்தின் மூலம் வருமானம் வரும். வராக்கடன்கள் வசூலாகும். குடும்ப உறவுகளிடம் புரிதல் உண்டாகும். பிணக்குகள் தீரும். சொந்தவீடு, மனை, வாகனம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சொத்து விஷயங்களில் இருந்து வந்த வம்பு வழக்குகள் குறையும்.

தம்பதிகள் தேவையற்ற பேச்சு மற்றும் முன் கோபத்தை குறைப்பது நல்லது.சமுதாய அங்கீகாரம், கவுரவம் கிடைக்கும். மத நம்பிக்கை அதிகரிக்கும். நீதி, தர்மம், சட்டத்திற்கு முக்கியத்துவம் தருவீர்கள்.அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். அரசியலால் ஆதாயம் உண்டு.

கிருத்திகை 1

அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்பவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.தடை பட்ட முயற்சிகள் துரிதமாகும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சுறுசுறுப்பும் செயல்திறனும் கூடும்.எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும். வீண் அலைச்சல், துக்கம் விலகும்.

குடும்பத்தில் சில பிரச்சினைகள் தடைகள் வந்தாலும் குருப் பார்வையால் சுமூகமாகும்.நல்ல தசாபுத்தி நடைபெறும் பட்சத்தில் மிக மிக சாதகமான நன்மைகள் நடைபெறும். மன நிம்மதியும், முன்னேற்றமும் உண்டாகும். குழந்தை பேறு கிடைக்கும். பிள்ளைகளின் திருமணத் தடை அகலும். தந்தையின் பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த தீராத சிக்கல்கள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

திருமணம்

ஏழரை சனியின் காலத்தில் சுய ஜாதகத்தில் எவ்வளவு தடை இருந்தாலும் அவை தகர்ந்து திருமணம் நடைபெறும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த வரன்கள் இப்பொழுது முடிவாகலாம். ஏதேனும் காரணத்தால் நிச்சயம் செய்து நின்று போன திருமணங்களும் சுபமாக நடைபெறும்.

திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். சிலருக்கு காதல் உருவாகி அதுவே திருமணத்தில் முடியக் கூடிய நல்ல நேரம் ஆகும்.

பெண்கள்

நியாயம், தர்மம், நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டிய நேரம். உத்தியோக நெருக்கடிகளை சமாளிக்க பழக வேண்டும். சில புதிய பெண் தொழில் முனைவோர்கள் உருவாகுவார்கள்.வீட்டிலும் உத்தியோகத்திலும் வேலைப்பளு மிகுதியாக இருக்கும்.புதிய சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணம் உண்டாகும்.

மாமியார் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்.விலை உயர்ந்த பொருட்களை நகைகளை இரவல் வாங்குவது, கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.சிலரின் விவாகரத்து வழக்கு சாதகமாகும்.

மாணவர்கள்

நீண்ட காலமாக தடைபட்ட உயர் ஆராய்ச்சி கல்வி வாய்ப்பு சாதகமாகும்.பாஸ் பண்ண முடியாத அரியர்ஸ் பாடத்தை எழுதி பாஸ் பண்ண உகந்த நேரம். கற்ற கல்வியால் பயன்உண்டாகும். விளையாட்டு போட்டி, கட்டுரை கவிதை போட்டி போன்றவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

தேவையற்ற நட்புகளை தவிர்தால் வருங்காலம் பிரகாசமாகும்.அரசு பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறமுடியும்.பெற்றோர்கள் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுப்பார்கள்.

முதலீட்டாளர்கள், வியாபாரிகள்

எதார்த்தமாக வாழ்வீர்கள். எதற்காகவும் பெரியதாக அலட்டமாட்டீர்கள்.இந்த ஒரு வருடத்தில் பல தொழில் பற்றிய அனுபவங்கள் உங்களிடம் இருக்கும். உங்களுடைய தொழில் ஞானம் பிறருக்கு பயன்படும் ஆனால் உங்களுக்கு பயன்படாது.தொழில் ஒப்பந்தங்களை நன்றாக படித்த பின்பு கையெழுத்திடவும்.

அனைத்து விதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளிக்கும் தைரியம், மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்..தடைபட்ட அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். அழகு ஆடம்பர பொருட்கள் வெள்ளி, நவரத்தின வியாபாரிகள் ஏற்றம் பெறுவார்கள். விரும்பிய கடன் தொகையை அரசுடைமை வங்கிகளில் பெறுவது உத்தமம்.

பரிகாரம்:

வெள்ளியிலான ஆபரணத்தை உடலில் அணிய எதிர்மறை சிந்தனை குறைந்து சிந்தித்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். ஜென்ம நட்சத்திர நாளில் துர்க்கை, காளி மற்றும் ப்ரத்யங்கரா தேவி போன்ற உக்ர தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடவும்.

Similar News