ஆன்மிக களஞ்சியம்

ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோவில்

Published On 2023-06-24 10:51 GMT   |   Update On 2023-06-24 10:51 GMT
  • ஜோடியாக வீற்றிருக்கும் ‘உச்சிஷ்ட விநாயகரை’ வழிபட்டால், தம்பதி ஒற்றுமை பலப்படும்.
  • செல்வம் பெருகுவதற்கு கொழுக்கட்டையும், குழந்தை வரத்திற்கு சர்க்கரை பொங்கலையும், நோய்கள் தீர வேண்டும் என்றால் கரும்புச்சாற்றையும் நைவேத்தியம் செய்கிறார்கள்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் தலத்தை கொண்டிருப்பது, நம் தமிழகம்தான். அந்த தலம் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீசுவரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது, உச்சிஷ்ட கணபதி கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

கருவறையில், அம்பாளை மடியில் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் 'உச்சிஷ்ட கணபதி' நமக்கும் தரிசனம் தருகிறார். 'உச்சிஷ்ட கணபதி' என்ற திருநாமம் இருந்தாலும், 'மூர்த்தி விநாயகர்' என்றே இவர் அழைக்கப்படுகிறார். பிள்ளையாருடன் வீற்றிருக்கும் அம்பாள், "ஸ்ரீநீலாவாணி" என்று அழைக்கப்படுகிறார். மும்மூர்த்திகளைவிட முதன்மையான கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குவதால், அவரது மடியில் இருக்கும் அம்பாளும் முப்பெரும் தேவியரின் அம்சமாக கருதப்படுகிறார்.

இவரது பெயரில் 'ஸ்ரீ' என்பது லட்சுமியையும், 'நீலா' என்பது துர்க்கையையும் குறிக்கிறது. கலைவாணியை கூறும் வகையில் 'வாணி' என்ற பெயரும் இந்த அம்மனுடன் இணைந்துள்ளது.

இங்கு ஜோடியாக வீற்றிருக்கும் 'உச்சிஷ்ட விநாயகரை' வழிபட்டால், தம்பதி ஒற்றுமை பலப்படும். தாம்பத்திய உறவு மேம்படும் என்கிறார்கள்.

குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகள், இங்கு வந்து விநாயகரை வணங்கினால், வீட்டில் மழலை தவழும் யோகம் விரைவில் கூடி வரும் என்பது ஐதீகம். அதோடு, செல்வம் பெருகுவதற்கு கொழுக்கட்டையும், குழந்தை வரத்திற்கு சர்க்கரை பொங்கலையும், நோய்கள் தீர வேண்டும் என்றால் கரும்புச்சாற்றையும் இங்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில், பை-பாஸ் சாலையை கடந்து சென்றால் இக்கோவிலை சென்றடையலாம்.

Tags:    

Similar News