search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கூடு விட்டு கூடு பாய்ந்து திருமூலரான சுந்தரநாதர்
    X

    கூடு விட்டு கூடு பாய்ந்து திருமூலரான சுந்தரநாதர்

    • அவ்வாறே இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார் திருமூலர்.
    • ஆண்டுக்கு ஒருமுறை கண் விழித்து ஒரு பாடல் எழுதிவிட்டு மீண்டும் தியானத்தில் இருப்பார்.

    தில்லைத் திருநடனங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டு காவிரியில் நீராடி அதன் தெற்கு கரையினை அடைந்து, உமையம்மையார் பசுக்கன்றின் வடிவில் இறைவனை நோக்கித்தவம் செய்து, அத்தவத்தால் மகிழ்ந்த இறைவனார் இறங்கி வந்து அம்மையை அனைத்து எழுந்து இருவரும் திருமணக் கோலத்தில் அருள்புரியும் திருத்தலமான திருவாவடுதுறையை அடைந்தார்.

    திருவாவடுதுறையில் உள்ள கோமுத்தீஸ்வரர் ஆலய இறைவனை வழிபட்டு விட்டுத் திரும்பச் செல்லும் போது, காவிரிக்கரையில் ஓர் இடத்தில் பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார்.

    அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே பசுக்கனை மேய்க்கும் இடையர் குலத்தில் பிறந்த மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி வந்து வருந்திக் கண்ணீர் விட்டன.

    பசுக்களின் துயர் கண்டு மனம் இறங்கிய சிவயோகியார் அவற்றின் துன்பம் துடைக்க எண்ணினார்.

    எனவே, தம்முடைய உடலை மறைவான இடத்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு, கூடுவிட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் முறையில் தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் செலுத்தினார். இறந்து கிடந்த மூலன் உறக்கத்தில் இருந்தவன் போல சட்டென்று கண் விழித்து திருமூலராய் எழுந்தார்.

    மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்களின் களிப்பைக் கண்டு மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார்.

    வயிராற மேய்ந்த பசுக்கள், காவிரியாற்றின் நீர்த் துறையிலே இறங்கித் தண்ணீர் பருகிவிட்டு கரையேறி, அவற்றின் தினசரி வழக்கப்படி அவற்றின் ஊரான சாத்தனூரை நோக்கி நடக்க ஆரம்பித்தன.

    அவற்றைத் தொடர்ந்து சென்ற திருமூலர், பசுக்கள் தத்தம் வீடுகளுக்கு சென்றதை கண்டார்.

    அதே சமயம் வீட்டில் இருந்து வெளியே வந்த மூலவனின் மனைவி, மூலவன் வடிவிலிருந்த திருமூலரைத் தம் வீட்டிற்கு அழைத்தாள்.

    திருமூலரோ, தான் அவளுடைய கணவன் அல்ல என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார்.

    அதைக்கேட்டு வியப்புற்ற அவள், தன் கணவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அந்த ஊரில் உள்ள பெரியவர்களிடம் சென்று முறையிட்டாள்.

    ஊர் பெரியவர்கள் வந்து விசாரிக்க திருமூலர் தான் ஏற்றிருந்த மூலவனின் உடலில் இருந்து உயிர் விலகி ஒரு இறந்த ஆட்டின் உடலில் சென்று தாம் ஒரு சிவயோகியார் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டு, மறுபடியும் மூலவனின் உடலில் புகுந்தார்.

    இந்த அதிசயத்தை கண்ட அந்த ஊர் பெரியவர்கள், மூலவனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

    அனைவரும் கலைந்து சென்றபின், திருமூலவர் தாம் மறைவான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த தமது திருமேனியைத் தேடினார்.

    அது அங்கு இல்லாததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தவர், பின்பு யோக நிலையில் அமர்ந்து தனது மேனியைப் பற்றிய உண்மையை உணர முயன்றார்.

    இறைவன் அருளிய வேத ஆகமப் பொருள்களைத் தமிழிலேயே வகுத்து உலகோர்க்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக இறைவன் தம் உடலை மறைத்து அருளி உள்ளார் என்பதை உணர்ந்து கொண்டார்.

    அவ்வாறே இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார் திருமூலர்.

    சாத்தனூரில் இருந்து புறப்பட்ட திருமூலர், மீண்டும் திருவாவடுதுறையில் உள்ள கோமுத்தீஸ்வரர் ஆலயத்தை அடைந்து, மூலவர் பெருமானை பணிந்துவிட்டு, கோவிலுக்கு வெளியே அமைந்துள்ள அரச மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார்.

    ஆண்டுக்கு ஒருமுறை கண் விழித்து ஒரு பாடல் எழுதிவிட்டு மீண்டும் தியானத்தில் இருப்பார்.

    இவ்வாறாக மூவாயிரம் ஆண்டுகள் தியானம் செய்து, உலகோர் பிறவித் துன்பத்தில் இருந்து நீங்கி உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளையும் வகுத்தும், தொகுத்தும், விரித்தும் மூவாயிரம் பாடல்களாக வழங்கினார்.

    இந்த மூவாயிரம் பாடல்கள் முதலில் "தமிழ் மூவாயிரம்" என்ற பெயரிலேயே வழங்கப்பட்டது.

    பிற்காலத்தில் வந்த சான்றோர்கள், திருமந்திரத்தில் நிரம்பி இருந்த மந்திரங்களும், சில தந்திரங்களும், மனித ஸ்தூல சரீரத்துக்கு தேவையான எல்லாவற்றையும் விளக்கி உள்ளபடியால், அதை திருமூலர் அருளிய திருமந்திரம் என்று மாற்றி வைத்தார்கள்.

    Next Story
    ×