ஆன்மிக களஞ்சியம்

முருகன் வழிபாடு

Published On 2023-07-24 06:30 GMT   |   Update On 2023-07-24 06:30 GMT
  • வேல் என்பது முருகனது ஞானசக்தி.
  • முருகனது திருக்கை வேல் வழிபாட்டினால் ஆணவத்தையும், தீவினையையும் அழிக்கலாம்.

சமய வாழ்க்கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள் எங்கும் முருகன் எதிலும் முருகன் என்ற நம்பிக்கையுடன் முருக வழிபாட்டில் ஈடுபடுவர். தேவர் குலமும், மனித குலமும் உய்வடைய முருகப் பெருமானின் தோற்றமும், விழுமியங்களும் துணையாக அமைந்தது.

பண்டைய தமிழ் இலக்கியங்கள் முருகனைக் குறிஞ்சித் திணைக்குரிய தெய்வமாகப் போற்றினாலும் அப்பெருமான் உலகம் முழவதும் நிரம்பியிருக்கிறான்.

அவனது திருவருள் எங்கனும் பரவி அருள் பாலிக்கின்றது. இயற்கையழகுடன் கூடிய இடங்களில் அவனது கோயில்கள் எழுந்துள்ளன. காடு, மலை, சோலை, அரங்கம் எங்கனும் அவனுக்குக் கோயில்கள் உண்டு. அதுவே முருகனது தெய்வீகப் பெருமைக்கு சான்று.

மக்களுக்கு உயிர்த்துணையாக விளங்கும் கடவுள் முருகப்பெருமான், அம்மை அப்பனோடு எழுந்தருளி அருள்பாலிக்கும் அற்புத தெய்வம். அடியார்களிடையே நல்லுறவு ஏற்படுத்தும், ஒற்றுமை தெய்வம் வள்ளி தெய்வயானை சமேதராய் விளங்கும் அழகு தெய்வம்.

இத்தகைய சிறப்பினால் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் அடியார்களை உள்ளன்புடன் முருகனைத் தரிசித்து விழிபடும் வண்ணம் ஆற்றுப்படுத்து கின்றார். முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவனாகிய முருகன் யாவும் நிறைவு பெற்ற பு+ரணப் பொருள்.

உபநிடத வாக்கியம் பு+ரணத்தின் சிறப்பைக் கூறும் ஓம் பு+ர்ணமத பு+ர்ணமிதம் பு+ர்;ணாத் பு+ர்ணமுதச்யதே என்ற உபநிடதச் சிந்தனையின் படி பு+ர்ணமாகிய பொருளில் இருந்து பு+ர்;ணம் உதயமாகி உள்ளது என்பது விளக்கப்படுகின்றது.

பு+ர்ணமாகிய சிவப்பரம்பொருளிடம் இருந்து பு+ரணமாகிய முருகப்பெருமான் உதயமாகி உள்ளான் என்றும் கொள்வதில் தவறில்லை. புதியரில் புதியவனாகவும் முடிவிற்கு முடிவானவனாகவும் விளங்கும் முருகன் நினைத்தவுடன் அடியார்களுக்கு அருள்பாலிப்பவன்.

அஞ்சுமுகம் தோன்றில்

ஆறுமுகம் தோன்றும்

நெஞ்சமதில் அஞ்சலென

வேல்தோன்றும் நெஞ்சில்

ஒருகால் நினைக்கில்

இருகாலும் தோன்றும்

முருகா என் றோதுவார் முன்

என்ற பாடல் முருகனது திருவருட் சிறப்பை கூறும். முருகனுக்குள் எண்ணற்ற திருநாமங்கள் அவனது தெய்வீகப் பெருமைகளை எமக்கு உணர்த்துகின்றன.

அவனுக்குரிய திருநாமங்களில் செவ்வேள் என்பது குறிப்பிடத்தக்கது.

முருகனது திருவுருவினை செந்நிறமாகவே கண்டனர். காலைப்பொழுதிற் கண்ணிற்கு இனியதாய் கீழ்த் திசையிற்றோன்றும் இளஞாயிறு செவ்வொளிப் பிழம்பாய்த் தோன்றும் தன்மையைக் கண்டு மகிழ்ந்த மாதர் அவ்வாறு மகிழ்ச்சியைத் தரும் முருகப்பெருமானையும் செவ்வேள் சேஎய் என அழைத்தனர். கந்தபுராணத்தில் கச்சியப்பர் முருகனது தோற்றத்தினைப் பற்றி குறிப்பிடுகிறது.

அருவமும் உருவும் ஆகி

அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்

பிரமமாய் நின்ற சோதிப்பிழம்பதோர்

மேனி ஆகக் கருணைகூர் முகங்கள்

ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே

ஓரு திருமுருகன் வந்தாங்கு

உதித்தனன் உலகம் உய்ய

என்ற பாடல் தரும் கருத்தின் பொருத்தப்பாட்டினையும் இங்கு உவந்து நயக்க முடிகின்றது.

முருகனது வழிபாடு நிகழும் ஆலயங்கள் தென்னாட்டிலும் ஈழத்திலும் பெருமளவில் உள்ளன. முருகனது திருக்கரத்தில் விளங்கும் ஞானவேல் முருகவழிபாட்டில் சிறப்பிடம் பெறுகின்றது.

வேல் என்பது முருகனது ஞானசக்தி முருகப் பெருமானின் துணையை அவனது வேலின் வழிபாட்டால் அடியவர்கள் பெறுவர்.

வீரவேல் தாரைவேல்

விண்ணோர் சிறைமீட்ட

தீருவேல் செவ்வேள்

திருக்கைவேல் வாரி

குளித்த வேல் கொற்றவேல்

சு+ர்மார்ப்பும் குன்றும்

துளைத்தவேல் உண்டே துணை

என்ற நக்கீரரின் பாடல் வேலின் சிறப்பினைக் கூறும். ஞானமாகிய அறிவுக்கு மூன்று பண்புகள் உண்டு. அவை ஆழம், அகலம், கூர்மை என்பன வேலின் அடிப்படைப்பகுதி. ஆழ்ந்தும் இடைப்பகுதி அகன்றும், நுனிப்பகுதி கூர்மையாகவும் இருக்கும். பரம்பொருளின் தத்துவத்தை மணிவாசகர் வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே எனப் போற்று கின்றார்.

இவ்வேலின் தத்துவம் அப்பரம்பொருள் தத்துவத்தை எமக்கு உணர்த்துகின்றது. முருகனது திருக்கை வேல் வழிபாட்டினால் ஆணவத்தையும், தீவினையையும் அழிக்கலாம்.

அருணகிரிநாதர் வேல்வகுப்பு என்ற தனிப்பாடலினால் இந்த ஞானசக்தியைச் சிறப்பாகப் புகழ்ந்துள்ளார். முருகனது திருவுருவ வழிபாட்டுக்கு நிகராக அவனது திருக்கையில் விளங்கும் ஞானவேலினை வைத்து வழிபடும் மரபு பண்டைக்காலம் முதல் இருந்து வருகின்றது. சிலப்பதிகாரத்தில் வரும் வேற்கோட்டம் என்ற குறிப்பு வேலை முருகனாக வழிபடும் மரபை கூறுகின்றது.

Tags:    

Similar News