search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அம்மன் உத்தரவுபடி கட்டப்பட்ட கோவில்
    X

    அம்மன் உத்தரவுபடி கட்டப்பட்ட கோவில்

    • அம்மன் உத்தரவுபடி புண்ணிய பூமியில் கோவில் கட்டும் பணி தொடங்கியது.
    • 21 பந்தி தெய்வங்களும் வலதுபுறம் கருப்பசாமி கோவில் உள்ளது.

    நலமைமிகுந் திடுமிருக்கங் குடியினிலெந் நாளும் வளர் ஞான தீப

    நிலமிசையுன் னடிமலரை யனுதினமும் நினைக்குபவர் நெஞ்சினிற்சஞ்

    சலமதற நலமதிடு தயாபரியே யிதுசமயம் தனைய நானுன்

    தலமகிமை கூறவருள் தந்துதவு தாய்மாரி யான நீயே!

    சதுரகிரி மலையில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சிவயோக ஞானசித்தர் என்று ஒரு சித்தர் வாழ்ந்து வந்தார். அம்பிகையை நேரில் பார்த்து தரிசித்து நிஷ்டைபெற அவர் ஆசைப்பட்டார்.

    இதற்காக அவர் கடும் தவம் இயற்றினார். அப்போது அம்பிகை, என்னை காண வேண்டுமானால் அர்ஜுனா நதி, வைப்பாறு சந்திக்கும் இடத்துக்கு வா என்று அசரீரியாக உத்தரவிட்டாள்.

    இதை ஏற்று சித்தர் அங்கு சென்றார். அங்கு அவருக்கு அம்பிகை காட்சி கொடுத்தாள். அந்த காட்சியை வைத்து சித்தர் அம்பிகையின் திருமேனியை உருவாக்கினார்.

    பிறகு அவர் அங்கேயே நிஷ்டையாகி விட்டார். கால சுழற்சியில் இரு ஆறுகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சித்தர் படைத்த அம்மன் சிலை பூமிக்குள் புதையுண்டு போனது.

    சில நூற்றாண்டுகள் அந்த அம்மன் சிலை பூமிக்குள்ளேயே இருந்தது. நாளடைவில் அந்த பகுதி காடுகள் கொண்ட வனமாகிப்போனது.

    சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கன்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள்தங்களது ஆடு, மாடுகளை அந்த காட்டுக்குள் ஓட்டிச் சென்று மேய விடுவது வழக்கம். ஏராளமான மாடுகள் மேய செல்வதால், அவை போடும் சாணத்தை எடுக்க இருக்கன்குடி மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் அந்த காட்டுக்குள் சென்று வருவார்கள்.

    ஒருநாள் இருக்கன்குடி கிராமத்தை சேர்ந்த ராமசாமி பிள்ளையின் மனைவி பரிபூரணத்தம்மாள் என்பவரும் அந்த காட்டுக்குள் சாணம் எடுக்க சென்றார். கூடை நிறைய சாணத்தை நிரப்பிய அவர் கூடையை தூக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை.

    கூடையில் நிறைய சாணம் இருப்பதால்தான் எடை அதிகமாகி விட்டதோ என்று சந்தேகப்பட்ட அவர், கூடையில் இருந்து பாதி சாணத்தை கழித்தார்.

    அதன் பிறகும் அவரால் அந்த கூடையை தூக்க இயலவில்லை. பயங்கரமாக கனத்தது.

    பரிபூரணத்தம்மாளுக்கு இது புரியாத புதிராக இருந்தது. அவருடன் வந்த பெண்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது.

    இதற்கிடையே இதுபற்றிய தகவல் இருக்கன்குடி முழுவதும் பரவியது. ஊர் பெரியவர்களும், பொது மக்களும் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் சாண கூடையை எடுக்க முயன்றனர். அவர்களாலும் கூடையை தூக்க முடியவில்லை.

    இந்த நிலையில் பரிபூரணத்தம்மாள் திடீரென அருள் வந்து சாமி ஆடினார்.

    அவர், நான் மாரியம்மன் வந்து இருக்கிறேன். என் திருமேனி இந்த கூடைக்கு கீழ் புதைந்து இருக்கிறது. இங்கிருந்து அதை தோண்டி எடுத்து வழிபடுங்கள். உங்கள் குறைகளை எல்லாம் நான் தீர்த்து வைப்பேன் என்றார்.

    உடனே ஊர்மக்கள் அந்த இடத்தில் தோண்டிப் பார்த்தனர். அம்மன் சொன்னது போலவே அங்கு மாரியம்மனின் திருமேனி இருந்தது.

    இதை கண்டதும் ஊர் மக்களுக்கு ஆச்சரியம் மேலும் அதிகரித்தது.

    பரிபூரணத்தம்மாளிடம் ஊர்க்காரர்கள் மெல்ல தயங்கியபடி, அன்னையே, தாங்கள் யாரோ? நாங்கள் ஏதும் செய்ய வேண்டுமா... அதை திருஉளம் பற்றி சொல்ல வேண்டும் என்றனர்.

    உடனே பரிபூரணத்தம்மாள், அன்பர்களே... நான் ஜெனித்தது காஞ்சீபுரம். என் பெயர் கண்ணனூர் மாரி. சமயபுரம் மாரி என்றும் சொல்வார்கள்... இன்னும் சில வேறு பெயர்களும் எனக்கு உள்ளது.

    இதே இடத்தில் இருந்து ஒரு பர்லாங்குக்கு தென் மேற்கில் என்னைக் கிராம தேவதையாக வைத்து வெகுகாலம் பூஜித்து வந்தனர். ஆற்று வெள்ளத்தில் கோவில் சேதம் அடைந்தது. சில ஜனங்கள் ஊரை விட்டு வெளியேறி சென்று விட்டனர்.

    மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட நான் இந்த இடத்தில் மணலால் மூடப்பட்டு இருந்தேன். இனி என் பெயர் துலங்கவும் என்னை நம்பும் பக்தர்களுக்கு சேமம் கொடுக்கவும், உலக மக்களை காக்கும் பொருட்டு தோன்றியுள்ளேன் என்றார்.

    அடுத்து பரிபூரணத்தம்மாளிடம், சரி நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டனர்.

    அதற்கு பரிபூரணத்தம்மாள், எனக்கு சன்னதி அமையுங்கள். என் சிலையை வைத்து பூஜிப்பவர்களின் வம்சத்தை எவ்வித இடையூறும் இன்றி புத்திர சம்பத்துடனும் பரம்பரை செல்வங்களோடும் என்றைக்கும் பாதுகாப்பேன். இது முக்காலும் சத்தியம், சத்தியம் என்றார்.

    பிறகு பரிபூரணத்தம்மாள், என்னை பூஜிக்க முன் வருவது யார்? சொல்லுங்கள் வலக்கை தருகிறேன் என்றார். ஊர்மக்கள் அனைவரும் அமைதியாக நின்றனர். அப்போது பரிபூரணத்தம்மாள், தன் கணவர் ராமசாமி பிள்ளையிடம் கேட்க, அவர் கொஞ்சமும் தயங்காமல் எல்லாம் ஈஸ்வரி செயல் என்று கை கொடுத்தார்.

    பின்னர் அவர் தன் வலது தொடையை கீறி அங்கிருந்த அம்மன் சிலைக்கு ரத்த அபிஷேகம் செய்தார்.

    இதையடுத்து அம்மன் சிலை பூமியில் இருந்து முழுமையாக வெளியில் எடுக்கப்பட்டது.

    அடுத்து இந்த சிலையை எந்த இடத்தில் வைப்பது என்ற கேள்வி எழுந்தது. பரிபூரணத்தம்மாள் மீண்டும் சாமியாடி அருள்வாக்கு கூறினார். பக்த கோடிகளே, ஒரு பக்தன் வெகுகாலமாக என்னை நோக்கி தவம் இயற்றினான். அந்த ஞானசித்தன் இருக்கும் இடத்தில் எனக்கு கோவில் அமையுங்கள் என்றார்.

    ஆனால் இது ஊர் மக்களுக்கு புரியவில்லை. எனவே அந்த சிலையை ஊருக்குள் எடுத்து சென்று வைத்து வழிபட்டு வந்தனர். அடுத்த மூன்றாவது நாள் பரிபூரணத்தம்மாளுக்கு மீண்டும் அருள் வந்தது.

    பக்தர்களே... உலக்கை சத்தமும், முறம் சத்தமும் என் செவி புகாதிருக்க வேண்டும். எனவே என்னை கண்டெடுத்த பகுதியில் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள் என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், எனக்கு அமைக்கப்படும் ஆலயத்தில் கொடி மரம், ரிஷபம், பலிபீடம், சுற்றிலும் 21 பந்தி தெய்வங்களும் வலதுபுறம் கருப்பசாமி கோவில் அமைக்க வேண்டும் என்றார்.

    அம்மன் உத்தரவிட்டப்படி அந்த புண்ணிய பூமியில் கோவில் கட்டும் பணி தொடங்கியது.

    ஒரு கருவறை, சிறிய முன் மண்டபம் என்று மிக, மிக சிறிய அளவில் அந்த கோவில் கட்டப் பட்டது. 1545-ம் ஆண்டு 119 சுபகிருது வருஷம், சித்திரை மாதம் பூர்வ பட்சம், சுக்கிரவாரம், உத்திர நட்சத்திரத்தில் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் சிவேபாக ஞானசித்தர் நிஷ்டையாகி இருந்த இடத்தில் மாரியம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    அப்போது கிராம அதிகாரிகளும், ஊர் பெரியவர்களும் ராமசாமி பிள்ளையிடம், மாரியம்மன் திருவாக்கு அருள்படி நீயே அடிமை பூண்டவன். எனவே இன்று முதல் உனக்கு மாரியம்மன் கோவில் பூசாரி என்ற பட்டத்தை தருகிறோம் என்றனர்.

    ராமசாமி பிள்ளையும் பூசாரி பட்டத்தை ஏற்றுக் கொண்டார். அன்று முதல் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பரம்பரை அறங்காவலர்களாக கைங்கர்யம் செய்து வருகிறார்கள். அம்மன் திருமேனி 3 நாட்கள் ஊருக்குள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உற்சவர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஆடி மாதம் நடக்கும் பிரமோற்சவ விழாவின் போது மட்டும் உற்சவர் கடைசி வெள்ளிக்கிழமை ரிஷப வாகனத்தில் வந்து, இந்த கோவிலில் ஒருநாள் தங்கி விட்டு செல்வார்.

    Next Story
    ×