ஆன்மிக களஞ்சியம்

ஸ்படிக லிங்கம்

Published On 2023-07-30 05:53 GMT   |   Update On 2023-07-30 05:53 GMT
  • உற்சவ மூர்த்தியின் உருவ அமைப்பு வித்தியாசமானது.
  • மணல் குளம் மீது அமர்ந்ததால் விநாயகருக்கு மணக்குள விநாயகர் என்று பெயர்.

1960-களில் மணக்குள விநாயகர் ஆலய தேவஸ்தான நிர்வாகக் குழுத் தலைவராக அட்வகேட் ராமச்சந்திர ரெட்டியார் இருந்தார். செஞ்சியை அடுத்துள்ள வாத்தியில் இருக்கும் இவரது வயலை விவசாயத்துக்காக உழுத போது அழகான ஸ்படிக லிங்கம் ஒன்று பூமியில் இருந்து கிடைத்தது.

அந்த ஸ்படிக லிங்கத்தை 1968-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி மணக்குள விநாயகர் கோவிலுக்கு ராமச்சந்திர ரெட்டியார் கொடுத்துவிட்டார். அவருடைய செலவில் அப்போதைய புதுச்சேரி கவர்னராக இருந்த பி.டி. ஜாட்டி முன்னிலையில் அந்த ஸ்படிக லிங்கம் கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

அன்று முதல் ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த அபிஷேக பூஜையில் பங்கேற்பது சிறப்பானதாக கருதுப்படுகிறது. சிவராத்திரி தினத்தன்று இரவு நான்கு ஜாம பூஜைகள் இந்த ஸ்படிக லிங்கத்துக்கு நடத்தப்படுகிறது.

மிகவும் ராசியான உற்சவ மூர்த்தி

மணக்குள விநாயகர் கோவிலில் இருந்த உற்சவர் சிலை 1950 களில் பழுது பட்டதால் புதிய உற்சவ மூர்த்தியை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. புதுச்சேரியில் குடை வியாபாரம் செய்து வந்த ரா.மா. கோவிந்தசாமி பிள்ளை ஒரு உற்சவர் சிலையை தயாரித்துக் கொடுத்தார்.

3.2.1956-ம் அன்று அந்த உற்சவர் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த உற்சவருக்கும் மணக்குள விநாயகர் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உற்சவ நாட்களிலும், முக்கிய நாட்களிலும் இவர்தான் வீதி உலா செல்வார். இந்த உற்சவர் மிக, மிக ராசியான உற்சவராக கருதப்படுகிறார். ஏனெனில் இவர் இந்த ஆலயத்துக்கு வந்த பிறகுதான் மணக்குள விநாயகரை நாடி வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டதாம்.

இந்த உற்சவ மூர்த்தியின் உருவ அமைப்பும் வித்தியாசமானது. இவரது கண் புருவம் வில் போன்ற அமைப்புடன் உள்ளது. எந்த ஒரு விநாயகர் சிலையிலும் இத்தகைய வில் புருவத்தை காண இயலாது.

மேலும் இந்த உற்சவர் திரிபங்க நிலையில் நின்ற கோலத்தில் காணப்படுகிறார். இதுவும் வித்தியாசமான அமைப்பாக கருதப்படுகிறது.

கருவறைக்குள் ஊறும் தண்ணீர்

மணல் குளம் மீது அமர்ந்ததால்தான் விநாயகருக்கு மணக்குள விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது என்பதை ஏற்கனவே படித்திருப்பீர்கள். இப்போது அந்த குளம் இல்லாவிட்டாலும், அதன் ஒரு சிறு பகுதி கருவறைக்குள் உள்ளது.

மணல் குளம் இருந்ததற்கு அடையாளமாக, விநாயகரின் கருவறையில் அக்னி மூலை எனும் தென் கிழக்கு மூலையில் ஒரு சிறிய பள்ளம் அமைத்துப் பழைய குளக்கரையின் பெருமை மாறாமல் பாதுகாத்து வருகின்றனர்.

கருவறை பீடத்தின் மேல் தகட்டை தூக்கினால், அங்கு அந்த சிறிய பள்ளத்தை பார்க்க முடியும். அதனுள் கை விட்டால் குளக்கரையில் மணல் இருப்பது போன்று மணலை உணர முடியும். இந்த பகுதி இருளாக இருக்கும் என்பதால் குருக்கள் சூடம் காட்டும் போது மட்டுமே தெரியும்.

தினமும் காலை கருவறை வாசலை திறக்கும் போது அந்த பள்ளத்தில் இருந்து குளத்து தண்ணீர்பொங்கி தேங்கி இருக்குமாம். அதை மிகச் சிறந்த தீர்த்தமாக கருதுகிறார்கள்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகில் காணிப்பாக்கத்தில் உள்ள புகழ் பெற்ற விநாயகர் ஆலயத்திலும் கருவறையில் கிணறு மீது விநாயகர் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். அங்கு விநாயகரை சுற்றி கிணற்று நீர் வந்தபடியே உள்ளது. அதை தீர்த்தமாக கருதுகிறார்கள்.

அந்த வகையில் மணக்குள விநாயகரும், காணிப்பாக்கம் விநாயகரும் புனித தீர்த்தத்தின் மீது அமர்ந்து ஒரே மாதிரி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News