search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடித்த சிவகுமார்
    X

    காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடித்த சிவகுமார்

    சத்யா மூவிஸ் தயாரித்த "காவல்காரன்'' படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பியாக சிவகுமார் நடித்தார்.
    1966-ம் ஆண்டின் பிற்பகுதியில் "காவல்காரன்'' படம் தயாராயிற்று. முதன் முதலில் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, சிவகுமாரை அவர் கைகுலுக்கி அன்புடன் வரவேற்றார்.

    இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். தன் தாயார் சத்யா அம்மையார் பற்றியும், குடும்ப நலனுக்காக அவர் செய்த தியாகங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

    சிவகுமாரும் தன் தாயார் பற்றி எம்.ஜி.ஆரிடம் கூறினார்.

    இதுகுறித்து சிவகுமார் எழுதியிருப்பதாவது:-

    "என் தாயாரின் வைராக்கியம், தியாகம், எதற்கும் கலங்காத நெஞ்சுரம், நிலத்தில் கடுமையாகப் பாடுபடும் உடல் நலம் பற்றி எல்லாம் எம்.ஜி.ஆருக்கு தைரியமாக எடுத்துச் சொன்னேன்.

    ஒரு சமயம் அம்மாவின் வலது கை மணிக்கட்டுக்கு மேலே இரண்டு எலும்புகள் ஒடிந்து தொங்கும் அளவுக்கு விபத்து ஏற்பட்டு, ஆறு மாத காலம் எனக்குச் சொல்லாமல் வைத்தியம் பார்த்து கையை சரிப்படுத்திக் கொண்டார். என் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த விபத்து பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை. என் நண்பர்களையும் மிரட்டி, எனக்குக் கடிதம் எழுத விடாமல் தடுத்துவிட்டார்.

    இதை அறிந்ததும், எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.

    இந்த உரையாடல் நடந்து 3 மாதத்தில், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காண யாரும் அனுமதிக்கப்படவில்லை. நான் பலமுறை மருத்துவமனைக்குச்சென்று ஆர்.எம்.வீ. அவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். உடல்நிலைப் பற்றி விசாரித்து விட்டுத் திரும்பிவிட்டேன்.

    எம்.ஜி.ஆர். உடல் நிலை சற்று முன்னேறியதும், அவரைப் பார்க்க என்னை உள்ளே அனுப்பி வைத்தார், ஆர்.எம்.வீ.

    எம்.ஜி.ஆர். படுத்திருந்தார். காவல்காரன் படத்தில், நானும், அவரும் ஒரே ஒருநாள்தான் நடித்திருந்தோம். என் முகம், உடனடியாக அவர் நினைவுக்கு வரவில்லை. கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப்பார்த்தபடி தீவிரமாக யோசித்தார். நான் சிவகுமார் என்பதைத் தெரிந்து கொண்டார்.

    அந்த உடல் நிலையிலும் - கழுத்தில் பெரிய பேண்டேஜ் உறுத்திக் கொண்டிருந்தபோதிலும், முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டு `வாங்க' என்றார்.

    குண்டடிப்பட்ட சமயம், ஊருக்கு போயிருந்ததாக சொன்னேன்.

    அவர் முகத்தில் ஒரு மின்னல் வெட்டு. "ஊருக்கு போனியா... அ...ம்...மா... உன் அம்மா... சவுக்கியமா?'' என்று, விசாரித்தார். என் தாயார் பற்றி நான் கூறிய தகவல்களை மரண வாசல் வரை போய் மீண்டு வந்த அந்த நேரத்திலும் நினைவில் வைத்திருந்து அவர் விசாரித்ததைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.

    எம்.ஜி.ஆர். என்னைத் தேற்றி, "எனக்காக அம்மாவை வேண்டிக்கச் சொல். சீக்கிரம் குணமாகிவிடுவேன்'' என்றார்.

    எம்.ஜி.ஆர். குணம் அடைந்தபின், "காவல்காரன்'' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி வேகமாக நடந்தது.

    7-9-1967-ல் இப்படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.

    1968-ல் ஏவி.எம். தயாரிப்பான "உயர்ந்த மனிதன்'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சிவாஜியின் மகன் வேடம். உயிரே போனாலும் பொய் சொல்லாத ஒரு அப்பாவி இளைஞனாக நடித்தேன்.

    ஒரு மாதம் படப்பிடிப்பு நடந்திருக்கும். எம்.ஜி.ஆர். என்னை அழைத்து, "பூலரங்குடு'' என்ற தெலுங்குப்படத்தைப் போட்டுக் காட்டினார். அப்படத்தில் நாகேஸ்வரராவ் கதாநாயகனாகவும், சோபன்பாபு இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்திருந்தனர்.

    சோபன்பாபு வேடத்தை எனக்குத் தருவதாக எம்.ஜி.ஆர். சொன்னார்.

    "உயர்ந்த மனிதன்'' படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க இயலாமல் போய்விட்டது.''

    இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

    உயர்ந்த மனிதன் படத்தின் உச்சகட்ட காட்சி-பொய்யே பேசாத - தவறே செய்யாத சிவகுமாரை, சிவாஜி சந்தேகத்தின் பேரில் அடி அடி என்று அடித்து விரட்டி விடுவார். இறந்து போன தாயாரை (வாணிஸ்ரீ) நினைத்து அழுதுகொண்டே ரோட்டில் நடந்து வருவார், சிவகுமார்.

    அப்போது, தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும். தீப்பிழம்புக்குள் தாயாரின் உருவம் சிவகுமாருக்குத் தெரியும். "ஊரே உன்னை வெறுத்தாலும், உனக்காக நான் இருக்கிறேன். வாப்பா, வா!'' என்று அழைப்பார்.

    "அம்மா... அம்மா...!'' என்றபடி, தீக்குள் நுழைந்து விடுவார், சிவகுமார்.

    இதற்கிடையே, சிவகுமார் தன் மகன் என்பது சிவாஜிக்கு தெரிந்து விடும். மகனைத் தேடி ஓடி வருவார். தீக்குள் புகுந்து விட்ட சிவகுமாரை காப்பாற்ற அவரும் தீக்குள் நுழைந்து விடுவார்.

    இந்த "கிளைமாக்ஸ்'' காட்சியை படமாக்க 6 நாட்கள் ஆயிற்று.

    "உயர்ந்த மனிதன்'' தரத்தில் சிறந்த படமாகவும், வசூலில் வெற்றிப்படமாகவும் விளங்கியது.

    உயர்ந்த மனிதனில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் பாரதி.

    இதே ஆண்டில், மல்லியம் ராஜகோபால் எழுதி, இயக்கி, தயாரித்த "ஜீவனாம்சம்'' படத்தில் சிவகுமார் நடித்தார். இந்தப் படத்தில்தான் நடிகை லட்சுமி அறிமுகமானார். ஜெய்சங்கரின் தங்கையாக லட்சுமி நடித்தார். சிவகுமார்தான் அவருக்கு ஜோடி.

    ஜீவனாம்சம் வரை சிவகுமார் 12 படங்களில் நடித்திருந்தார். இதற்கு முன் நடித்த படங்களில், பெரும்பாலும் சிவகுமாரை விட மூத்த நடிகைகளான தேவிகா, காஞ்சனா, புஷ்பலதா போன்றோர்தான் அவருக்கு ஜோடியாக நடித்தனர். அவர் வயதுக்கும், தோற்றத்துக்கும் ஏற்ற இளம் பெண்ணாக முதன் முதலில் நடித்தவர் லட்சுமிதான். இந்த ஜோடிக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.

    இதன்பின் ஜெயகாந்தன் எழுதிய கதையான "காவல் தெய்வ''த்திலும் சிவகுமாரும், லட்சுமியும் இணைந்து நடித்தனர்.

    இப்படத்தில், சாமுண்டி கிராமணி என்ற மாறுபட்ட குணச்சித்ர வேடத்தில் சிவாஜி நடித்திருந்தார்.

    Next Story
    ×