search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டபோது 4 கோடி ரூபாய் சிக்கியது.
    • 4 கோடி ரூபாயும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தம் என பிடிப்பட்டவர்கள் கூறியதாக தகவல் வெளியானது.

    தமிழகத்தில கடந்த 19-ந்தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. அதற்கு முன்னதாக கடந்த 6-ந்தேதி சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட ரெயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் பறக்கும்படை அதிகாரிகள் ரெயிலில் சோதனை நடத்தினர்.

    அப்போது பணத்துடன் 3 பேர் சிக்கினர். அவர்கள் கொண்டு செல்ல முயன்ற 4 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பணம் பறிமுதல் செய்யப்பட்டபோது பிடிப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் திருநெல்வேலி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனத் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

    அதேவேளையில் நயினார் நாகேந்திரன், அது தனது பணம் இல்லை எனக் கூறினார். இது தொடர்பாக விசாரணை நடத்தி நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். காலஅவகாசம் கேட்டு, அவர் நேரில் ஆஜராகவில்லை. 2-வது முறையாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாம்பாரம் போலீசார் நாளை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உள்ளனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று முதல்முதல் 29-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    30.04.2024 மற்றும் 01.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

    26.04.2024 முதல் 30.04.2024 வரை தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

    வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39°-42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-39° செல்சியஸ் இருக்கக்கூடும்.

    ஈர்ப்பதம்:

    26.04.2024 முதல் 30.04.2024 : காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.

    வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

    26.04.2024 முதல் 30.04.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

    இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம் தேர்தலையொட்டி பூட்டப்பட்டிருந்தது.
    • தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இ-மெயில் மூலம் இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தி முடிக்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம் தேர்தலையொட்டி பூட்டப்பட்டிருந்தது.

    தேர்தல் அட்டவணை வெளியான மார்ச் 16-ந்தேதி முதல் மாவட்ட கலெக்ர்கள் இவற்றை பூட்ட உத்தரவிட்டனர். அதன்படி இன்னும் இந்த அலுவலகங்கள் பூட்டப்பட்டு கிடக்கிறது. நகராட்சித் தலைவர் அலுவலகம் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்ட தனி அலுவலகங்களும் பூட்டியே கிடக்கிறது.

    தற்போது தேர்தல் முடிந்து 1 வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்றுவதற்காக எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறந்து விட வேண்டும் என்று 234 தொகுதியிலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இ-மெயில் மூலம் இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஓரிரு நாளில் இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • குடிநீர் தொட்டியில் இருந்த மாட்டு சாணத்தை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
    • மாட்டுசாணம் தானா என உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்களிடம் உறுதியளித்து விசாரித்து வருகின்றனர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே மீண்டும் அப்படியொரு சம்பவம் அதே புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சியில் குருவண்டான் தெருவில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது.

    இங்கிருந்து ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு திடீரென வயிறு வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இப்படி அடுத்தடுத்து பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தண்ணீர் தொட்டியில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ எனக் கருதிய அப்பகுதி இளைஞர்கள், தண்ணீர் தொட்டிக்கு மேலே ஏறிப் பார்த்துள்ளனர்.

    அப்போது தொட்டிக்குள் மாட்டுசாணம் இருந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள், குடிநீர் தொட்டியில் இருந்த மாட்டு சாணத்தை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மாட்டுசாணம் தானா என உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்களிடம் உறுதியளித்து விசாரித்து வருகின்றனர்.

    தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து குடிநீர் விநியோகம் செய்ய ஆணையர் உத்தரவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்தி கார்த்திகேயன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராகவியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

    • சமீபத்தில், ஐ.பி.எல். டிக்கெட்களை கள்ள சந்தையில் விற்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • கள்ள சந்தையில் டிக்கெட்கள் விற்பனை செய்வது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்கு எதிராக அளித்த புகார் மனுவை பரிசீலிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சத்திய பிரகாஷ் தாக்கல் செய்த மனுவில், "சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை காண நியாயமான கட்டணத்தில் டிக்கெட் பெறுவது இமாலய இலக்காக உள்ளது.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ஆன்லைன் மூலம் டிக்கெட்களை விற்கிறது. ஆனால் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே டிக்கெட்கள் விற்று தீர்ந்து விடுகின்றன. சில சமூக விரோதிகள், டிக்கெட்களை மொத்தமாக வாங்கி, அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கின்றனர்.

    குறைந்த கட்டண டிக்கெட்கள் கூட, 14 ஆயிரம் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. டிக்கெட்டுகளை வாங்கி அதிக விலைக்கு விற்பதன் பின்னணியில், மாபியா கும்பல் இயங்கி வருகிறது.

    சமீபத்தில், ஐ.பி.எல். டிக்கெட்களை கள்ள சந்தையில் விற்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்களும், 31 ஆயிரத்து 500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதனால், இந்த மாபியா கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், விதிகளை மீறி செயல்படும் சேப்பாக்கம் மைதான அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கள்ள சந்தையில் டிக்கெட்கள் விற்பனை செய்வது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, விளையாட்டு போட்டிகள் முடியும் நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் உத்தரவிட்டனர்.

    • பர்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
    • 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும்.

    தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 26ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதவாது

    மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும்.

    வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ்) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராய சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.

    பர்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.

    தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம்.

    சிஐடி நகர் 1வது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்.

    தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டனாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்

    வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தேடி வந்த நிலையில் 10 நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை வனத்துறையினர் வசம் சிக்கவில்லை.
    • சிறுத்தையை பிடிக்க மீண்டும் மயிலாடுதுறை பகுதியில் 3 கூண்டுகள், 10 கண்காணிப்பு கேமராக்களுடன் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தேடி வந்த நிலையில் 10 நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை வனத்துறையினர் வசம் சிக்கவில்லை.

    இந்நிலையில் கடந்த 11-ம் தேதி சிறுத்தை ஒன்று அரியலூர் மாவட்டத்தில் சுற்றி திரிந்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்தது. மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை நீர் வழி பாதை வழியாக அரியலூர் மாவட்டம் சென்று இருக்கலாம் என்று வனத்துறை தெரிவித்து 2 நாட்கள் தொடர் கண்காணிப்புக்கு பிறகு தனது தேடுதல் வேட்டையை மயிலாடுதுறை மாவட்டத்தில் நிறுத்தியது.

    இந்நிலையில் ஏற்கனவே சிறுத்தை ஆட்டை அடித்து கொன்ற மயிலாடுதுறை புறநகர் பகுதியான சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை பகுதியில் சிறுத்தை தென்பட்டதாகவும் அது தன்னை விரட்டி வந்த நாய்களில், ஒரு நாயை தூக்கி செல்லும் பொழுது நாய்கள் சேர்ந்து சிறுத்தையை விரட்டியதாகவும் நேற்று முன்தினம் இரவு கட்டுமான தொழிலாளி ஒருவர் வனத்துறையினரிடம் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள காலடி தடயங்களை ஆய்வு செய்தனர். இதில் சற்று பெரிதான காலடி தடம் ஒன்றை கண்டுபிடித்து அதனை சுற்றி அடையாளம் காண, சுன்னாம் பால் வட்டம் வரைந்து மூடி, பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    இதனால் சிறுத்தை அரியலூரில் இருந்து மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்ததா? என குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிறுத்தை வந்ததற்கான எந்த தடயமும் இல்லை. இருந்தாலும் சிறுத்தையை பிடிக்க மீண்டும் மயிலாடுதுறை பகுதியில் 3 கூண்டுகள், 10 கண்காணிப்பு கேமராக்களுடன் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    • பெருமாள் 10 அவதாரங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
    • விடிய விடிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதனை முன்னிட்டு சவுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் திண்டுக்கல் நோக்கி புறப்பட்டார்.

    குடகனாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள் அதனைத் தொடர்ந்து மண்டூக முனிவருக்கு சாப விமோஷனம் அளித்தார். எதிர்சேவையில் தாடிக்கொம்பு ரோடு கருப்பணசாமி கோவிலில் தங்கிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் தங்கினார். அங்கிருந்து நேற்று காலை 10 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பாடான பெருமாள் கிழக்கு ரத வீதி, தெற்குத் தெரு, மேட்டுப்பட்டி, பெரியகடை வீதி, மேற்கு ரத வீதி, மதுரை ரோடு, மெயின் ரோடு வழியாக வெள்ளை விநாயகர் கோவில் அருகே உள்ள தனியார் மஹாலுக்கு வந்தடைந்தார்.

    அங்கு சவுராஷ்டிர மகாஜன சபையினரின் மண்டகப்படி நடைபெற்றது. இதில் பெருமாள் மச்ச அவதாரம், கூர்மம், வராக, நரசிம்ம, வாமண, ராமர், பலராமர், பரசுராமர், கிருஷ்ணர் மற்றும் மோகினி என 10 அவதாரங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

    ஒவ்வொரு அலங்காரத்திலும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. விடிய விடிய காத்திருந்து 10 அவதாரங்களில் தோன்றிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளின் திரு அவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின் பெருமாள் தாடிக்கொம்பு சென்றடைகிறார்.

    • ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் தர வேண்டும்.
    • ஜனவரி முதல் ஏப்ரல் வரை தர வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட ஏற்பாடு செய்வதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் கடந்த 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது.

    அதன்படி நெல்லூர் அருகில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும்.

    அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் தர வேண்டும்.

    ஆனால் கடந்த ஆண்டு ஜூன் முதல் மே வரை 2½ டி.எம்.சி.கிருஷ்ணா தண்ணீர்தான் பூண்டி ஏரிக்கு கிடைத்தது. அதன் பிறகு சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு இருந்தது. இதனால் கிருஷ்ணா தண்ணீரை உடனே தருமாறு வலியுறுத்தவில்லை.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டதின் காரணமாக கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது. அதனால் கிருஷ்ணா தண்ணீர் திறப்பதை ஆந்திர அரசு நிறுத்தியது.

    இப்போது கோடை காலமாக இருப்பதால் இரு மாநிலத்திற்கும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இதன் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

    ஆனால் கண்டலேறு அணையில் இப்போது 6 டி.எம்.சி. தண்ணீர்தான் உள்ளது. (கொள்ளளவு 68 டி.எம்.சி.) இதனால் கிருஷ்ணா தண்ணீரை இப்போது திறந்துவிட இயலாது என்று தமிழக அரசு கூறி உள்ளது.

    4 மாதமாக அணை திறக்கப்படாத நிலையில் மழை பெய்யும் பட்சத்தில் ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

    அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் வரை தர வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட ஏற்பாடு செய்வதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னையை சுற்றி உள்ள ஏரிகளில் இப்போது 6.980 டி.எம்.சி. (கொள்ளளவு 13.213 டி.எம்.சி.)தண்ணீர் இருப்பு உள்ளதாகவும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் 200 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் கிடைத்து வருவதாலும் குடிநீரை கட்டுப்பாடின்றி வினியோகித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தவிர குன்றத்தூர் திரிசூலம் பகுதிகளில் உள்ள கல் குவாரிகளிலும் தேவையான அளவு தண்ணீர் இருப்பதால் அதை வைத்து குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் கோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் கோர்ட்டில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், வனபத்ர காளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்ட பாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்துள்ளதாகவும், அதனை அறங்காவலர் வசந்தா சம்பத் கவனத்திற்கு கொண்டு சென்றபோது அவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனையடுத்து கோர்ட்டு அறிவுறுத்தலின்படி மேட்டுப்பாளையம் போலீசார் வனபத்ரகாளியம்மன் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் உள்ளிட்ட 5 பேர் மீது கடந்த 3-ந் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசாரின் விசாரணையில் வனபத்ரகாளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இதில் கைது செய்யப்பட்ட கோவில் பூசாரி ரகுபதி பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் தொட ர்பாக பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் கோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    வனபத்ர காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரத்தில் 4 பூசாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 2 பேர் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
    • பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை மாணவிகள் மூலம் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 2 பேர் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை மாணவிகள் மூலம் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பாக சிறுமிகள் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த விவகாரம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்து ராஜ் கவனத்துக்கு சென்றது. உடனடியாக தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன், தாசில்தார் கோவி ந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோரை, சம்பந்தப்பட்ட குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.

    விசாரணையில் மாணவிகள் இருவரையும் பள்ளி ஆசிரியைகள் கடந்த ஒரு மாதமாக பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசு பள்ளி ஆசிரியைகள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

    • சோதனை செய்யக் கூடிய பகுதிக்கு அருகில் இருந்த ஒரு குப்பை தொட்டியை சுத்தம் செய்த போது அதில் ஒரு பார்சல் இருந்தது.
    • 1,200 கிராம் எடை உள்ள தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.75 லட்சம் என கணக்கிடப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் அதிகளவில் விமானங்கள் வருவது வழக்கம். வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பயணிகளின் உடமைகள், பாஸ்போர்ட் போன்றவற்றை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்வார்கள்.

    பரபரப்பாக காணப்படும் விமான நிலையத்தில் நேற்றிரவு தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். சோதனை செய்யக் கூடிய பகுதிக்கு அருகில் இருந்த ஒரு குப்பை தொட்டியை சுத்தம் செய்த போது அதில் ஒரு பார்சல் இருந்தது. அதனை எடுத்த ஊழியர் ஒருவர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    பின்னர் இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் தங்க கட்டிகள் இருந்தன. 1,200 கிராம் எடை உள்ள தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.75 லட்சம் என கணக்கிடப்பட்டது.

    வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த பயணி யாரோ ஒருவர் பரிசோதனையின் போது சிக்கி கொள்வோம் என பயந்து குப்பை தொட்டியில் போட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் உள்ள பதிவினை ஆய்வு செய்தனர். அதில் முகம் தெளிவாக தெரியவில்லை. அதனை தொடர்ந்து மற்ற கோணங்களில் பதிவான கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×