ஆன்மிக களஞ்சியம்

புதை பொருள் வழிபாடு

Published On 2023-07-21 05:06 GMT   |   Update On 2023-07-21 05:06 GMT
  • அரசமரத்தை சுற்றுவதையும் நோன்பாக கருதுகின்றனர்.
  • அன்றாட நிகழ்வுகள் அனைத்தும் தெய்வத்தை மையமாக வைத்தே நிகழ்கிறது.

கோயில்களிலும் பிற இடங்களிலும் புதையல் இருப்பதாகவும் ஆண்டவனை வழிபட்டால் அப்புதையல் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். இதனால் சில சடங்குகளின் மூலம் புதை பொருளை அடைய முடியும் எனக் கருதி புதை பொருள் வழிபாட்டினை நடத்துகின்றனர். சான்றாக,

"எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையிலே

காக்கா மூக்கின் நிழலிலே

கள்வர் போகும் வழியிலே

கண்டானாம் கம்மாளன் கண்ணிலே"

என்ற நாட்டுப்புறப் பாடல் கம்மாளர் இன மக்கள் புதை பொருள் இருப்பதாகக் கருதி எழுவான், தொழுவான் என்ற சிறுதெய்வத்தை வழிபட்டனர் என்பதை அறிய முடிகிறது.

நோன்பிருத்தல்

குழந்தைப் பேற இல்லாத பெண்கள் வரம் வேண்டித் தெய்வத்தை நினைத்து நோன்பிருத்தல் உண்டு. உணவு உண்ணாமல் கடவுளை வேண்டி இருப்பதனையும் நோன்பு என்பர். அரசமரம் அல்லது வேப்பமரம் வைத்துத் தவமிருப்பதை ஒப்பாரிப் பாடல்கள் உரைக்கும்.

குளித்த பின்னர் ஈரத் துணியுடன் நோன்பிருப்பதைத் தாலாட்டுத் தெரிவிக்கின்றது. பூரண கும்பம் வைத்துப் பொன்னால் விளக்கேற்றி தாமரைப்பூ இட்டுத் தவம் இருப்பதையும், அரசமரத்தை சுற்றுவதையும் நோன்பாகக் கருதுகின்றனர்.

குழந்தை பெற்ற தாய் நோற்ற நோன்பும், அவள் குழந்தையை வளர்க்கும் அருமையும், அவளுக்கு குழந்தை தரும் இன்பமும், உறவினரின் செல்வ வளமும் தாலாட்டுப் பாடல்களில் இடம் பெறுகின்றன. குழந்தையை தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது என்பதைப் பின்வரும் பாடல்கள் உணர்த்துகின்றன.

"ஏ ராராரோ ராராரோ

என் கண்ணே நீ ராராரோ ராரிராரோ

ஏ வேத்திலை திண்ணாக்க

என் கண்ணே விரதம் கலங்கு மின்னு

ஏ கற்புரம் திண்ணல்லவோ

என் கண்ணே உன்னைக்

கண்டெடுத்த ரெத்தினமே" (நேர்காணல் - முசிறி)

வெள்ளி செவ்வா மொளுகி - என் கண்ணே

வெகுநா தவமிருந்து

குனிஞ்சு மொளுகையிலே - எந்தெய்வம்

குழந்தையுனைத் தந்தாரே" (நேர்காணல் - ஏவூர்)

போன்ற நாட்டுப்புறப் பாடல்களால் தாய் குழந்தை பெற விரதம் இருந்தாள் என்பது புலனாகிறது.

வெள்ளி தலை முழுகி - என் கண்ணே

பெருநாளும் தவமிருந்து

அரசமரஞ் சுற்றி வந்து - என் கண்ணே

அருந்தவமா கேட்கையிலே

பாராளும் என் தெய்வம் - என் அறியா

பாலகனைத் தந்தாரே" (நேர்காணல் - முசிறி)

அரச மரத்தைச் சுற்றி வந்து இறைவனை வழிபட்டால் பிள்ளைப் பேறு கிட்டும் என்ற நம்பிக்கை நிலவுவதை மேற்கண்ட பாடலால் அறிய முடிகிறது.

தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கை:-

பழங்காலம் முதல் இக்காலம் வரை தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது. பாரதியார் வண்டிக்காரன் பாடுவதாகப் பாடும் பாட்டில் வழித்துணையாக நம் குலதெய்வம் காப்பதாக பாடுவதைக் காணலாம்

"காட்டு வழிதனிலே - அண்ணே!

கள்ளர் பயமிருந்தால்? - எங்கள்

வீட்டுக் குலதெய்வம் - தம்பி

வீரம்மை காக்குமடா

நிறுத்து வண்டி யென்றே - கள்வர்

நெருங்கிக் கேட்கையிலே - எங்கள்

கருத்த மாரியின் பேர் - சொன்னால்

காலனும் அஞ்சுமடா!"

என்ற பாடலில் மாட்டு வண்டிக்காரர்கள் நெடுந்தூரப் பயணத்தின் பொழுது பயணத்திற்குத் துணையாக தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கையில் பாடுவதைக் காண முடிகிறது.

இவ்வாறாக சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கூறுகள் பொதிந்துள்ளமையைக் காணமுடிகிறது. மேலும், சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டுப்புற மக்களின் அன்றாட நிகழ்வுகள் அனைத்தும் தெய்வத்தை மையமாக வைத்தே நிகழ்கிறது என்பதை இவ்வாய்வின் வழி அறிய முடிகிறது.

Tags:    

Similar News