search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளி"

    • மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்றது
    • மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 952 என 37,358 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை முதல் ஜூன் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதையடுத்து மாறுதல் பெற விருப்பமுள்ள ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.

    அதன்படி மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் இதுவரை 63,433 ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்து உள்ளனர்.

    தொடக்க கல்வி துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 14,078 பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 7,106, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 4,309, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 822 என 26,075 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளது.

    இதே போல் பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 719, பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 20,466, முதுநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 14,308, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 913, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 952 என 37,358 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    அதன்படி ஒட்டுமொத்தமாக 63,433 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது 90 சதவீத ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை வெகுவாக பாதிக்கும் என ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஆனாலும் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு முன்பு கலந்தாய்வு நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    • 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு அரசு விளக்கம் தர வேண்டும்.
    • மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடாமல் தேர்ச்சி பெற்றவர் பட்டியலை மட்டும் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை அரசு 3 ஆண்டாக ஜி.எஸ்.டி. உட்பட வரிகள் மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் வேதனையாக உள்ளது. வீதிகள் தோறும் ரெஸ்டோ பார்களை திறப்பது சமுதாய சீரழிவை உண்டாக்குகிறது. போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். போதைப் பொருட்களை தடுக்க சிறப்பு காவல்பிரிவு அமைக்க வேண்டும்.

    12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு அரசு விளக்கம் தர வேண்டும்.

    சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தால் அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். இதனால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைகிறது. இதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவையில் பணிபுரியும் யூ.டி.சி.க்களுக்கு பதவி உயர்வு வழங்க உதவியாளர் பணிக்கு துறை சார்ந்த தேர்வு நடத்தப்பட்டது. இதன் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடாமல் தேர்ச்சி பெற்றவர் பட்டியலை மட்டும் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    10 ஆண்டுக்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் தேர்ச்சி பெறவில்லை. எனவே மதிப்பெண் பட்டியல், விடைத்தாளர் வெளியிட்டு தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் சி.பி.ஐ. வசம் புகார் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1-ந்தேதி தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
    • இந்த எண்ணிக்கையை மே இரண்டாவது வாரத்துக்குள் 4 லட்சமாக உயா்த்தத் தேவையான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாணவா்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள், உயா்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000 ஊக்கத்தொகை, இந்த ஆண்டு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாணவா்களுக்கான ஊக்கத்தொகை திட்டம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1-ந்தேதி தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தீவிர முயற்சிகள் காரணமாக அரசு பள்ளிகளில் புதிய மாணவா் சோ்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அரசுப் பள்ளிகளில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 940 மாணவா்கள் சோ்ந்துள்ளனா் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த எண்ணிக்கையை மே இரண்டாவது வாரத்துக்குள் 4 லட்சமாக உயா்த்தத் தேவையான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
    • கல்வி மாவட்டம் வாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    பொதுத் தோ்வுகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயிற்சி வகுப்புகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 5-ந்தேதி நடை பெறவுள்ளது.

    இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 969 மாணவா்களும், சென்னையில் 827 மாணவா்களும், திருவண்ணாமலை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தலா 730 மாணவா்களும் விண்ணப்பித்துள்ளனா்.

    அவா்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு நேரடியாக நடைபெற்று வருகிறது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் பயிற்சிகளை வழங்குவதற்காக இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பாடங்களிலும் சிறந்து விளங்கும் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சுழற்சி முறையில் பாடங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மையங்களிலும் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளின் போது காலை சிற்றுண்டி, தேநீா் மற்றும் மதிய உணவு மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. பயிற்சி மையங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்புதல் தோ்வுகளும், வாராந்திரத் தோ்வுகளும் நடைபெறுகின்றன.

    • 2-ம் வகுப்பு மாணவி அ.சாரா, 4-ம் வகுப்பு மாணவி கு.ஹரிதா இருவரும் அவரவர் வகுப்பில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தனர்.
    • மாணவிகள் சாரா, ஹரிதா இருவரும் முறையே 2 மற்றும் 4-ம் வகுப்பில் இரண்டாம் பரிசு வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

    திருவள்ளூர்:

    ஆங்கிலத்தில் படித்தல், உச்சரித்தல், பொருள் கூறுதல் தொடர்பாக 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2023–24ம் ஆண்டிற்கான மாநில மற்றும் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சி அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 2-ம் வகுப்பு மாணவி அ.சாரா, 4-ம் வகுப்பு மாணவி கு.ஹரிதா ஆகிய இருவரும் அவரவர் வகுப்பில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தனர்.

    தேசிய அளவிலான போட்டியில் தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்த 2 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் 64 மாணவ-மாணவியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெற்றனர்.

    இதில் மாணவிகள் சாரா, ஹரிதா இருவரும் முறையே 2 மற்றும் 4-ம் வகுப்பில் இரண்டாம் பரிசு வெள்ளிப்பதக்கம் வென்றனர். அரசு பள்ளியில் படித்த மாணவிகள் ஆங்கிலத்தில் தேசிய அளவில் அசத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,233 பேர் சேர்ந்து முதலிடத்தில் உள்ளது.
    • 23-ந் தேதி ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெறுவதால் அதற்கு முன்னதாக மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி முடிக்க கல்வித்துறை முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    2024-2025-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1-ந்தேதி பள்ளி கல்வித்துறை தொடங்கியது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5.5 லட்சம் மாணவ-மாணவிகளை சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அங்கன்வாடி மையங்களில் 5 வயது உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிகளில் சேர்க்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    வருகிற 12-ந் தேதிக்கு முன் 4 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து பணிபுரிய வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.

    மாணவர்கள் சேர்க்கை விவரங்களை உடனுக்குடன் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (எமிஸ்) இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் நேற்று வரை நடந்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,233 பேர் சேர்ந்து முதலிடத்தில் உள்ளது. கள்ளக்குறிச்சி 16,938 பேரும், கிருஷ்ணகிரியில் 13,205 பேரும் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர். 23-ந் தேதி ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெறுவதால் அதற்கு முன்னதாக மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி முடிக்க கல்வித்துறை முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் எம்.பழனிசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    இதற்கு வருகிற 23-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் மே 22-ந் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 22-ந்தேதி முதல் மே 22-ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    • ஆசிரியை வகுப்பறைக்கு வருவதற்கு முன்பாக ஹேப்பி பர்த்டே மேடம் என பெயர் பலகையில் எழுதி வரவேற்பு அளித்தனர்.
    • ஆசிரியை மெய்மறந்து குத்து பாட்டுக்கு ஏற்றார்போல் நடனம் ஆடினார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் உள்ள அரசு பள்ளியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஆசிரியை வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் மாணவர்கள் ஆசிரியையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகளை செய்தனர்.

    காலை ஆசிரியை வகுப்பறைக்கு வருவதற்கு முன்பாக ஹேப்பி பர்த்டே மேடம் என பெயர் பலகையில் எழுதி வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் வகுப்பறையில் பிறந்தநாள் கேக் வெட்டி ஆசிரியைக்கு ஊட்டினர். தங்களது செல்போனில் இந்தி படத்தில் இருந்து குத்துபாட்டை ஒலி பரப்பினர்.

    அப்போது ஆசிரியை மெய்மறந்து குத்து பாட்டுக்கு ஏற்றார்போல் நடனம் ஆடினார். மாணவர் ஒருவர் ஆசிரியையின் சேலை முந்தானையை எடுத்து அவரது முகத்தை மூடியபடி நடனம் ஆடினார்.

    இந்த காட்சிகளை வகுப்பறையில் உள்ள மாணவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

    ஆசிரியையின் நடனத்தை பார்த்த பலரும் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுவது தவறில்லை. ஆனால் வகுப்பறையில் நடனம் ஆடியதால் அவர் ஆசிரியையாக இருப்பதற்கு தகுதியற்றவர் எனவும், ஆசிரியை வகுப்பறையில் நடனம் ஆடியது தவறில்லை எனவும் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க தவமாய் கிடக்கிறார்கள்.
    • 6-ம் வகுப்பில் மொத்தம் உள்ள 600 இடங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி உள்ளது. வருகிற 2024-25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் முதல் வகுப்பு, 6-ம் வகுப்புகளில் அதிகளவில் சேர்த்து வருகின்றனர். 5 நாட்களில் 60 ஆயிரம் பேர் சேர்ந்து உள்ளனர்.

    இந்நிலையில் சென்னையில் அசோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க ஆர்வத்துடன் பெற்றோர் குவிகிறார்கள். இந்த பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவதால் எவ்வித செலவும் இல்லாமல் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புகின்றனர்.

    குறிப்பாக 6-ம் வகுப்பில் சேர்க்க அலைமோதுகிறார்கள். விண்ணப்பம் கொடுக்க தொடங்கிய முதல் நாளில் பெற்றோர் குவியத் தொடங்கினர்.

    ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க தவமாய் கிடக்கிறார்கள். விண்ணப்ம் வாங் குவதற்கு நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

    6-ம் வகுப்பில் மொத்தம் உள்ள 600 இடங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின.

    இது குறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், அசோக் நகர் மேல் நிலை பள்ளியில் குறிப்பாக 6-ம் வகுப்பில் அதிக மாணவர் சேர்க்கை நடப்பது வழக்கம். அப் பகுதியில் உள்ள மெட்ரிக் குலேஷன், தனியார் பள்ளிகளில் படிப்பை பாதியில் விட்டு விட்டு மாணவர்கள் இங்கு சேருகின்றனர் என்றார்.

    இந்த பள்ளியில் 4500 மாணவர்கள் படித்து வருகின்றனர். 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவிகள் முழு அளவில் தேர்ச்சி பெறுவதால் பெற்றோர்கள் இந்த பள்ளியில் சேர்க்க ஆர்வமாக உள்ளனர்.

    அரசு பள்ளிகள் என்றாலே தரம் இருக்காது, கட்டமைப்பு வசதி இருக்காது என்ற பொதுவான பார்வைக்கு மத்தியில் அசோக்நகர் அரசு மகளிர் பள்ளி மட்டும் தனித்துவமாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் அலைந்து திரிகிறார்கள்.

    • சேலம் மற்றும் மதுரையில் அரசு பள்ளிகளில் சேர அதிகம் பேர் ஆர்வம் காட்டினார்கள்.
    • சென்னையை பொருத்தவரை 13,135 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்காக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர் சேர்க்கை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 1-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்மூலம் கடந்த 1-ந்தேதி முதல் அரசு பள்ளிகளில் 2024-2025-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக பள்ளிகளை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை மையமாக வைத்து இந்த பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது.

    இதன்மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் மட்டும் 3.31 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். சேலம் மற்றும் மதுரையில் அரசு பள்ளிகளில் சேர அதிகம் பேர் ஆர்வம் காட்டினார்கள். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் மட்டும் அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 19,242 மாணவர்கள் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.

    இதையடுத்து மதுரையில் 18,127 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். திண்டுக்கல்லில் 17,036 மாணவர்களும், திருவள்ளூரில் 15,207 மாணவர்களும், திருவண்ணாமலையில் 13,679 மாணவர்களும், திருப்பூரில் 13,204 மாணவர்களும் அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்துள்ளனர்.

    சென்னையை பொருத்தவரை 13,135 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். சென்னை மாதவரத்தில் 1,568 மாணவர்களும், சிந்தாதிரிப்பேட்டையில் 1,058 மாணவர்களும், ஆலந்தூரில் 1,220 மாணவர்களும், ராயபுரத்தில் 1,298 மாணவர்களும் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    • நியூட்டன் விதி சார்ந்த கேள்விகளை கேட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நியூட்டனின் 3 விதிகளையும் படித்து காட்டினார்.
    • கலெக்டரே ஆசிரியராக மாறி பாடம் நடத்தியதால் மாணவ-மாணவிகளும் உற்சாகமாக பாடங்களை கவனித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட செல்லும் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் இருந்தால் உடனடியாக அங்கு சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடுவது வழக்கம்.

    அதன்படி நேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பெருந்துறை பெரியவீரசங்கிலி ஊராட்சிக்கு சென்றார். கைக்கோளபாளையத்தில் உள்ள பெரியவீரசங்கிலி அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிய கழிவறை கட்டும் பணியை பார்வையிட்டார். அப்போது மாணவ-மாணவிகளை பார்த்ததும் உற்சாகம் அடைந்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழக்கம்போல அவர்களுடன் கலந்துரையாடினார்.

    மேலும் 10-ம் வகுப்பு அறைக்கு கலெக்டர் சென்றபோது, மாணவ-மாணவிகள் படித்துக்கொண்டு இருந்தனர். அங்கு ஒரு புத்தகத்தை வாங்கிய அவர், அவர்கள் படித்துக்கொண்டு இருந்த அறிவியல் பாடம் தொடர்பாக கேள்விகள் கேட்டார். மாணவ-மாணவிகளும் உற்சாகமாக பதில் அளித்தனர்.

    அப்போது நியூட்டன் விதி சார்ந்த கேள்விகளை கேட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நியூட்டனின் 3 விதிகளையும் படித்து காட்டினார். மேலும் சிறிது நேரம் பாடம் நடத்தினார். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதை மாணவ-மாணவிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு பாட்டில் எடுத்து அதை மேஜையில் உருட்டி செய்முறை விளக்கமும் அளித்தார். கலெக்டரே ஆசிரியராக மாறி பாடம் நடத்தியதால் மாணவ-மாணவிகளும் உற்சாகமாக பாடங்களை கவனித்தனர்.

    • நான் இங்கு படித்து தற்போது பொள்ளாச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன்.
    • நாங்கள் படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் பிரம்பில் அடி வாங்கியது மறக்க முடியாத அனுபவம்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி கோட்டூர் மலையாண்டிபட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அதே பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் ஓன்றுகூடி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நடராஜன் பேசுகையில், எனக்கு தற்போது 88 வயது ஆகிறது. இந்த பள்ளியில் 1983-86ம் ஆண்டுவரை படித்த மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. அன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் மிகுந்த கண்டிப்புடன் மாணவர்களை வழிநடத்துவர். எங்களிடம் படித்து முடித்து உயர் பதவிகளை வகிக்கும் மாணவர்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கூறினர்.

    ஆசிரியர் செல்வி கூறுகையில், நான் இங்கு படித்து தற்போது பொள்ளாச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன். என்னுடன் இதே பள்ளியில் படித்த நண்பர்களை சந்திப்பது உற்சாகம் தருகிறது என தெரிவித்தார். நாங்கள் படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் பிரம்பில் அடி வாங்கியது மறக்க முடியாத அனுபவம் என நினைவலைகளை பகிர்ந்து கொண்ட மயூரா சுப்பிரமணியம், முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு வந்திருந்த அதே ஆசிரியரிடம் பிரம்பை கொடுத்து அடிக்கும்படி கூறினார். இதற்கு முதலில் மறுத்த ஆசிரியர் பின்னர் செல்லமாக பிரம்பால் ஒரு அடி கொடுத்தார். இது அங்கு வந்திருந்த முன்னாள் மாணவ-மாணவிகள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    • திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.
    • வாரத்தில் ஏதேனும் 2 நாட்கள் மாலையில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பிஸ்கெட் அல்லது கேக் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    வருகிற 14-ந் தேதி இந்த திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.

    இது சம்பந்தமாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், சீருடை ஆகியவற்றை வழங்குகிறோம். நின்றுபோன இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தையும் தற்போது தொடங்கியுள்ளோம்.

    பிரதமர் இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளார்.

    அதன்படி பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய உணவினை வழங்க உள்ளோம். மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வருகிற 14-ந் தேதி தொடங்க உள்ளோம்.

    இந்த திட்டத்தை காட்டேரிக் குப்பம் அரசுப்பள்ளியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.

    இந்த திட்டத்தின்படி வாரத்தில் ஏதேனும் 2 நாட்கள் மாலையில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பிஸ்கெட் அல்லது கேக் வழங்கப்படும்.

    சுமார் 20 கிராம் எடையில் இருக்கும். பள்ளிக்கூடம் முடிந்து மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு செல்லும்போது சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 84 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவர். இதன்மூலம் 4 மாதத்துக்கு அரசுக்கு ரூ.90 லட்சம் கூடுதல் செலவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×