கும்பம் - ஆண்டு பலன் - 2026

2025 புத்தாண்டு ராசிபலன்

Published On 2025-01-01 09:55 IST   |   Update On 2025-01-01 09:57:00 IST

விரயங்களை சுப விரயமாக மாற்றுங்கள் கும்ப ராசி நேயர்களே!

புத்தாண்டின் தொடக்கத்திலேயே ஜென்மச் சனியின் ஆதிக்கமும், தன-லாபாதிபதியான குருவின் வக்ரமும் இருப்பதால் மிகுந்த கவனம் தேவைப்படும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அடிக்கடி உடல் நலமும், மன நலமும் ஒத்துழைக்காமல் போகலாம். அஷ்ட மத்துக் கேதுவின் மாற்றமும், குருப் பெயர்ச்சியும் அதிக நன்மைகளை வழங்கும் என்பதால் அதுவரை பொறுமையோடு இருங்கள். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு முழுமையான நற்பலன்கள் வந்துசேரும்.

புத்தாண்டின் கிரக நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி ஜென்மச் சனியாக சஞ்சரிக்கிறார். எனவே ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும். உறவினர் பகை உருவாகும். எதையும் சரிவர செய்ய இயலாது. இருப்பினும் பொங்குச் சனி காலமாக இருந்தால் ஓரளவு நற்பலன்கள் கிடைக்கும். பணத்தேவை அதிகரிக்கும். ஆனால் வருமானம் குறைவாகவே இருக்கும். ஒரு காரியத்தை செய்யலாமா? வேண்டாமா? என்ற இரட்டை மனநிலை உருவாகும். தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

ஆண்டின் தொடக்கத்தில் தன - லாபாதிபதியான குரு வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே தன வரவில் தடை ஏற்படும். பிறரிடம் ஒப்படைத்த வேலை நடைபெறாமல் போவதுடன், வீண் பழியும் வந்துசேரும். எனவே எதையும் உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். அஷ்டமத்துக் கேதுவின் ஆதிக்கத்தால் தடை, தாமதம் உருவாகும். யோக பலம் பெற்ற நாளில் ராகு - கேதுகளுக்குரிய பாிகாரத்தை செய்தால், நினைத்தவை நடந்தேறும்.

கும்ப - ராகு, சிம்ம - கேது

26.4.2025 அன்று ராகு - கேதுக் களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. உங்கள் ராசியில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ஜென்மத்தில் ராகு சஞ்சரிக்கப் போவதால் ஆரோக்கியத் தொல்லை உருவாகும். எதைச் செய்தாலும் சிந்தித்துச் செய்யுங்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும். வருமானம் திருப்தியாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

சப்தம ஸ்தானத்தில் கேது இருப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். வாழ்க்கை துணையோடு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்லுங்கள். வாகனங்களில் செல்லும் பொழுதும் கவனம் தேவை. தொழிலில் பணியாளர்களை அனுசரித்து வைத்துக்கொள்வது நல்லது. புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் ஆர்வம் கூடும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். பிறரை நம்பி எதுவும் செய்ய இயலாது.

மிதுன - குரு சஞ்சாரம்

11.5.2025 அன்று குரு பகவான், மிருகசீர்ஷம் 3-ம் பாதத்தில் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை உங்கள் ராசியிலும் 9, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. இது ஒரு இனிய காலமாகும். ராசியை குரு பார்ப்பதால் சிக்கல், சிரமங்கள் விலகும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். அரைகுறையாக நின்ற பணிகள் ஒவ்வொன்றாக நடைபெறும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள். பொதுவாழ்வில் பொறுப்புகள் தேடிவரும்.

குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் ஒளிமயமான எதிர்காலம் அமையும். நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். சொத்துகளை பங்கிட்டுக் கொள்வதில் சகோதரர் களுக்குள் இருந்த பிரச்சினை தீரும். ஒரு சிலா் முன்னோர்கள் கட்டிய கோவிலுக்கு திருப்பணி செய்வர். தொட்ட காரியங்கள் வெற்றியாகும்.

குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் லாப ஸ்தானம் பலம் பெறுகிறது. எனவே பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் அடி யெடுத்து வைக்க முக்கிய புள்ளிகள் உதவியாக இருப்பர். தொழிலை விரிவு செய்ய கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

கும்ப - சனி சஞ்சாரம்

வருடத் தொடக்கம் முதல் கும்ப ராசியிலேயே சனி சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 3, 7, 10 ஆகிய இடங்களில் பதிகிறது. முன்னேற்றப் பாதையில் சில சறுக்கல்கள் வரலாம். கடன் சுமை அதிகரிக்கும். வாழ்க்கை துணையோடு அனுசரித்துச் செல்லுங்கள். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். பெற்றோரின் உடல்நலன் கருதி, ஒரு பெரும் தொகையை செலவிடுவீர்கள். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு, நிர்ப்பந்தம் காரணமாக பொறுப்புகள் மாறலாம்.

கடக - குரு சஞ்சாரம்

வருடத் தொடக்கத்தில் மிதுன ராசிக்குச் செல்லும் குரு பகவான், 8.10.2025 அன்று கடக ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறாா். அங்கு 19.12.2025 வரை இருக்கும் அவா், உச்சம் பெற்று பலம் பெறுகிறாா். அவரது பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது.

குடும்ப ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினா்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். கடுமையாக உழைத்தும் இதுவரை முடிவடையாத காரியங்கள், இப் பொழுது படிப்படியாக நடைபெறும்.

குருவின் பார்வை 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். பிரார்த்தனை பலிக்கும். பிள்ளை களின் பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் தென்படும். வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் மூலமாக சில பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வீண் விவாதம் வேண்டாம். குரு கவசம் பாடி குருவை வழிபடுங்கள்.

குருவின் வக்ர காலம்

18.11.2025 முதல் 19.12.2025 வரை கடகத்திலும், 20.12.2025 முதல் 31.12.2025 வரை மிதுனத்திலும் குரு வக்ரம் பெறுகிறார். பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும். எதை செய்ய நினைத்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். நிலம் சம்பந்தப்பட்ட வகையில் பிரச்சினைகள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தர்கள் குரலுக்கு, உயர் அதிகாரிகள் செவி சாய்க்க மறுப்பர். வளர்ச்சிப் பாதைக்கு வழிபாடு அவசியம்.

சனியின் வக்ர காலம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், 2.7.2025 முதல் 17.11.2025 வரை வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் வக்ரம் பெறுவதால் கவனம் தேவை. ஆரோக்கியத் தொல்லையால் மருத்துவ செலவு கூடும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். நீங்கள் நன்மையே செய்தாலும், அது மற்றவர்களுக்கு தீமையாகவே தெரியும்.

'தான் உண்டு தன் வேலை உண்டு' என்று இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். விரயங்களை சுப விரயமாக மாற்றுங்கள். சனி வக்ர காலத்தைப் போலவே, செவ்வாய் - சனி பார்வை காலத்திலும் மிக கவனமாக செயல்பட வேண்டும்.

Similar News