கும்பம் - ஆண்டு பலன் - 2026

2026 புத்தாண்டு ராசிபலன்

Published On 2025-12-23 17:22 IST   |   Update On 2025-12-23 17:23:00 IST

உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசியினரே அனுபவ அறிவால் வெற்றி பெறும் கும்ப ராசியினருக்கு 2026ம் ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள் பொறுப்புடன் செயல்படு வீர்கள். கடந்த கால கஷ்டங்கள் விலகும். எண்ணங்களில் பிரம்மாண்டம் இருக்கும். லட்சியங்களையும் கனவுகளையும் நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.வாழ்க்கை வசந்தமாக இருக்கும்.திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.புகழ் அந்தஸ்து கவுரவம் உயரும். சிந்தித்து செயல்பட்டு செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள்.

குருவின் சஞ்சார பலன்கள்

கும்ப ராசிக்கு 2,11ம் அதிபதியான குரு பகவான் மே மாதம் 2ம் தேதி வரை வரை பஞ்சம ஸ்தானத்திலும் ஜூன் மாதம் முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும் நின்று பலன் தருவார். சுமார் ஐந்து மாத காலங்களுக்கு ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் சுப பலன்கள் கூடிவரும். திருமணம் குழந்தை பிராப்தம் போன்றவற்றில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். குல தெய்வ அருள் கடாட்சம் கிடைக்கும்.ஆன்மீக பயணங்கள் அதிகமாக மேற்கொள்வீர்கள்.அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு வேலை மாற்றம் செய்யக் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு பல மடங்கு நன்மையான பலன்கள் நடக்கும். வருமானம் உயரும். விண்ணப்பித்த வீடு வாகன கடன் கிடைக்கும். நிரந்தரமற்ற வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரமாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. செலவு குறையும் சேமிப்பு உயரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தென்படும். சில மறைமுக எதிர்ப்புகள், போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் வெற்றி உறுதி. பணப்பற்றாக்குறையால் அவமானங்களை சந்தித்த நீங்கள் பொருளாதாரத்தை பெருக்க பல புதிய வழிகளை தேர்ந்தெடுப்பீர்கள். தொழில் மற்றும் உத்தியோக விசயமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும்.தாயின் அன்பும் ஆதரவும் நல் ஆசியும் கிட்டும். தாயாருக்கும் இருந்த உடல் ரீதியான மனரீதியான தொந்தரவுகள் நீங்கும்.

சனியின் சஞ்சார பலன்கள்

ராசி அதிபதி சனி பகவான் இந்த 2026ம் வருடம் முழுவதும் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். இதுவரை சமுதாயத்திற்கு வெளி யுலகத்திற்கு தெரியாமல் இருந்த உங்கள் திறமை பாராட்டப்படும் காலம். பல வருடங்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு அற்புத சந்தர்ப்பம் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்பு உங்களுக்கு பெரிய வாழ்வியல் மாற்றத்தை தரப் போகிறது. சிலர் காலத்தால் அழியாத படைப்புகளைப் படைத்து சாதனை படைப்பீர்கள். வெளிநாட்டிற்கு சென்று வருவீர்கள். அதிக அலைச்சல் இருக்கும். போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். ஆனால் பண வரவில் தடை தாமதம் ஏற்படலாம் என்பதால் பண விஷயத்தில் யாரையும் நம்ப கூடாது. குடும்ப பிரச்சனைகள் அகலும். மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள் விலகும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாழ்க்கை அமையும்.கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம்.அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள். பூர்வீக சொத்து அல்லது தாய் வழி சொத்து வீடு, கட்டிடம் நிலம் போன்றவற்றில் இருந்த எல்லைத் தகராறு சீராகும். பாகப் பிரிவினையால் மன சங்கடம் சீராகும். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்குவீர்கள். அந்தஸ்தை விமர்சிக்கும் விதமான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி வீட்டை அழகு படுத்துவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட குல தெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் முயற்சி வெற்றி தரும்.

ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்

ஆண்டின் துவக்கத்தில் ராசியில் ராகுவும் சம சப்தம ஸ்தானத்தில் கேதுவும் நிற்கிறார்கள்.டிசம்பர் 5, 2026 முதல் 12ம்மிடத்தில் ராகுவும் 6ம்மிடத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். ராசியில் ராகு நிற்பதால் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு கண் இமைக்கும் நேரத்தில் தவறான தொழில் முதலீட்டில் ஈடுபட நேரும்.சிறிய முதலீட்டில் பெரிய லாபத்தை தந்து தவறான பெரிய முதலீட்டில் வம்பு வழக்குகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் தொழில் தொடர்பான புதிய முயற்சிகளில் மிகுந்த கவனம் தேவை.விசுவாசமான வேலையாட்கள் உங்களை விட்டு விலகிப் போவார்கள். நம்பகமான வேலையாட்கள் இன்மை உங்களுக்கு நிம்மதியின்மையை தரும்.உடன் வேலை பார்பவர்கள் தாங்கள் செய்த தவறை உங்கள் மேல் திருப்பி விடலாம்.மேலாதிகாரியிடம் அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனை இல்லாமல் இந்த காலகட்டத்தை கடக்க முடியும். வேற்று மொழி கற்கும் ஆர்வம் உண்டாகும். மாணவர்கள் நன்றாக படித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.சிலர் குடியிருக்கும் வீட்டை சகாய விலைக்கு வாங்கி மகிழ்வீர்கள். கால்நடை வளர்ப்பவர்கள் விலங்குகளை கவனமாக பராமரிக்க வேண்டும்.

அவிட்டம் 3, 4

சுப பலன்கள் அதிகரிக்கும் வருடம். சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். தலைமைப்பதவி தேடி வரும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை உங்களுக்கு இல்லை.மூத்த சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. அனைத்து சங்கடங்களும் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்ற நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும். தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும்.வேலைப்பளுவும் அலைச்சலும் அதிகரிக்கும்.புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும்.திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். உடல் நலம் மற்றும் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பூர்வீகம் தொடர்பான விசயங்கள் விரைவில் முடிவிற்கு வரும். ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.

சதயம்

குடும்பத்தில் நிம்மதி கூடும் வருடம். ராசி அதிபதி சனி பகவான் தன தன ஸ்தானத்தில் தன லாபாதிபதி குருவின் பார்வை பெறுவதால் தன யோகம் சிறப்பாக அமையும். கணவன், மனைவி ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும். தாய், பிள்ளை உறவில் பாசமும் உற்சாகம் அதிகமாகும். நண்பர்கள், உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும்.மனைவி மூலம் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். சிலருக்கு மறுமண யோகம் ஏற்படும். உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம். விவசாய நிலத்தில் கிணறு வெட்ட, போரிங் போட நல்ல ஊற்று கிடைக்கும்.அண்டை அயலாருடன் ஏற்பட்ட மனபேதம் சீராகும். பருவ வயதினருக்கு சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு கடல் கடந்து வேலை செய்யும் யோகம் உண்டாகும். வம்பு, வழக்குகளில் இருந்து மீள்வீர்கள். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். வியாழக்கிழமை ஸ்ரீ சாய்பாபாவை வழிபடவும்.

பூரட்டாதி 1, 2, 3

தடைகள் விலகும் வருடம். எடுக்கும் முயற்சிகளில் படிப் படியான முன்னேற்றமும் முடி வில் வெற்றியும்உண்டாகும்.உத்தி யோகத்தில் நிலவிய சங்கடங்கள்விலகும். வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். தொழிலில்உண் டான நெருக்கடிகள் நீங்கும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்வார்கள். வருமா னத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவனத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும். சுப கடன் வாங்கி பூமி, வீடு, வாகன, வசதியை பெருக்குவீர்கள். செளக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். ராசி அதிபதியை குரு பார்ப்பதால் கடந்த காலத்தில் நடந்த கருத்து வேறுபாடு மற்றும் மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும் கூடும். தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாழக்கிழமை ஸ்ரீ லட்சுமி குபேரரை வழிபடவும்.

பரிகாரம்: ஸ்ரீ வராகி அம்மனை வழிபட வாழ்க்கையில் எந்தவித தடங்கலும் வராது.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News