என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆட்சீஸ்வரர் கோவில் அமைப்பு
    X

    ஆட்சீஸ்வரர் கோவில் அமைப்பு

    • கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே உள் வாயில் உள்ளது.
    • இந்த ஆட்சீஸ்வரர் தான் இவ்வாலயத்தின் பிரதான மூலவர்.

    அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் 5 நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.

    கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே உள் வாயில் உள்ளது.

    கோபுர வாயிலைக் கடந்தவுடன் நேராக இல்லாமல் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை சற்று விலகி அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் இங்குள்ள இரண்டு மூலவர்கள் சந்நிதியாகும்.

    கோபுர வாயிலுக்கு நேரே உள்ள உள் வாயில் வழியாகச் சென்றால் நேர் எதிரே உமையாட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது.

    உள் வாயில் நுழைந்தவுடன் சற்று வலதுபுறத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றிற்கு எதிரே ஆட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது.

    இந்த ஆட்சீஸ்வரர் தான் இவ்வாலயத்தின் பிரதான மூலவர்.

    சுயம்பு மூர்த்தியான இவர் லிங்க வடிவில் குட்டையான பாணத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

    இவர் குடியிருக்கும் கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்களாக சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் காணப்படுகின்றனர்.

    தாரகனுக்கு அருகில் விநாயகரும், வித்யுன்மாலிக்கு அருகில் வள்ளி தெய்வானையுடன் முருகரும் உள்ளனர்.

    கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

    ஆட்சீஸ்வரர் சந்நிதியை சுற்றி வலம் வர வசதி உள்ளது.

    உள் வாயிலைக் கடந்தவுடன் வலதுபுறம் உள்ள ஆட்சீஸ்வரரை தரிசித்துவிட்டு சற்று நேரே மேலும் சென்றால் நாம் உமையாட்சீஸ்வரர் சந்நிதியை அடையலாம்.

    உமையாட்சீஸ்வரர் கருவறை வாயிலில் இருபுறமும் அலர்மேலுமங்கை, ஸ்ரீனிவாச பெருமாள், பழனிஆண்டவர், உற்சவ மூர்த்திகள், லட்சுமி துர்க்கை சரஸ்வதி, ஆறுமுகசாமி ஆகியோரின் சந்நிதிகள் அழகுற அமைந்துள்ளன.

    கருவறைக்குள் உமையாட்சீஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் காட்சி தருகிறார்.

    லிங்க உருவின் பின்புறம் பார்வதியுடன் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.

    அகத்தியருக்கு தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்று.

    அருகில் தனி சிறு சன்னதியில் தெற்கு நோக்கிய உமையாம்பிகை திருஉருவச் சிலையும் உள்ளது.

    ஆலயத்தின் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தலவிருட்சமான சரக்கொன்றை மரம் உள்ளது. சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடி ஈஸ்வரர் சந்நிதி உள்ளது.

    அருகில் நந்திகேஸ்வரரும், சிவனை வணங்கியபடி திரிநேத்ரதாரி முனிவரும் உள்ளனர்.

    பாண்டிய மன்னன் ஒருவனுக்கு இத் தலத்தில் சரக்கொன்றை மரத்தடியில் காட்சியளித்த சிவபெருமான், தனக்கு இவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பச் சொல்ல, மன்னன் அப்போது அங்கு வந்த திரிநேத்ரதாரி முனிவரிடம் ஆலயம் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான்.

    திரிநேத்ரதாரி முனிவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோவிலைக் கட்டினார்.

    கோவிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரை விபரம் கேட்டான்.

    முனிவரும் "அரசரை ஆட்கொண்ட இறைவனுக்காக உமையாட்சீஸ்வரர் சந்நிதியும், தன்னை ஆட்கொண்ட இறைவனுக்கு ஆட்சீஸ்வரர் சந்நிதியும் அமைத்தேன்" என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகின்றது.

    வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் இத்தலத்தின் பிரதான அம்பாள் இளங்கிளி அம்மை தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள்.

    Next Story
    ×